ஞாயிறு, 30 அக்டோபர், 2022

வடமொழி - தமிழ்மொழி ஒப்பீடு . . . ஒரு தவறான அணுகுமுறை!

 வடமொழி - தமிழ்மொழி ஒப்பீடு . . . ஒரு தவறான அணுகுமுறை!

--------------------------------------------------------------------------
பேராசிரியர் மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் தனது முகநூலில் இட்டுள்ள ஒரு பதிவையொட்டி எனது கருத்தை இங்கு முன்வைக்கிறேன்! அவருடைய கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு. அத்தோடு மேலும் சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்.
பல்கலைக்கழக நல்கைக்குழுவின் வடமொழிபற்றிக் குறித்த கருத்து மொழியியல் அடிப்படையில் மிக மிகத் தவறான கருத்து. மற்ற மொழிகள்போல் வடமொழி இல்லாததற்குக் காரணம் . . . அது என்றுமே மக்கள் வழங்கும் மொழியாக. . . . மக்களது அன்றாட வாழ்க்கைக்கான மொழியாக இல்லாமல் . . . வேதங்களுக்கான மொழியாக மட்டுமே . . . வேதங்களை ஓதுவதற்கான மொழியாக . . . வேத வாய்மொழியாகமட்டுமே நீடித்துள்ளது. அதையொட்டி உயர்வர்க்கத்திற்கான இலக்கியம், தத்துவம் போன்ற சில துறைகளிலும் பயன்படும் மொழியாக நீடித்தது!
மேலும் கூறப்போனால் ஒருவகையான செயற்கைமொழி. மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக நீடித்த மொழி இல்லை!
ஆனால் இவ்வாறு நான் கூறுவதால், அது தாழ்ந்த மொழி என்று கொள்ளக்கூடாது. அது எதற்காக நீடித்ததோ, அதற்கு உண்மையில் நன்கு பயன்பட்டுள்ளது. இன்று நீடிக்கிற செயற்கைமொழியான எஸ்பெரண்டோ . . . அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு நன்கு பயன்படுகிறது. அதுபோல்தான் வடமொழி!
தமிழ்மொழியின் நீடிப்புக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை, அது மக்கள் மொழியாக . . . பொருளாதார, வணிகம் போன்ற அடிப்படைச் சமுதாயத் தளங்களில் பயன்படும் மொழியாக . . . அன்றாட வழக்கிற்கான மொழியாக நீடித்துவருகிறது;
மேலும் அத்தோடு அது இலக்கியம், தத்துவம் போன்ற பிற படைப்புத்திறம், அறிவுத்திறம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான செயல்பாடுகளையும் அது மேற்கொண்டது.
எனவே தேவையில்லாமல், வடமொழியையும் தமிழ்போன்ற மக்கள் மொழிகளையும் ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் கருத்துக்களைப் பல்கலைக்கழக நல்கைக்குழு போன்ற நிறுவனங்கள் முன்வைப்பது சரியில்லை என்பது எனது கருத்து.
எனவே வடமொழியே உலகில் நிலவும் பிற அனைத்துமொழிகளின் தாய் என்று என்று கூறுவது எந்தவகையிலும் சரியில்லை! இந்தத் ''தாய்க்கும்'' பிற மக்கள் மொழிகளுக்கும் எந்தவிதத் ''தொப்புள்கொடி உறவும்'' கிடையாது!
என்னுடைய கருத்து. . . வடமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டாம். அதற்குத் தேவையில்லை! வடமொழியின் தளம் வேறு! தமிழ்மொழியின் தளம் வேறு!
மேற்கூறியது எனது கருதுகோளே!

"மூலமொழி'' ''மூல இனம்'' கோட்பாடுகள்பற்றி எனது கருத்துக்கள். . .

 "மூலமொழி'' ''மூல இனம்'' கோட்பாடுகள்பற்றி எனது கருத்துக்கள். . .

----------------------------------------------------------------------
''மூலமொழி (Proto-language) '' என்ற கோட்பாடு , மொழிகளில் நிலவும் ஒற்றுமைக்கூறுகளை - குறிப்பாக, ஒலியியல் (phonetic) , ஒலியனியல் (Phonemic) கூறுகளை - ஒன்று திரட்டி, அவற்றிலிருந்து ''மூலச் சொற்களை (Proto-forms) '' அமைத்துக்காட்டும் ஒரு ஆய்வுமுறை. இதன் முடிவுகள் கருதுகோள்களாகத்தான் (Hypothesis) இருக்கமுடியும். தொல்வரலாறு (Archeology, Ancient History) , மானிடவியல் (Anthropology) போன்ற பிற துறை கண்டுபிடிப்புக்களும் நமக்குத் தேவை.
இல்லையென்றால், ''மூல மொழிகள்'' ஆய்வை . . . ''மூல இனங்கள் ("Primitive Races") '' என்ற நிலைக்கு எடுத்துச்சென்று , சமுதாயப் போராட்டங்களில் சரியான ஒரு நிலைபாடு எடுப்பதில் குழப்பத்தைத்தான் உருவாக்கும். உண்மையான தேசிய இனங்கள் (Nationalities) இன அடிப்படையில் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்தும். இதைத்தான் நான் கூற வருகிறேன்.
''தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தின்'' இன்றைய பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணம்!
''மூலமொழி '' என்ற ஒப்பீட்டுமொழியியலே (Comparative Linguistics) வேண்டாம் என்று நான் கூறவரவில்லை! ஒப்பீட்டுமொழியியல், வரலாற்றுமொழியியல் (Historical Linguistics) , மானிடவியல்மொழியியல் ( Anthropological Linguistics) போன்ற பல துறை அறிவுகளும் இணைந்துசெயல்படவேண்டும்.
''மூலமொழி'' கோட்பாடும் ''மூல இனம்'' கோட்பாடும் ஆய்வுக்கு உரியவை என்பதே எனது கருத்து.
----------------------------------------------------------------------------------------------
"மூலமொழி'' ''மொழிக்குடும்பம்''பற்றிய ஆய்வுகள், அவற்றின் கருதுகோள்கள் ஆகியவற்றையும் . . . இன்றைய தேவையான தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தையும் நான் வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கிறேன். முதல் ஆய்வுகள் . . . மொழிகள்பற்றிய ஒப்பீட்டுமொழியியல் கருதுகோள்கள்! அவை கருதுகோள் தகுதியிலிருந்து புறவய உண்மைகளாக எதிர்காலத்தில் மாறலாம்! இரண்டாவதான தேசிய இனத்தின் போராட்டம் என்பது இன்றைக்குத் தேவையான அரசியல் தளச் செயற்பாடுகள்! தேசிய இனங்களின் தன்னுரிமைகளுக்கான போராட்டங்கள்! இரண்டையும் இணைத்து நாம் குழம்பிவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
-----------------------------------------------------------------------------------------

சொற்பிறப்பியல் அறிஞர் திரு. இராமகி ஐயா அவர்களின் கருத்து . . .

 சொற்பிறப்பியல் அறிஞர் திரு. இராமகி ஐயா அவர்களின் கருத்து . . .

------------------------------------------------------------------------
வெறும் உணர்விலிருந்து இல்லாமல் . . . அறிவியல் ஆய்வின் அடிப்படையில் மூல-திராவிடம் என்பது ஒரு ஏமாற்று என்ற கருத்தை திரு. இராமகி அவர்கள் முன்வைக்கிறார். மேலும் வரலாற்றுமொழியியல் ஆய்வு தேவை என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்மொழியின் தொன்மைபற்றியும் ஒரு கருத்தை முன்வைக்கிறார். இரண்டிலும் எனக்கு உடன்பாடே!
ஒரு இனம் தன் இனத்தின் உரிமைகளைத் தக்க வைக்கவும் தன் இனத்தின்மீதான பிற இனங்களின் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடுவதிலும் இன உணர்வு முதன்மையானது; தேவையானது.
அதேவேளையில் இன வரலாறு, மொழி வரலாறு ஆகியவற்றில் புறவயமான உண்மைகளைக் கண்டறிய அறிவியல் அடிப்படை தேவை . . . வெறும் உணர்வுமட்டுமே போதாது . . . என்பதை திரு. இராமகி வற்புறுத்துகிறார். மிகச் சரியான ஒரு நிலைபாடு!
// ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரை ஒட்டியே, தென்னிந்தியா, தென்கிழக்கு ஆசியா வழி ஆத்திரேலியா சென்ற பழங்குடிகள் (இவரை நான் நெய்தலார் என்பேன் Spenser wells இவரைக் coastal people என்பார்) நகர்ந்துபோன வழியில் தான் தமிழ்நாட்டில் ஒரு சாரார் தங்கி தமிழ் எனும் மொழி எழுந்திருக்க முடியும். என் ஆய்வுப் பார்வையில், தமிழ் என்பது உலக முதன் மொழியாய் இருக்கப் பெரிதும் வாய்ப்பில்லை. ஆனால் மிகமிகப் பழமையான மொழியாக அது கட்டாயம் இருந்திருக்கும். (4500 ஆண்டு Proto- Dravidian என்ற கருதுகோளை நான் நம்பவில்லை.. அது ஒரு ஏமாற்று.) நம்மூரில் உள்ள வரலாற்று மொழியியல் ஆய்வாளரில் நாலைந்து பேராவது அடுத்த பத்தாண்டுகளில் இதை ஆய்வார் ஆகுக. //
----------------------------------------------------------------------------------------
''மூலதிராவிடம் என்று ஒன்று இருந்தது '' என்ற கருதுகோளை ''மெய்ப்பிக்கப்பட்ட ஒரு புறவய உண்மை'' என்று ஏற்றுக்கொண்டு , அதை அடிப்படையாகக்கொண்டுதான் இங்கு ஒப்பீட்டுமொழியியல், வரலாற்று மொழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அது ஒரு கருதுகோளே; மேலும் அதுபற்றி ஆய்வுசெய்யவேண்டும் என்ற அடிப்படையில் இங்கு ஆய்வுகள் நடைபெறுவதில்லை என்பது உண்மை. அதுபோன்ற ஆய்வுகள் நடைபெறவேண்டும். ''மூல திராவிடம்'' என்பதை ஏற்றுக்கொண்டே . . . அதிலிருந்தே . . . மொழி ஆய்வுகள் இங்கு நடைபெறுகின்றன.
--------------------------------------------------------------------------------------------------

நண்பர் மணி மணிவண்ணன் அவர்களே. ''மூலமொழி'' என்ற கோட்பாடு , மொழிகளில் நிலவும் ஒற்றுமைக்கூறுகளை - குறிப்பாக, ஒலியியல் (phonetic) , ஒலியனியல் (Phonemic) கூறுகளை - ஒன்று திரட்டி, அவற்றிலிருந்து ''மூலச் சொற்களை (Proto-forms) '' அமைத்துக்காட்டும் ஒரு ஆய்வுமுறை. இதன் முடிவுகள் கருதுகோள்களாகத்தான் (Hypothesis) இருக்கமுடியும். தொல்வரலாறு (Archeology, Ancient History) , மானிடவியல் (Anthropology) போன்ற பிற துறை கண்டுபிடிப்புக்களும் நமக்குத் தேவை.
இல்லையென்றால், ''மூல மொழிகள்'' ஆய்வை . . . ''மூல இனங்கள் ("Primitive Races") '' என்ற நிலைக்கு எடுத்துச்சென்று , சமுதாயப் போராட்டங்களில் சரியான ஒரு நிலைபாடு எடுப்பதில் குழப்பத்தைத்தான் உருவாக்கும். உண்மையான தேசிய இனங்கள் (Nationalities) இன அடிப்படையில் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்தும். இதைத்தான் நான் கூற வருகிறேன்.
''மூலமொழி '' என்ற ஒப்பீட்டுமொழியியலே (Comparative Linguistics) வேண்டாம் என்று நான் கூறவரவில்லை! ஒப்பீட்டுமொழியியல், வரலாற்றுமொழியியல் (Historical Linguistics) , மானிடவியல்மொழியியல் ( Anthropological Linguistics) போன்ற பல துறை அறிவுகளும் இணைந்துசெயல்படவேண்டும். தற்போது என்னுடைய ஆய்வுகள் எல்லாம் தற்காலத் தமிழைநோக்கியே இருக்கின்றன. மேற்கூறிய ஆய்வுகளில் ஈடுபடும் விருப்பம் இருப்பினும், தற்போது வாய்ப்பு எனக்கு இல்லை! ஆனால் அதற்காக தற்போதைய ஆய்வுகளைப்பற்றி மொழியியல் மாணவன், சமூகவியல் மாணவன் என்ற முறையில் சில கருத்துக்களை - ஆனால் முடிந்த முடிவுகளாக இல்லை - கூறுகிறேன்.
''மூலமொழி'' கோட்பாடும் ''மூல இனம்'' கோட்பாடும் ஆய்வுக்கு உரியவை என்பதே எனது கருத்து.
-----------------------------------------------------------------------------------------------
( திரு. மணி மணிவண்ணன்) //இன்று வாழும் எவரும் தாம் மட்டுமே "மூல இனம்" என்று சொல்லவே முடியாது. மரபணு ஆய்வுகள் நாம் எல்லோருமே கலப்பின மக்கள்தாம் என்று காட்டுகின்றன. எந்த வித மக்கள் தொடர்பும் இல்லாத, தனித்தீவில் வாழும் மக்களும் அந்த இடத்தைச் சென்று சேரும் வரைக்கும் அவர்கள் காலத்துப் பிற மக்களோடு கலந்துதான் இருக்கிறார்கள்.
அதேபோல், இன்றிருக்கும் எந்த மொழியும் எந்த மாற்றமும் இல்லாமல், எந்தக் கலப்பும் இல்லாமல் தொல்மொழியாகவே தொடரவில்லை. அதேபோல் சான்றோர் தமிழும் எந்த மாற்றமும் இல்லாமல் தொன்றுதொட்டு இருந்த மொழியல்ல. மூலமொழிதான் தமிழ் என்று மொழியியல் வல்லுனர்கள் சான்றுகளுடன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதட்டும். அதுவரை இந்தக்கூற்று உணர்ச்சி முழக்கம் மட்டுமே.//
----------------------------------------------------------------------------------------------
உண்மை நண்பரே. என் நிலைபாடும் அதுதான்! அதேவேளையில் 'இனம்' என்ற சமூகவியல் சொல்லை "race" என்று கூறுவதா? 'பழங்குடி மக்கள்தொகுதி (tribal community) " என்று சொல்வதா? அல்லது ''தேசிய இனம் (Nationality) '' என்று கொள்வதா? இதற்கான தெளிவான விடையைத் தேடவேண்டும்! தேசிய இனம் என்பது மனித சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றிய ஒரு வரலாற்று விளைபொருள் ( historical product) ! ஆனால் முதலாளித்துவ, ஏகாதிபத்திய அறிஞர்கள் முன்வைக்கிற " Race " என்பது வரலாற்று விளைபொருளாக இல்லாமல், மாந்தர் தோற்றத்திலிருந்தே உடலமைப்பு, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றி நீடிக்கிற இயற்கையான ( natural, eternal) ஒன்று - வரலாற்று விளைபொருள் இல்லை! - என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறோமா? இதுபற்றிய தெளிவு தேவைப்படுகிறது.

''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!

 ''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!

-------------------------------------------------------------------
தமிழகத்தில் நீடிக்கிற இரண்டு முதன்மையான ''மூடநம்பிக்கைகள்'' !
''அறிவுக்கு'' ஆங்கிலம்! ஆங்கிலப் பயிற்றுமொழி!
''கடவுளுக்கு'' வடமொழி! வடமொழி வழிபாட்டுமொழி!
மேற்கூறிய இரண்டின் ''தகுதிகளும்'' சட்டங்களால் கொடுக்கப்படவில்லை! திணிக்கப்படவில்லை!
பிறப்பு, இறப்பு, திருமணம், பெண்குழந்தைகளின் பருவ முதிர்ச்சி, புதுமனைபுகுவிழா, 60 அகவை நிறைவுவிழா , குடமுழுக்குவிழா . . . இவ்வாறு எந்தவொரு ''விழாவாகவும்'' இருந்தாலும் , "கடவுள்களோடு'' தொடர்பு ஏற்படுத்த . . . வடமொழி (வேதங்கள்) தேவை! மேலும் அவற்றை ஓதுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரைத்தவிர , வேறு எவருக்கும் ''உரிமை'' கிடையாது!
அதுபோன்று, பள்ளிகளில், கல்லூரிகளில், உயர் ஆய்வில் . . . ''அறிவைப்'' பெறுவதற்கு ஆங்கிலமே தேவை என்ற ஒரு நிலை!
மேற்கூறிய ''தகுதிகளை'' வடமொழிக்கும் ஆங்கிலத்திற்கும் அளிப்பதில் மக்களுக்கே பங்கு மிகுதி!
இந்திமொழி ''ஆட்சிமொழியாக'' திணிக்கப்படுவதை எதிர்த்து, அதைத் திணிக்கிற ''ஆட்சியாளர்களை'' எதிர்த்துப்போராடவேண்டியுள்ளது!
ஆனால் மேற்கூறப்பட்ட வடமொழி, ஆங்கிலமொழி இரண்டையும் நம்மீது நாமேதான் திணித்துக் கொள்கிறோம்! மொழிபற்றிய மிகப்பெரிய மூடநம்பிக்கையே இதற்கு அடிப்படை! சமுதாய அமைப்பும் சூழலும் இதற்கு அடிப்படை என்பதையும் நான் மறுக்கவில்லை!
ஆனால் இதற்கான போராட்டம் . . . யாருக்கு எதிரான, யாருடைய போராட்டம்? நமக்கு எதிராக நாமே போராடவேண்டிய போராட்டம்!
-----------------------------------------------------------------------------------------------

என்னைப் பொறுத்தவரையில் . . . இன்றைய தமிழ்மொழியானது இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு முழுமையான தகுதிபெற்ற மொழியாகவே நிலவுகிறது. அதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை!
ஆனால் அதன் செயல்பாடுகளைக் குறைக்கும்வகையில் ஆங்கில மேலாண்மையும் வடமொழி உட்பட பிறமொழிகளின் மேலாண்மையும் நீடிக்கின்றன. இது புறச்சூழல் சார்ந்த ஒரு சிக்கலாகும். இதன் விளைவாகப் பிறமொழிச்சொற்களின் மேலாண்மை தமிழ்மொழியில் நீடிக்கிறது. இச்சிக்கலைத் தீர்ப்பதில் தமிழர்களின் தாய்மொழி உணர்வும் தேவை; ஆட்சியாளர்களின் திட்டமிட்ட மொழிமேம்பாட்டுத் திட்டங்களும் தேவை; மொழிபற்றி அறிவியல் அடிப்படையான கருத்துக்களும் தேவை.
எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தத் தேவையான இலக்கண வளமும் சொல்வளமும் தமிழில் நன்றாகவே இருக்கின்றன. சொற்களஞ்சியம் மேலும் திட்டமிட்டு வளர்க்கப்படவேண்டும். தமிழ்மொழிமீது வடமொழித் தாக்கம் எனபது பல நூற்றாண்டு வரலாறு உடையது; அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற காரணிகளால் ஏற்பட்டவை இவை; ஆங்கிலத்தாக்கம், ஏனைய பிறமொழிகளின் தாக்கம் ஆகியவை கடந்த சில நூற்றாண்டுகளில் அந்நியர் படையெடுப்புக்கள், ஆட்சிகளால் ஏற்பட்டவையேயாகும்.
இவை எல்லாவற்றையும் அகற்றி, தமிழ்மொழி தனக்கே உள்ள வளர்ச்சித்தடத்தில் இயங்க . . . முன்னேறிச் செல்ல (1) மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தாய்மொழி, தன் இனமொழி என்ற உணர்வு தேவை. (2) புறத்திலும் மொழிக்குள்ளும் தமிழ்மீது நிலவுகிற அரசியல் மேலாண்மை, மொழி மேலாண்மை இரண்டும் அகற்றப்படவேண்டும்.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இலக்கியப் படைப்புக்கள் முற்றும் கற்பனைகளா?

 இலக்கியப் படைப்புக்கள் முற்றும் கற்பனைகளா?

-------------------------------------------------------------------------------------------------------
எனக்கும் இலக்கிய ஆய்வுக்கும் தொடர்பு கிடையாது! ஆனால் சமூகவியல் நோக்கில் இலக்கியங்களைப் பார்க்கும் விருப்பம் எப்போதும் எனக்கு உண்டு! அதனடிப்படையில் சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்!
நரகாசுரனைப்பற்றிய எனது முகநூல் பதிவும் அதையொட்டி இராமாயணம், மகாபாரதம்பற்றிய முகநூல் பதிவும் நண்பர்கள் பலரிடையே சிறந்த கருத்துப்பரிமாற்றத்தை உருவாக்கியுள்ளது மகிழ்வைத் தருகிறது.
நண்பர் மாலன் அவர்கள் தமிழகத்து நாட்டுப்புறவியல் தந்தையான பேராசிரியர் நா. வானமாமலை (மொழியியல் படிப்பில் நான் சேர்வதற்கு எனக்கு உதவிய . . . அவரது ஆய்வுவட்டத்தில் என்னை இணைத்துக்கொண்ட . . . எனக்குப் பலவகைகளில் உதவிசெய்த பேராசிரியர்) அவர்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, இலக்கியப்படைப்புக்களில் வரும் நாயகர்கள் வெறும் கற்பனை இல்லை . . . வரலாற்றில் இடம்பெற்றவர்களே அவ்வாறு நாட்டுப்புற இலக்கிய நாயகர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 100 % விழுக்காடு உண்மை! நான் மறுக்கவில்லை!
படைப்பிலக்கியங்களின் மையக் கருத்துக்களோ அல்லது நாயகர் - நாயகிகளோ முழுக்க முழுக்க படைப்பாளிகளின் கற்பனை இல்லை! அவ்வாறு இருக்கவும் முடியாது! அவர்கள் வாழ்ந்த அல்லது வாழுகின்ற சமுதாயத்தின் அமைப்பும் அதன் பிற பண்புகளுமே அவற்றை அடிப்படையில் தீர்மானிக்கின்றன!
புற உலகில் இல்லாத ஒன்றை . . . மனிதரால் ஐம்புலன்களால் உணராத அல்லது உணரமுடியாத ஒன்றைப் ( அப்படிப்பட்ட ஒன்று இருக்கவே முடியாது!) படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களில் கொண்டுவர முடியாது!
ஆனால் சமுதாயம் தொடர்ந்து மாறுகிறது! வளர்ச்சியடைகிறது! அதையொட்டி மனிதர்களின் சிந்தனைகளும் மாற்றமடைகின்றன . . . வளர்ச்சியடைகின்றன! படைப்பிலக்கியங்களின் தேவைகளும் மாறுகின்றன! அவற்றின் மையக் கருத்துக்களும் மாறுகின்றன! ''நாயகர் - நாயகிகளும்'' மாறுகின்றனர்!
தமிழகத்தின் இன்றைய தேவைகளுக்குச் சங்க இலக்கியம் (''வீரயுகப்பாடல்கள் அல்லது செவ்விலக்கியங்கள்'') போன்ற இலக்கியங்கள் உருவாகாது! திருக்குறள்போன்ற அற இலக்கியங்கள் உருவாகாது! சிலம்பும் மேகலையும் போன்ற காப்பியங்கள் உருவாகாது! அப்பரும் சுந்தரரும் இயற்றிய பக்தி இலக்கியங்கள் உருவாகாது!
இன்றைய கட்டத்தில் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் மாலனும்தான் இலக்கிய உலகில் நடமாடுவார்கள்! இவர்களது இலக்கியங்களில் இன்றைய சமுதாயச் சிக்கல்களும் அவற்றில் தொடர்புடைய மாந்தர்களும்தான் இருப்பார்கள்! பொன்னியின் செல்வர்களும் சீதைகளும் கண்ணகிகளும் மணிமேகலைகளும் அவற்றில் கதைமாந்தர்களாக இருக்கமாட்டார்கள்!
ஆனால் . . . இந்த எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயச் சூழலை . . . சிக்கல்களை எவ்வாறு பார்க்கிறார்கள் . . . எதை உண்மையான சிக்கல் என்று கொள்கிறார்கள் . . . எந்தவகை மாந்தர்களைத் தங்கள் இலக்கியங்களின் மாந்தர்களாக ஆக்க விரும்புகிறார்கள் . . . என்பவற்றையெல்லாம் அவர்களின் உலகக் கண்ணோட்டங்களும் தத்துவப் பின்னணிகளுமே தீர்மானிக்கின்றன!
இன்றைய தமிழகத்து எழுத்தாளர்கள் வாழுகின்ற சமுதாய அமைப்பு ஒன்றாக இருந்தாலும், இவர்களின் உலகக்கண்ணோட்டமும் தத்துவப் பின்னணியும் வர்க்க உணர்வுகளும் வேறுபட்டு அமையும்போது . . . இவர்களது இலக்கியங்களின் தன்மையும் மாறுபட்டு அமைகிறது! ஜெயகாந்தனை ஜெயமோகனிடம் பார்க்கமுடியாது! அதுபோல ஜெயமோகனை ஜெயகாந்தனிடம் பார்க்கமுடியாது! பிரபஞ்சனைப் பாலகுமாரனிடம் பார்க்கமுடியாது! அதுபோல பாலகுமாரனிடம் பிரபஞ்சனைப் பார்க்கமுடியாது!
ஆனால் இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்களது சமுதாயச் சூழலையே எதிரொலிக்கிறார்கள்! இந்தச் சமுதாயத்தின் இலக்கியத் தேவைகளையே நிறைவேற்றுகிறார்கள்! இலக்கியத் தேவைகள் வர்க்கத்திற்கு வர்க்கம் மாறும் என்பதையும் இங்கு நாம் கணக்கில் கொள்ளவேண்டும்!
இதுபோன்று இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள் அவை தோன்றிய சமுதாயங்களின் தேவைகளையே எதிரொலித்தன! உறுதியாக அந்தச் சமுதாயங்கள் இன்றைய முதலாளித்துவ சமுதாயமோ ஏகாதிபத்தியச் சமுதாயமோ இல்லை!
மாறாக . . . இனக்குழுக்களின் இறுதிக் காலகட்டச் சமுதாயமாகவே எனக்குப் படுகிறது! அங்குதான் ''வீரமும், போரும்'' முன்னிலைப்படுத்தப்படுகிறது! இதுபற்றிய விரிவான விளக்கங்களைப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் அவர்களின் ''பண்டைய கிரேக்க சமுதாயம்பற்றிய ஆய்விலும்'' பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ''தமிழ் வீரயுகப் பாடல்களிலும்'' பார்க்கலாம்!
இராமாயணத்தில் ஒரு அரசைச்சுற்றிக் காடுகளில் பல ''கொடியவர்கள்'' வாழ்ந்ததாகவும், அவர்களின் ''அட்டூழியங்கள்'' முனிவர்களுக்கு இன்னல் விளைவித்ததாகவும், அதிலிருந்து முனிவர்களுக்கு ''விடிவு'' தேடித்தர இளமையிலையே இராமரையும் இலக்குவனனையும் விசுவாமித்திரர் (?) அழைத்துச் சென்றதாகவும் படிக்கிறோம்! இதன் பின்னணி . . . காடுகளில், மலைகளில் வசித்துவந்த இனக்குழுக்களை அழிக்க . . . ஒழித்துக்கட்ட . . . ஆற்றோரங்களில் குடியேறி, தனிச்சொத்துரிமையை அடிப்படையாகக்கொண்ட அரசு என்ற வன்முறை நிறுவனம் செயல்படுகிறது! இந்த வன்முறையின் ''வெற்றிநாயகர்'' இராமாயணத்தின் ''கதாநாயகராக'' ஆக்கப்படுகிறார்! இந்தக் காப்பிய நாயகர், பின்னர் ''உண்மையான வரலாற்றுநாயகராக'' ஆக்கப்படுகிறார், ஆளும் உடைமைவர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க! இன்றுவரை அது தொடர்கிறது!
அதுபோன்றுதான் மகாபாரதம்! இரத்த உறவுடைய இனக்குழுக்கள் தனியுடைமைச் சமுதாயமாக மாறியபிறகு. . . '' இரத்த உறவுக்கோ தொப்பூள்கொடிக்கோ நிலத்தின்மீதான 'பட்டா' உரிமையில் இடம் கிடையாது!'' என்ற ''சமூக நியாயம்'' முன்வைக்கப்படுகிறது! அதையொட்டியே பாரதத்தின் அத்தனை முதன்மைக் கதைகளும் கிளைக்கதைகளும் அமைந்துள்ளன! கீதையும் இதன் ஒரு பகுதிதான்!
எனவே நண்பர் மாலன் அவர்கள் கூறியதுபோல, இந்த ''இராமாயண, மகாபாரத நாயகர்கள்'' அன்றைய சமுதாயத்தில் தோன்றிய வாழ்ந்த ''வெற்றிநாயகர்களின்'' கற்பனை உருவங்களே! அந்த ''வெற்றிநாயகர்களின் சாதனைகளை'' அன்றைய இலக்கியப் படைப்பாளிகள் ''தங்களுக்கு உரிய'' பார்வையில் . . . தத்துவப் பின்னணியில் . . . ஆளும் வர்க்கங்களின், அரசர்களின் தேவைகளின் அடிப்படையில் . . . இலக்கியங்களில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்! வெறும் ''கற்பனை நாயகர்கள் இல்லை இவர்கள்'' என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன் . . .
ஆனால் ஒரு எச்சரிக்கையுடன்!
இந்தப் படைப்பாளிகள் வாழ்ந்த காலத்தில் நடமாடிய பல்வேறு உண்மையான ''மனிதர்களின்'' செயல்களையெல்லாம் தொகுத்து, அவை அனைத்தையும் ஒரு ''நாயகரின்'' செயல்களாக மாற்றி, மேலும் அந்த ''நாயகருக்கு'' ஒரு ''இறைத் தன்மையை'' ஏற்றி , இன்றளவும் அச்செயல் இந்திய ஒன்றியத்தின் மக்களிடையே சிக்கல்களும் மோதல்களும் ஏற்பட வழிவகுத்த ''இலக்கியப் படைப்பாளிகள்'' வால்மீகி போன்றவர்கள்!
இன்றும் நமது திரைப்படங்களில் வரும் ''கதாநாயகர்களும்'' இப்படித்தான்!
அவர்கள் இதை முன்கூட்டியே ''தீர்மானித்து'' செய்தார்கள் என்று நான் கூறவரவில்லை! ஆனாலும் அவர்களது ''இலக்கியப் படைப்புக்கள்'' இன்றைக்கு உண்மையான வரலாறாகத் திரிக்கப்பட்டு . . . மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதே! அதுதான் தவறு!
''கடமையைச் செய் ; பலனை எதிர்பார்க்காதே'' என்ற கீதையின் சொற்றொடர்கள் . . . 1975 அவசரநிலைப் பிரகடனத்தின்போது எல்லா இடங்களிலும் தொங்கவிடப்பட்டிருந்தது என்பதை நினைவுகூருகிறேன்! எதற்காக என்பதை நண்பர்களின் கருத்துக்களுக்கே விட்டுவிடுகிறேன்!

கம்ப இராமாயணம் கற்பனைப் படைப்பா அல்லது வரலாறா?

 கம்ப இராமாயணம் கற்பனைப் படைப்பா அல்லது வரலாறா?

---------------------------------------------------------------------
''நரகாசுரன்'' பற்றிய எனது கருத்தின்மேல் எனது இனிய நண்பர் திரு. மணிவாசகன் அவர்கள் ஒரு ஐயம் எழுப்பியுள்ளார்! அதுபற்றிக் கீழே பார்க்கலாம்!
நண்பர் திரு. மணிவாசகன்
----------------------------------------------------------------------
// இராமாயணமே கற்பனை ௭ன்று சொல்வது போல் உள்ளது ஐயா....௮ப்போ கம்பன் தமிழ் ௮றிஞர் இல்லையா?//
ந. தெய்வ சுந்தரம் விடை
-----------------------------------------------------------------------
நண்பரே, கம்பன் தமிழ்ப் புலவர் என்பதில் ஐயம் இல்லை! அவர் தனக்குப் பிடித்த வால்மீகி எழுதிய புராணக் காப்பியத்தின் கதையைக்கொண்டு, ''கம்பராமாயணம்'' எழுதி, தமிழ்ப்படைப்புலகத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்தார். இதை நான் மறுக்கவில்லை! அவரது படைப்பு ஒரு மிகச் சிறந்த ''தமிழ்ப் படைப்பு . . . படைப்பிலக்கியம்''!
வால்மீகியின் ''புராண இலக்கியப் படைப்பில்'' வருகிற நிகழ்ச்சிகள், நபர்கள் எல்லாம் கற்பனைதான்! இன்று ரஜினிபோன்ற நடிகர்கள் நடித்துவெளிவருகிற திரைப்படங்கள் எல்லாவற்றையும் . . . அவற்றில் வருகிற நாயகர்கள், வில்லன்கள், நிகழ்வுகள் எல்லாவற்றையும் நமக்குப் பிந்தைய சமுதாயம் அப்படியே ''உண்மை'' . . . ''உண்மையான வரலாறு'' என்று கொள்வதை நாம் ஏற்றுக்கொள்வோமா?
ஒரு படைப்பாளி தான் வாழ்கிற சமுதாயத்தின் நிகழ்வுகள், நபர்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றிலிருந்து தனது ''கதையை'' ''நபர்களைப்'' படைத்து (தனது உலகக் கண்ணோட்டத்திலிருந்து) , தனது படைப்பை வெளிவிடுகிறான்! அவ்வளவுதான்! தனது உலகக் கண்ணோட்டங்களுக்குத் தகுந்தவாறு தனது கதைகளையும் நபர்களையும் முன்வைக்கிறான். அவ்வளவுதான்!
அவ்வாறு இல்லாமல், தான் வாழ்ந்த சமுதாயத்தைப் ''படைப்பிலக்கியமாக '' மாற்றாமல் , அப்படியே எழுதினால் அது உண்மை வரலாறு ஆகிவிடும்! படைப்பிலக்கியங்கள் வரலாறு இல்லை! ஆனால், வரலாற்றில் உள்ள சில நிகழ்ச்சிகளின், நபர்களின் செல்வாக்கு அவற்றில் பதிந்திருக்கும்!
இராமாயணம், மகாபாரதம், ஏன் சிலப்பதிகாரம், மணிமேகலை கூட படைப்பாளிகளின் உருவாக்கங்களே! அவையே வரலாறு இல்லை! ஆனால் அவற்றில் படைப்பாளிகளின் சமுதாய நிகழ்வுகளின் பாதிப்புக்கள் இருக்கும்! அதை அப்படியே உண்மை வரலாறாக கொள்ளக்கூடாது!
இனக்குழுக்களை அழித்து, அரசுகள் தோன்றிய காலத்து நிகழ்வுகளை இராமாயணம் நினைவூட்டுகிறது!
இரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாயமானது ''மண்ணை'' அடிப்படையாகக்கொண்ட சமுதாயமாக மாறியதைப் ''பாரதம்'' நினைவூட்டுகிறது!
''இரத்த உறவுகளைக் கொல்வது தவறு, கொல்லமாட்டேன்'' என்று அர்ச்சுணன் முந்தைய சமுதாய நிலைப்பாட்டிலிருந்து பார்த்துத் தயங்கியபோது, ''பழைய சமுதாயம்தான் இரத்த உறவை அடிப்படையாகக்கொண்டது; அதில்தான் இரத்த உறவுகளைக் கொல்வது பாவம்; இனிவரும் சமுதாயம் மண்ணை அடிப்படையாகக்கொண்டது; எனவே மண்ணுக்காக இரத்த உறவுகளைக் கொல்லலாம்; அதுவே ஷத்திரியனின் கடமை; கடைமையைத்தான் நீ செய்யவேண்டும்'' என்று ''கிருஷ்ணபகவான்'' அர்ச்சுணனுக்குப் ''போதிக்கிறார்''!
இவ்வாறு சமுதாய மாற்றங்களின் சில நிகழ்வுகள், மரபுகள், கண்ணோட்டங்கள் படைப்பிலக்கியங்களில் எதிரொளிக்கலாம். ஆனால் அதற்காக இந்த இலக்கியங்களையே உண்மையான வரலாறாக கொள்ளக்கூடாது!
எனவே இராமாயணம் ஒரு சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பு என்ற அடிப்படையில் கம்பர் ஒரு மிகச் சிறந்த தமிழ் அறிஞர்தான்! அதில் ஐயமே இல்லை! ஆனால் அவரது இலக்கியப் படைப்பானது ஒரு படைப்புத்தான் என்பதில் ஐயம் இல்லை! அவர் தமிழ் அறிஞர் என்பதால், அவருடைய இலக்கியப் படைப்பானது உண்மையான வரலாறாக ஆகிவிடமுடியாது!
வால்மீகியின் படைப்பை அப்படியே மொழிபெயர்க்காமல் . . . அந்தக் கதையை தனக்கே உரிய வகையில் உள்வாங்கி. . . தமிழ் மரபுக்கேற்ப . . . ஒரு புதிய படைப்பைக் கம்பர் உருவாக்கியுள்ளது அவரது ''இலக்கியப் படைப்புத் திறனை'' வெளிக்காட்டி நிற்கிறது! மேலும் தனது படைப்பில் அவர் தமிழ்மொழியை ஒரு மிகச் சிறந்த இலக்கிய நடையில் வெளிப்படுத்துவது அவரது மொழிப் புலமையைக் காட்டிநிற்கிறது! இதுவே அவரது சிறப்புக்கள்! இந்தச் சிறப்புக்களால் அவரது படைப்பிலக்கியம் வரலாறாக மாறிவிடமுடியாது!

திங்கள், 24 அக்டோபர், 2022

''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!

 ''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!

---------------------------------------------------------------------------------------------------------------------------


புராணத்தில் நீடிக்கிற நரகாசுரன் உண்மையில் இருந்திருந்தால் . . . அவரைக் கொன்ற ''கடவுளும்'' இருந்திருக்கவேண்டும்! காப்பியங்களில் நீடிக்கிற ''இராவணன்'' இருந்திருந்தால் ''இராமனும்'' இருந்திருக்கவேண்டும்! ''அசுரர்கள்'' இருந்திருந்தால்''தேவர்களும்'' இருந்திருக்கவேண்டும்!
ஆனால் அவ்வாறு இருந்ததற்கான எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது! இந்த இரண்டு வகையான புராணப்படைப்புக்களுமே கற்பனைப் படைப்புக்கள்தான்! இரண்டு எதிர்மறையான புராணக் ''கதாநாயகர்கள், வில்லன்கள்" ஆகிய இரண்டு தரப்பினரும் இரண்டு எதிர்மறையான கற்பனை ''தத்துவங்களின்'' - '' உலகக் கண்ணோட்டங்களின்'' - ''வர்க்க நலன்களின்'' எதிரொளிப்புக்கள்தான்!
''இராமனுக்குக்'' கோயில் கட்டுவதும், ''இராமநவமியைக்'' கொண்டாடுவதும் ஆளும் வர்க்கங்களின் திட்டமிட்ட செயல்பாடுகள்தான்! அவர்களது நலன்களைக் காப்பாற்றுகிற ''கருத்துக்களுக்கு'' உண்மை வடிவங்கள் அளித்து, சமுதாயத்தைத் திட்டமிட்டு ஏமாற்றுவதே ஆகும்.
அந்த வகையில்தான் ''நரகாசுரனுக்கான'' வீரவணக்க நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளவேண்டும்! ஆனால் நரகாசுரனை உண்மையான நபராக எடுத்துக்கொண்டால், எதிர்த்தரப்பினர் ''அவரைக் கொன்ற'' கடவுள்களையும் உண்மையான நபராகக்கொண்டு மக்களை ஏமாற்றுவது தொடரும்! ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடும் போராளிகள் இதில் கவனமாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து!
''இராமன் - இராவணன்'' ''தேவர் - அசுரர்'' ''நரகாசுரன் - அவரை அழித்த கடவுள் (?) '' - என்ற எதிர்மறையான கற்பனைப்படைப்புக்கள் . . . வரலாற்றில் வர்க்க வேறுபாடற்ற ஒரு சமுதாயம் இரண்டு எதிர்மறை வர்க்கங்களைக்கொண்ட வர்க்கங்களாக மாறியதைச் சுட்டிக்காட்டும் ''நபர்களே '' ஆவர்!

வெள்ளி, 21 அக்டோபர், 2022

''ஆட்சிமொழிச் சிக்கலில் 'பெரும்பான்மை ஜனநாயகம்' பற்றி ''

 

''பெரும்பான்மை'' என்ற ''ஜனநாயகத் தீர்வு நடைமுறையை'' எந்தச் சிக்கலுக்குப் பின்பற்றமுடியும்? - நண்பர் திரு. மாலன் அவர்களுக்கு எனது விடை!

--------------------------------------------------------------------------------------------------------------------------

மொழி ஒப்பீட்டு ஆய்வுபற்றிய எனது முகநூல் பதிவு பற்றி நண்பர் திரு. மாலன் அவர்கள் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. அவற்றில் நான் வேறுபடுகிற கருத்துபற்றி இங்கு கூறுகிறேன்.

 திரு. மாலன் அவர்கள் :

--------------------------------------------------------------------------------------------------------------------------

//தெளிவான கருத்துக்கள். இவற்றை நான் இவ்விதம் தொகுத்துக் கொள்கிறேன்: 1. ஒப்பீட்டு ஆய்வுகளின் அடிப்படையில் எந்த மொழியும் இன்னொரு மொழியைவிட உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை. 2. ஒரு மொழியின் புறச்சூழலே அது அதிகாரம் பெறுவதைத் தீர்மானிக்கிறது. (சரியாக விளங்கிக் கொண்டிருக்கிறேனா?) இவற்றோடு இன்னும் சில யதார்தங்களையும் சிந்திக்கலாமா? 1.புறச்சூழலின் பொருட்டே (வெளிப்பாட்டிற்காகவும் தொடர்புக்காகவும்) மொழிகள் தோற்றம் பெறுகின்றன.2. மொழிகளின் அந்தச் செயல்பாடு சூழலிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. பண்பாட்டு பரிமாற்றம், பண்பாட்டு ஒருமை என்பன அவற்றில் சில. 3.பண்பாட்டுப் பரிமாற்றம் மொழிக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. 4. மொழியோ பண்பாடோ புறச்சூழலால் பாதிக்கப்படாத ஓர் இறுக்கமான கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதில்லை. 5. ஜனநாயகத்தில் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை ஆதிக்கம் என்று சொல்லுதல் பொருத்தமல்ல. //

 ந. தெய்வ சுந்தரம்

-----------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் மாலன் அவர்களுக்கு நன்றி . நண்பர் மாலன் அவர்கள் கூறியுள்ளபடி, மொழி என்பதே சமுதாயத் தேவையையொட்டித்தான் தோன்றி வளர்ந்து நீடிக்கின்றன. அதில் ஐயம் இல்லை.

அதுபோன்று ஒரு சமுதாயத்தின் தேவை, பண்பாடு போன்றவையும் ஒரு மொழியின் அமைப்பில் ( சொற்களஞ்சியம், இலக்கண அமைப்பு ) தமது செல்வாக்கைச் செலுத்தும். இதிலும் ஐயம் இல்லை.

இதுபற்றியெல்லாம் சமூகமொழியியல் (Sociolinguistics) , மானிடவியல் மொழியியல் (Anthropological Linguistics) போன்ற துறைகள் ஆய்வுசெய்கின்றன. இதிலும் ஐயம் இல்லை!

சமுதாயம் மாற மாற, வளர வளர மொழியும் வளர்கிறது. அது பாதிக்கப்படாத கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதிலை என்பதும் உண்மைதான். இந்த மொழி வளர்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தின் திட்டமிட்ட பங்குபற்றி மொழிபற்றிய சமூகவியல் (Sociology of Language) என்ற துறை ஆய்வுசெய்கிறது.

ஆனால். . .

மாலன் அவர்கள் முன்வைத்துள்ள 5-ஆவது கருத்து விவாதத்திற்கு உட்பட்டதாகும். ஒரு ஒன்றியத்தில் பல இனங்கள் நீடிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி உரிமை போன்றவற்றில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கமுடியாது. அனைத்து இனங்களுக்குமான நலன்களைப்பற்றியதில் பெரும்பான்மை முடிவை - அதுவும் சில குறிப்பிட்ட வேளைகளில் - எடுக்கலாம்.

ஒரு இனத்தைப் பட்டினிபோடவேண்டுமென்று ''ஜனநாயக அடிப்படையில் '' - ''பெரும்பான்மை அடிப்படையில்'' தீர்மானிப்பது சரியாகுமா? ஒரு இனத்தின் மொழிதொடர்பான முடிவும் இதைப்போன்றதுதான்! இதில் ''பெரும்பான்மை'' என்ற - ''ஜனநாயகமுறை'' என்ற - ஒரு ''தேன்தடவிய தோட்டாவை'' ஒரு இனத்தின்மீது திணிக்கக்கூடாது. அவ்வாறு திணிப்பது உண்மையான மக்கள் ஜனநாயகம் இல்லை!

தன் இனத்தின் மொழி உரிமை, தேவைப்பட்டால் தேசிய இனங்கள் தனித்து வாழ்வதற்கான தன்னுரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல்சட்டம்தான் ''ஒன்றிய ஜனநாயகச் சட்டமாக'' இருக்கவேண்டும். இல்லையென்றால் அது ''ஜனநாயகம்'' இல்லை!

மாறாக, ''பெரும்பான்மை'' என்ற ஜனநாயகக் கருவியைக்கொண்டு, பெரும்பான்மைப் பிரிவுகள் சிறுபான்மையை அடக்குவதாகவே, ஒடுக்கவதாகவே அமையும்! இனங்களுக்கு இடையே பகைமைதான் நிலவும்!

எனவே, இந்திய அரசியல் சட்டத்தில் தனது தாய்மொழியான தமிழையும் ஆட்சிமொழியாக இணைக்கவேண்டும் என்று தமிழினம் கோரிக்கை முன்வைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை! மற்றொரு இனத்தின் மொழியைத் தங்கள்மீது திணிப்பதை எதிர்ப்பதில் தவறு இல்லை! இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்துக்கே இடம் இல்லை!

பல இனங்கள் நீடிக்கிற ஒரு ஒன்றிய அரசில் அனைத்து இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படுவதே உண்மையான ஜனநாயகமாகும்!

 

வியாழன், 20 அக்டோபர், 2022

மொழி ஒப்பீட்டு (தமிழ் - வடமொழி, இந்தி, ஆங்கிலம்) ஆய்வுபற்றி எனது கருத்து!

 மொழி ஒப்பீட்டு (தமிழ் - வடமொழி, இந்தி, ஆங்கிலம்) ஆய்வுபற்றி எனது கருத்து!

----------------------------------------------------------------------------------------------------------------------
எனது தாய்மொழியாகி தமிழ்மொழி (1)மிகத் தொன்மை வாய்ந்தது! (2) வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள மொழி! (3) இன்றும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து- கொண்டிருக்கிற மொழி! (4) தொன்மை இலக்கியத்தில் இருந்து செவ்விலக்கியம்முதல் இன்றைய இலக்கியம் -வரை அனைத்திலும் தன்னை நிலைநிறுத்தியுள்ள மொழி! (5) இன்றும் தமிழ் இனத்தின் அனைத்துக் கருத்தாடல் செயல்பாடுகளுக்கும் தகுதிபெற்ற மொழி!
இவ்வாறு ஒவ்வொரு மொழிச் சமுதாயமும் தனது இனத்தின் மொழிபற்றிய சிறப்பை உணர்ந்து மகிழவேண்டும்! தனது மொழியின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்!
இது ஒருபுறம் இருக்கட்டும்!
மொழி ஒப்பீட்டு ஆய்வு (Comparative Linguistics) என்பது மொழி ஆய்வில் மிக முகமை உடைய ஒரு பிரிவு!
இந்த ஆய்வின் பணி . . . பல்வேறு மொழிக்கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்தி . . . இந்த இந்த மொழிக்கூறுகளில் இந்த மொழிகளுக்கிடையே ஒற்றுமை உள்ளது! இந்த இந்த மொழிக்கூறுகளில் வேற்றுமை உள்ளது! என்பதை எடுத்துக்காட்டுவதே ஆகும்!
எந்தவொரு மொழியும் தனது மொழிச்சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நீடிக்கும்! வளரும்!
மொழிக்கூறுகளில் எந்தவொரு மொழியும் எந்தவொரு மொழியையும் விட தாழ்ந்தது அல்லது உயர்ந்தது என்று கூறுவதற்கு எந்தவொரு மொழிக்கூறு அடிப்படையும் கிடையாது! இதுதான் ஒப்பீட்டு மொழி ஆய்வு!
இந்த மொழி ஒப்பீட்டு ஆய்வை ஒருவர் தனது அரசியல், பொருளாதார, பண்பாட்டு நோக்கின் அடிப்படையில் உயர்வு - தாழ்வுக்கும், பிற மொழிகளின்மீது மேலாண்மைக்கும் பயன்படுத்துவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது! அவ்வாறு பயன்படுத்துவது அறிவியல் அடிப்படையிலான ஆய்வைக் கொச்சைப்ப்டுத்துவதாகவே அமையும்!
ஆனால் . . . ஒரு மொழியின் ''சமுதாய மேலாண்மையானது (''ஆதிக்கமானது'')'' அந்த மொழியின் உள்ளார்ந்த மொழிக் கூறுகளின் அடிப்படையில் அமையாது! மாறாக, அந்த மொழி பேசும் இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலாண்மையே அதைத் தீர்மானிக்கிறது! அதாவது அந்த மொழிக்கும் அதனது புறச் சூழலுக்கும் இடையிலான நிலையைப் பொறுத்தது ஆகும்!
ஆங்கிலம், வடமொழி, இந்தி ஆகியமொழிகளின் ''சிறப்பு'' பற்றிப் பேசுகிறவர்கள் மேற்கூறிய புறச் சூழல் கூறுகளைக்கொண்டுதான் பேசுகிறார்கள்! உள்ளார்ந்த மொழிக்கூறுகளின் அடிப்படையில் பேசவில்லை! அவ்வாறு பேசவும் முடியாது! அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது!
ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி என்பவைபற்றிப் பேசும்போது . . . குறிப்பிட்ட மொழிக்கும் அம்மொழிபேசுகிற இனத்திற்கும் இடையில் நீடிக்கிற புறச்சூழல்களை அடிப்படையாகக்கொண்டுதான் பேசுகிறோம்!
ஒரு இனத்தின் மொழியின் செயல்பாடுகளின்மீது மற்றொரு இனத்தின் மொழியான் மேலாண்மை செய்தால், அதற்கு முழுப்பொறுப்பும் அந்தக் குறிப்பிட்ட இனத்தின் ''மேலாண்மையே'' ஆகும்!
''அம்பின் மேல் (அந்த மொழியின்மேல்) எந்தக் குற்றமும் இல்லை! அதை எய்தவர்தான் (மேலாண்மை இனத்தின் செயல்கள்தான்) குற்றம் இழைக்கிறார்''!
பிற இனத்தின் மேலாண்மையால் தன் இனத்தின் மொழியின் செயல்பாடுகள் குறுக்கப்பட்டால் . . . மேலாண்மை இனத்தின் மொழிமீது குற்றம் சாட்டுவதற்கு மொழிக் கூறுகள் அடிப்படை இல்லை! மேலாண்மை இனத்தின் மேலாண்மை அரசியலே அடிப்படை!
அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது! அதை எதிர்த்துப் போராடவேண்டும்! தன் இனத்தின் மொழிக்கு முழு உரிமையும் - ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி ஆகிய அனைத்திலும் முழு உரிமையும் - பெறுவதற்காகப் போராட வேண்டும்! மேலாண்மை செலுத்துகிற இனத்தின் மேலாண்மை அரசியலுக்கு எதிராகப் போராடவேண்டும்!
இந்தப் போராட்டத்தில் மேலாண்மை செலுத்துகிற இனமானது தனது மொழியின் உள்ளார்ந்த மொழிக்கூறுகளை அதற்குப் பயன்படுத்தினால் அது மிகத் தவறு! அறிவியல் அடிப்படை அற்ற ஒன்று அது!
எந்தவொரு மொழியும் உள்ளார்ந்த மொழிக்கூறுகளும் எந்தவொரு மொழியின் உள்ளார்ந்த மொழிக்கூறுகளையும் விட உயர்ந்தது இல்லை! தாழ்ந்ததும் இல்லை!
அதற்கு எந்தவித மொழி அடிப்படையும் இருக்கமுடியாது! புறக் காரணிகளே அடிப்படை!
இதை மறந்துவிட்டு, ஒரு சிலர் தாங்கள் ''விரும்புகிற'' இனத்தின் மொழிக்கூறுகளை ''உயர்த்திப்பிடித்தால்'' அது அவரது மொழி ஆய்வு அறியாமையையே எதிரொலிக்கும்! இதில் ஐயமே இல்லை!
ஆகவே . . . ஆங்கிலம், இந்திமொழிகளின் மேலாண்மையால் இன்று தாக்குதலுக்கு உட்பட்டுள்ள தமிழ்மொழிக்காகப் போராடுவது என்பது . . . மொழி மேலாண்மைக்கு அடிப்படையிலான இன ஒடுக்குமுறைக்கு - அதற்கு அடிப்படையான அரசியல் ,பொருளாதார, பண்பாட்டு மேலாண்மைக் கூறுகளுக்கு - எதிரான போராட்டமாக அமையவேண்டும்!
''அவர்கள் தவறு செய்கிறார்கள்'' என்றால், அதற்குக் காரணம் , மொழி மேலாண்மைக்கு அடிப்படையான இன ஒடுக்குமுறையையும் அதற்குப் பின்புலமாக அமைகிற அரசியல் , பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளையும் மறைப்பதற்கே ஆகும்! அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்!
இதை தாக்குதலுக்கு உட்படுகிற இனம் தெளிவாக உணரவேண்டும்! இல்லையென்றால் போராட்டம் ''பயனற்றுப் போகும்'' ! ''இல்லாத ஊருக்குப்'' பாதை போடுவதாகவே அமையும்! உண்மையா- , தேவையான போராட்டத்தைத் திட்டமிட்டு திசை திருப்புவதே ஆகும்!
மொழி ஒப்பீட்டு ஆய்வை மொழிகளைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்துவோம்!
அதை யாரும் தவறாகப் பயன்படுத்தினால் அதை அம்பலப்படுத்துவோம்! ஆனால் நாம் அதே தவறைச் செய்யக்கூடாது!
எந்தவொரு அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்கு எதிரானது இல்லை! ஆனால் அதைப் பயன்படுத்துபவர்களின் தவறான அணுகுமுறை மக்களுக்குஎதிரானதுதான்! மொழி ஒப்பீட்டு ஆய்வும் இதற்கு விதிவிலக்கு இல்லை!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India