தமிழ்
ஆய்வாளர்களின் கவனத்திற்கு ! தமிழ் இலக்கணத்தின் வியக்கத்தக்க கணிதப் பண்பு
--------------------------------------------------------------------------------------------------------------------------
கணினியியல்
அறிஞர் நண்பர் திரு. சுந்தர் இலட்சுமணன் அவர்கள் 'மரம் = பட்டை' என்பது ஏன் 'மரப்பட்டை' என்று அமைகிறது? இதற்கு விதிகள் உண்டா? என்ற ஒரு மிகச் சரியான ஐயத்தை
முன்வைத்துள்ளார். ஆனால் இதற்கான எனது பதில் கருத்து நீண்டுவிட்டதால், தனியாகவே இதைப் பதிவிடுகிறேன். நண்பர்களின்
பொறுமையை வேண்டுகிறேன்! நேரம் கிடைக்கும்போது படித்துத் தங்கள் கருத்துக்களைக் கூறினால் நல்லது.
திரு. சுந்தர்
இலட்சுமணன்
------------------------------------------------------------------------
ஐயா, மரம் பட்டை - இங்கே மகரம் நீங்கியபின் பகர
ஒற்று இரட்டிப்பதற்கான ஒலிப்புத்தேவை எதுவும் உள்ளதா? அதாவது அசையின் தொடக்கத்தில் வல்லெழுத்து
மெலியக்கூடாது என்பதற்காக இருக்குமா? ம-ர-பட்-டை என அசைபிரிக்கும்போது பட
என்பதிலுள்ள பகரம் மெலிந்திருக்கக்கூடாதென்பதற்காக ம-ரப்-பட்-டை என பகர ஒற்று
இரட்டிப்பதாகக் கொள்ளலாமா? https://dravidianlinguisticsblog.wordpress.com/.../an.../
- இங்கே ஒருவர்
வல்லொலி புணர்ச்சியில் மிகுதியாகத் தங்கிவிடுவது எதனால் என்று கேட்டுள்ளார்.
அவருக்கு விடைபகர முயன்று வருகிறேன். அதற்காகவே இவ்வையம்.
ந. தெய்வ
சுந்தரம் + திரு. சு. சரவணன்
-----------------------------------------------------------------------
நண்பர்
சுந்தர் இலட்சுமணன் அவர்கள் எழுப்பியுள்ள ஐயத்திற்கு விடைதர முயல்கிறேன் (!).
ஏற்கனவே
முகநூல் பதிவு ஒன்றில் அண்மையில் வேற்றுமைத்தொகையில் (உருபும் பயனும் தொக்கி
நிற்கும் பெயர்த்தொகை) புணர்ச்சிபற்றி ஒரு கருத்தை முன்வைத்திருந்தேன். எனக்குக்
கணினித்தமிழில் உதவிபுரிந்துவரும் மென்பொறியாளர் திரு. சரவணன் அவர்களின் கருத்தே
அது. இந்த வகை பெயர்த்தொகையில் வருமொழியானது வல்லினத்தில் தொடங்கினால்
நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் வருமொழியின் வல்லின எழுத்து உறுதியாக மிகும்; மிகவேண்டும். இது ஒரு பொது புணர்ச்சி விதி.
(1) நிலைமொழியின்
இறுதி எழுத்து உயிராக இருந்தால் வருமொழியின் வல்லினத் தொடக்கம் மிகும். ''பள்ளி + பாடம் - பள்ளிப்பாடம்; தெரு + திண்ணை -> தெருத்திண்ணை''
(2) நிலைமொழியின்
இறுதி எழுத்து உயிராக இல்லாமல், மெய் ஒற்றுக்களில் முடிந்தாலும் வருமொழியின் தொடக்க வல்லினம் மிகும்.
ஆனால் இதில்
ஒரு முக்கியமான துணை விதியும் செயல்படுகிறது.
தமிழில்
சொல்லின் இறுதியில் நீடிக்கும் மெய் ஒற்றுக்கள் - ம் , ண், ன், ய், ர், ல், ள், ழ் என்ற எட்டு மெய்களே. (ங், ஞ், ந், வ் வராது - பழந்தமிழில் இதற்கு விதிவிலக்கு
இருக்கலாம்) )
இவற்றில் ம், ண், ன், ல், ள் ஆகியவை ஒரு வகையிலும் ய்,ர், ழ் ஆகியவை வேறொரு வகையிலும் செயல்படுகின்றன. ஆனாலும் இவை அனைத்திலும்
வருமொழியின் தொடக்க வல்லினம் மிகும் .
ய், ர், ழ் ஆகியவை நிலைமொழி இறுதியில் வரும்போது, புணர்ச்சியால் மிகுகிற வல்லினம் அப்படியே
நீடிக்கும். 'வாய் + கால் -
வாய்க்கால் ; தேர் + தடம் -> தேர்த்தடம்; கூழ் + பானை -> கூழ்ப்பானை. இவ்வாறு மிகும்போது, தமிழின் அசையமைப்பு விதிகளும்
செயல்படுகின்றன. 'வாய்க்கால்' என்பதை அசைகளாகப் பிரித்தால் , 'வாய்க் - கால்' ; முதல் அசையின் தொடக்கம் 'வ்' ; அசையின் உச்சி 'ஆ' ; அசையின் ஒடுக்கம் 'ய்க்'; தமிழில் அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள்
வரலாம்; ஆனால் முதல்
மெய் 'ய், ர், ழ்' ஆகிய மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்; பிற மெய்கள் வரக்கூடாது. எனவே மேற்கூறப்பட்ட
எடுத்துக்காட்டுக்களில் தொகைச்சொற்களில் 'ய்க்' 'ர்த்' 'ழ்க்' ஆகியவை வெளிப்படையாக வரமுடியும்; எனவே வருகின்றன.
(3) ம், ன், ல், ள் ஆகிய நான்கு மெய்களும் நிலைமொழிகளின்
இறுதியாக வரும்போதும், வருமொழிகளில்
வல்லினங்கள் வந்தால் ஒற்று மிகும். ஆனால் ஒரு துணைவிதி அங்கே செயல்படுகிறது.
'கல் + குடம்' என்பதில் 'கல்க்குடம்' என்று புணர்ச்சி விதிப்படி 'க்' மிகும்; ஆனால் அவ்வாறு மிகும்போது, வருமொழியில் முதல் அசையின் ஒடுக்கமாக 'ல்க்' என்ற கூட்டு வருகிறது. ஆனால் இது தமிழ்மொழி
அசை அமைப்பு விதிகளின்படி தவறு; ஆனாலும் வேற்றுமைத்தொகை
என்ற அடிப்படையில் வல்லின ஒற்று மிகவும் வேண்டும். இந்தச் சிக்கலைத் தமிழ்
இலக்கணம் மிகச் சிறப்பாகக் கையாளுகிறது.
'' கல் + க் +
குடம் -> கல்க்குடம்
என்பதில் 'ல்' எழுத்தும் பங்கு கொள்ளவேண்டும்; புணர்ச்சியால் தோன்றுகிற ''க் '' எழுத்தும் பங்குகொள்ளவேண்டும். 'அதாவது 'க்' என்பதின் வல்லினத் தன்மையும் அதேவேளையில் 'ல்' என்ற இடையினத்தின் தன்மையும் - இரண்டும் -
நீடிக்கவேண்டும். 'ல்' என்பதற்கு இணையான வல்லினம் 'ற்'; இந்த 'ற்' இல் வல்லினப் பண்பும் இருக்கிறது; அதேவேளையில் 'ல்' என்பதோடு உறவும் உள்ளது. எனவே 'ல்க்' என்ற அசை ஒடுக்கமானது 'ற்' என்று மாறி அமைகிறது.
இதன் பயனாகவே
ன் + க் என்பதும் 'ற்' என்று மாறுகிறது;
'ள்க்' 'ண்க்' என்ற இணைகள் 'ட்' என்ற வல்லினமாக மாறுகிறது. ஒரு கல்லில்
இரண்டு மாங்காய்கள். தமிழின் அசை அமைப்பு விதிகளும் பின்பற்றப்படுகிறது; இந்தவகை பெயர்தொகைகளில் வல்லினம் மிகும் என்பதும் நீடிக்கிறது.
இதையே
புணர்ச்சி இலக்கணத்தில் ''திரிதல்'' என்று அழைக்கிறோம். முதலில் வல்லின ஒற்று
மிகுந்து, பின்னர் அது
தனக்கு முந்தைய மெய்யோடு இணைந்து, வேறொரு மெய்யாகத் திரிகிறது. அதாவது ''தோன்றல்'' என்ற ஒரு புணர்ச்சி செயல்பாடு நிகழ்ந்து, பின்னர் தமிழ் அசை அமைப்பு விதியைத்
தக்கவைக்க ''திரிதல் '' செயல்பாடு நடைபெறுகிறது. ''தோன்றல்' இல்லாமல் இங்கு ''திரிதல்'' கிடையாது!
(4) ஆனால்
நிலைமொழியின் இறுதியில் 'ம்' என்ற மெல்லினம் வந்தால் ? அப்போதும் வல்லின ஒற்று மிகும். மரம் + பட்டை
-> மரம்ப்பட்டை ; 'ம்ப்ப்' என்ற மூன்று மெய் இணை தோன்றுகிறது. ஆகவே மேலே
(3) கூறப்பட்டுள்ளதுபோல, 'ம்ப்' என்பது 'ப்'ஆக மாறுகிறது. அதற்குக் காரணம், 'ம்' என்பதற்கு இணையான வல்லினம் 'ப்' தானே! ( ல்க், ன்க் -> ற் ; ள்க், ண்க் -> ட் என்பதுபோல!) ஆகவே 'ம்ப்' என்ற இணையானது 'ப்' என்று அமைகிறது. இங்கும் புணர்ச்சி விதியும்
செயல்படுகிறது; தமிழ் அசை
அமைப்பு விதியும் மீறப்படவில்லை. எனவே 'மரம் + ப் + பட்டை - மரம்ப்பட்டை -> மரப்பட்டை.
இங்கு
முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய தமிழ் இலக்கண விதிகள் ; (1)
உருபும்
பயனும் தொக்கிநிற்கும் பெயர்த்தொகையில் வல்லின ஒற்று மிகும் (2) அவ்வாறு மிகும்போது, தமிழ் அசை அமைப்பு விதியும் தக்கவைக்கப்படவேண்டும். அதாவது ஒரு
மொழியசையின் ஒடுக்கமாக 'ய், ர், ழ் + பிற மெய்கள் என்பது அமையலாமே ஒழிய, பிற மெய் இணைப்புக்கள் அமையக்கூடாது. இந்த
இரண்டு விதிகளுமே இங்குச் செயல்படுகின்றன.
எனவேதான் 'பால் + குடம் -என்பது 'பாற்குடம்' என்று அமையவேண்டும். அல்லது 'பால்க்குடம்' என்று அமையவேண்டும். 'பால்குடம்' என்று எழுதக்கூடாது.
நண்பரே. தமிழ் இலக்கணத்தின் சிறப்பு இது! கணினிக்கு
விதிவிலக்குகள் இல்லாமல் இலக்கண விதிகளைக் கொடுக்கவேண்டிய ஒரு சூழலில்
எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு விளக்கம். இது சரியா தவறா அல்லது மாற்றவேண்டுமா
என்பதைத் தங்களைப்போன்ற தமிழ் இலக்கண ஆய்வாளர்கள்தான் கூறவேண்டும். ஒரு முயற்சி . அவ்வளவுதான்! மொழியியல்
கற்றுக்கொடுப்பது . . மனித மொழியின் அமைப்பு, செயல்பாடு ஆகியவற்றின் பண்புகள் அனைத்துக்கும் விதிவிலக்கு
இல்லாத விதிகளைக் கண்டறியவேண்டும் என்பதே ஆகும்!
ஆய்வில் ஒரே கட்டத்தில்
அனைத்துச் சிக்கல்களையும் தீர்ககமுடியாது . எனவே ஒரு கட்டத்தில் நம்மால்
விளக்கமுடியாத சிக்கல்களைப் புறனடையாக வைக்கலாம். அடுத்த ஒரு கட்டத்தில் விளக்கம்
கிடைக்கலாம். அப்போது புறனடையிலிருந்து அதை விலக்கிக்கொள்ளலாம். கணினியில் இதை hardcoding என்பதில் அடக்கிக்கொள்வார்கள் எனக்
கருதுகிறேன்.
(1) எழுத்து வழக்கில்
தாங்கள் (திரு சுந்தர் இலட்சுமணன்) கருதுவது போல , பொதுவாக
உருபன்கள் மறைவதில்லை. ஆனால் பேச்சுத்தமிழில் சில உருபன்களின் முதல்
எழுத்துமட்டுமல்லாமல், முழு உருபனே மறையும்.
எடுத்துக்காட்டாக, 'வருகிறேன்' என்ற எழுத்துத்தமிழ்ச் சொல்லில் மூன்று உருபன்கள் - வரு - கிறு-ஏன் ' - என்ற மூன்று உருபன்கள் இருக்கின்றன. ஆனால்
இதற்கான சில பேச்சு வழக்குக்களில் 'வரேன்' என்று அமையும்போது 'வர் - ஏன்' என்ற
இரண்டு உருபன்கள்மட்டுமே நீடிக்கின்றன; நிகழ்கால
விகுதி மறைந்துதான் உள்ளது. வேறுவகையிலும் இதற்கு விளக்கம் கூறலாம். 'வர்றேன்' என்று
பேச்சுவழக்கைக்கொண்டு, 'வர் - ற் - ஏன்' என்றுஉம் விளக்கம் அளிக்கலாம். இதில் மூன்று
உருபன்களும் நீடிக்கின்றன. ஆனால் அவற்றின் வடிவங்கள் வேறு.
(2) எனது கருத்து, பேச்சுவழக்கை அடிப்படையாகக்கொண்டு, எழுத்துவழக்கின் புணர்ச்சி விதிகளை ஆராய்வது
சரியாக இருக்காது.
(3) நிலைமொழியின் இறுதியில்
- அதாவது சொல்லின் இறுதி அசையானது அசை உச்சியோடு (Peak) நின்று (அதாவது உயிரோடு நின்றுவிட்டால்) , வருமொழியின் முதல் அசையின் தோற்றமாக (Onset) வல்லினம் நின்றால், நிலைமொழியின் இறுதி அசையானது வல்லினத்தை
முதலாகக்கொண்ட வருமொழியின் முதல் அசையோடு இணைவதற்கு இயலாமல், தனக்கு ஒரு அசை ஒடுக்கத்தை (Coda) இணைத்துக்கொள்கிறது. அதாவது நிலைமொழியின்
இறுதி அசையானது வருமொழியின் ஒரு வல்லினத்தைக்கொண்ட அசை ஒடுக்கத்தை (Coda) உருவாக்கிக்கொள்கிறது. தமிழில் பெயரெச்சம், பெயரடைகளைக்கொண்ட பெயர்த்தொடர்களைத் தவிர (Noun phrases) , பிற தொடர்கள்
அனைத்துக்கும் மேற்கூறிய விளக்கம் பொருந்திவருகிறது. இந்தப் பிற தொடர்களில்
நிலைமொழியானது உயிரில் முடிந்து, வருமொழியின்
முதல் எழுத்து (அதாவது முதல் அசையின் தொடக்கம்) வல்லினமாக இருந்தால், இடையில் வருமொழியின் வல்லின முதல் எழுத்து
தோன்றும். இதற்கு மொழியசையின் (linguistic syllable ) அமைப்பே அடிப்படை என்று கொள்ளலாம்.
(4) ஆனால் நிலைமொழியின்
இறுதி எழுத்து மெல்லினம், இடையினத்தில் (non-stop or non-plosives) அமைந்தால் (ம், ண், ன், ய், ர், ல், ள், ழ் - 8 எழுத்துக்கள்)
, தோன்றலும் திரிதலும்
நடக்கிறதே! அதற்கு என்ன விளக்கம் அளிப்பது? இந்த
எட்டு மெய்களும் வல்லினங்களின் பிறப்பாக்கத்தைவிட (articulation) , உயிர்களின் பிறப்பாக்கத்தோடு அதிகமான உறவுகள்
கொண்டுள்ளன என்று கூறலாமா? அவ்வாறு கொண்டால், நிலைமொழியின் இறுதி அசை அமைப்பும்
வருமொழியின் முதல் அசை அமைப்புமே வல்லின ஒற்று மிகுவதற்குக் காரணம் என்று கூறலாம்.
ஆனால் இது எந்த அளவுக்குச் சரியானது என்பது மேலும் ஆராயப்படவேண்டும.
(5) மேலும் தொகை (compounds) என்ற ஒரு அமைப்பு தன்னை
வெளிப்படுத்திக்கொள்ள இதுபோல வல்லின ஒற்றின் தோற்றத்திற்குக் காரணம் என்றும்
கூறலாம். ஆனால் தாங்கள் கூறியதுபோல வினைத்தொகையில் இதுபோன்ற வல்லின ஒற்றுத்
தோன்றல் இல்லை ( ஆட்டுக்கல், ஒட்டுப்பலகை
போன்ற வன்தொடர்க்குற்றியலுகர நிலைமொழிகளைத்தவிர).
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக எனக்குப் படுகிறது : மொழியசை
அமைப்புக்கும் ( Structure of
linguistic syllables) புணர்ச்சிக்கும் ( morphophonemic changes) மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவேதான்
தற்போதைய Optimality Theory -இல் இயற்கைமொழிகளின்
மொழியசை ஆய்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. Sonarity wave போன்ற கோட்பாடுகள்
எல்லாம் அநேகமாக எல்லா மொழிகளுக்கும் பொருந்திவருகிறது. ஒலியன்களுக்கும்
உருபன்களுக்கும் இடையில் நீடிக்கிற மொழியசை அலகானது மொழி ஆய்வில் மிக மிக
முக்கியமானது. ஆனால் தமிழில் மொழியசை ஆய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை
என்பதே எனது கருத்து. அசை என்றாலே யாப்பு அசைக்குச் (Prosodic syllables) சென்றுவிடுகிறோம்.