ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும்

 

பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும்

(ந. தெய்வ சுந்தரம்)

 

0. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய மக்களின் தேசிய விடுதலைப்போரில் பாரதி ஆற்றிய பங்குபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

0.1. இந்திய தேசிய விடுதலைப்போர்குறித்துப் பாரதி கூறியுள்ள கருத்துகளையும், அப்போரில் பாரதியின் நேரடிப் பங்கையும் ஒருங்கே பார்த்து, இறுதியில் பாரதியின் பங்கை வரையறுக்க இக்கட்டுரை முயலுகிறது.

0.2. பாரதியின் பங்கைச் சரியாகப் புரிந்துகொண்டு மதிப்பிட, இந்திய தேசிய விடுதலைப்போரின் வரலாறு மிக அவசியமாக அமைகிறது. எனவே பாரதி காலம் வரை அமைந்த விடுதலைப்போரின் வரலாற்றைச் சுருக்கமாகக் கட்டுரையின் முதற்பகுதி கூறுகிறது. இரண்டாவது பகுதி பாரதியின் பங்கை அந்த வரலாற்றுச் சூழ்நிலையில் இணைத்து மதிப்பிட முயலுகிறது.

 

1.0. ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சி நிறுவப்படுதல்

1.1. கி.பி.17- ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலே இந்தியாவிற்குள் ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் ஊடுருவத் தொடங்கின. போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேய வணிகக் கம்பெனிகள் இந்தியாவில் நிறுவப்பட்டன. ஆனால் 16- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் (1702) ஆங்கிலேயக் கம்பெனிகள் இணைந்து, கிழந்திந்தியக் கம்பெனியாக  ஆதிக்கம் புரியத் தொடங்கின.

1.2. வணிகக் கம்பெனியாக இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி 1759 – ஆம் ஆண்டு பிளாஸி யுத்தத்திற்குப்பின் வங்களாத்தில் இந்திய மண்மீது ஆட்சியாளராக மாறத் தொடங்கியது. அதன்மூலம் வணிகத்திற்கும் கொள்ளைக்கும் வேறுபாடு இல்லாத வகையில் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கியது. 1765 -ஆம் ஆண்டில் நடைபெற்ற பக்ஸர் யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆங்கிலேயக் கம்பெனியர் வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா ஆகிய மூன்று பகுதிகளிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, அரசு புரியத் தொடங்கினர்.

 

1.3. இந்தியாவில் அரசாட்சியை மேற்கொண்ட ஆங்கிலேயர் மூன்று எதிரிகளைச் சந்திக்க வேண்டியதிருந்தது. அவை: (1) பிற ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் (2) ஆங்கிலேயர் ஆதிக்கத்தை ஏற்க மறுத்த இந்திய மன்னர்கள் (3) ஆங்கிலேயர்களின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய இந்திய உழவர்கள்.

1.4. ஆங்கிலேயர் மேற்கொண்ட மூன்று எதிரிகளையும் வெல்வதற்குத் தமது ராணுவ பலத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளமால், தனது எதிரிகளுக்கிடையே இருந்த முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டனர். உழவர்களுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த முரண்பாடு, அம்மன்னர்களுக்கும் பிற ஐரோப்பியக் கம்பெனிகளுக்கும் இருந்த முரண்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, அரசியல் தந்திரத்தோடு தமது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டனர்.

1.5. தாங்கள் இந்தியாவில் நுழைந்ததிலிருந்து சுமார் நூறாண்டுக்குள் ஆங்கிலேயர் மேற்கூறிய மூன்று சக்திகளையும் வென்று, தங்களது ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

 

2.0.ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியின் மூன்று காலகட்டங்கள்

ஆங்கிலேயக் காலனித்துஅரசு இந்திய மன்னர்களைச் சுரண்டிய வழிமுறைகளின் அடிப்படையில் அதன் இந்திய ஆட்சிக்காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

 

2.1. முதல் காலகட்டம் (1700- 1813)

இக்கட்டத்தில் ஆங்கிலேய நாட்டில் தொழில் உற்பத்தி, வளர்ச்சி அடையவில்லை. வணிக முதலாளித்துவமே ஆதிக்கம் வகித்தது. எனவே இக்கால கட்டத்தில் இந்தியாவிலும் ஆங்கிலேயக் கம்பெனி வணிகச் சுரண்டலையேப் பிரதானமாகக் கொண்டிருந்தது.

 

2.1.1. ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் இந்தியாவில் நுழையத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் விவசாய உற்பத்தியும் பொருள் உற்பத்தியும் நல்ல வளர்ச்சி நிலையில் சென்று கொண்டிருந்தன. எனவே, அந்நியக் கம்பெனிகள் இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவைக் கொள்ளையடித்தன. இந்தியா ஒரு ஏற்றுமதி நாடாக விளங்கியது.

2.1.2. இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர் வணிகத்தின் மூலம் மட்டுமின்றி, வரிகள், நேரடிக் கொள்ளைகள்மூலமும் இந்தியாவைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்குஆலை முதலாளித்துவ வளர்ச்சிக்குஅவசியமான மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒரு முக்கியப் பங்கை வகித்தன.

2.1.3. மேலும் இக்காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சி தனது காலனி அடித்தளத்தைத் திடப்படுத்திக்கொள்வதற்காக, ஏகாதிப்பத்தியத்தின் வருங்காலத்துடன் தங்கள் நலனை இணைத்துக் கொண்ட ஒரு புதிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் தோற்றுவித்தது.1 1793 ஆம் ஆண்டில் காரன்வாலிஸ் பிரபு கொண்டுவந்த நிலத்தீர்வை முறைகள்ஜமீன்தாரி ரயத்துவாரி, மகல்வாரி முறைகள்அதற்கு வழிமுறையாக அமைந்தன.

 

2.2. இரண்டாவது காலகட்டம் (1813-1900)

2.2.1. இக்காலகட்டத்தில் ஆங்கிலேய நாடு தொழிற்புரட்சியைக் கண்டது. ஆலை முதலாளித்துவம் (Industrial Capitalism) வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாய், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் சுரண்டல் முறையும் மாறுபட்டது. ஏற்றுமதியின்மூலம் தாம் இதுவரை செய்துவந்த கொள்ளைமுறையை மாற்றி தங்கள் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வது மூலம் கொள்ளையடிக்க அவர்கள் முற்பட்டனர்.

 

2.2.2. ஆங்கிலேய ஆலை முதலாளித்துவ வளர்ச்சி, இன்னொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்தியாவைக் கொள்ளையடிப்பதற்கான உரிமை, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மட்டுமல்லாமல், எல்லா ஆங்கிலேய முதலாளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையே ஆடம்ஸ்மித், வில்லியம் பெட்டி, டேவிட் ரிகார்டோ போன்ற முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்தனர். இதன் விளைவாய், 1813 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா சட்டம் கொண்டு வரப்பட்டு, இந்தியா எல்லா ஆங்கிலேய முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டது.

2.2.3. மேலும் ஆங்கிலேய ஆலை முதலாளித்துவம் தனது நலனுக்கேற்ப இந்தியாவின் பொருளாதார அடிப்படையை மாற்றி அமைக்கத் தொடங்கியது. இரயில்வே, சாலைவழிப் போக்குவரத்துகள், தபால்தந்தி, நீர்ப்பாசனத் திட்டம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி, இந்தியக் கிராமப் பொருளதாரத்தை நகர்ப்புறச்சந்தையுடன் இணைத்தது; பணப்பொருளாதார முறை வளர்க்கப்பட்டது. விவசாயத்தில் அந்நியர் மூலதனம் ஊடுருவியது.

2.2.4. உணவு உற்பத்தியைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்திய விவசாயம், ஆங்கிலேய ஆலை முதலாளித்துவத்தின் தேவைக்கேற்ப பணப்பொருட்கள் (Cash Crops) உற்பத்தியை நோக்கித் திருப்பிவிடப்பட்டது. இதன் விளைவாக அதுவரை உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா இறக்குமதி செய்யும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டது.

2.2.5. இந்தியக் கைத்தொழில்கள் நசுக்கப்பட்டன. தங்களது பொருள்களுக்குச் சந்தையை விரிவுப்படுத்துவதற்காக, இந்தியப் பொருள்கள்மீதும், பிற அந்திய நாட்டுப் பொருள்கள்மீதும் பல தடைவரிகளை ஆங்கியேர் விதித்தனர்.

2.2.6. இந்திய மூலப்பொருட்களின் விலைகள் பலவந்தமாகக் குறைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் தேவைகளுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது.

 

2.2.7. மேற்கூறிய நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் பல பயங்கரப் பஞ்சங்கள் ஏற்பட்டன. ஏழை, நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.

 

2.3. மூன்றாவது காலகட்டம் (1900-1947)

2.3.1. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனில் ஆலை முதலாளித்துவம் அடுத்த உயர்நிலை அடைந்தது. மூலதனங்கள் ஒரு சில பெரிய முதலாளிகளின் கைகளில் குவிந்தன. உற்பத்திச் சாதனங்களும், உற்பத்தியும் மையப்படுத்தப்பட்டன, இதுவரை ஒரு பொருளின் பல பாகங்களைப் பல்வேறு இடங்களின் பல முதலாளிகள் உற்பத்தி செய்துவந்த நிலைமாறி, அனைத்துப் பாகங்களும் ஓரே இடத்தில் பெரிய முதலாளிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலை தோன்றுகிறது.

2.3.2. மேற்கூறிய வளர்ச்சியின் விளைவாக இதுவரை சுதந்திரமாகப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்த ஆலை முதலாளிகளிடையே சிண்டிகேட், கார்டல் போன்ற கூட்டு நிறுவனங்கள் தோன்றின. சிறுமுதலாளிகள் வீழ்ச்சி அடைந்தனர். பெருமுதலாளிகள் ஏகபோக முதலாளிகளாக வளர்ச்சியடைந்தனர். இதனையே பொருளாதார ஆசிரியர்கள் போட்டி முதலாளித்துவம்  ஏகபோக  முதலாளித்துவமாக மாறியது என்பர். மேலும் ஆலை முதலாளித்துவகளுக்கு நிதி உதவ அளிக்கும் பெரிய பங்கு நிறுவனங்கள் தோன்றி, ஆலைகளில் அவற்றின் மூலதன ஆதிக்கம் வளரத் தொடங்கியது. அதாவது ஆலை மூலதனமும், பங்கு மூலதனமும் இணைந்து நிதி மூலதன ஆதிக்கத்தை உற்பத்தியில் ஏற்படுத்தின.

2.3.3. மேற்கூறிய வளர்ச்சி, இந்தியாவின்ஆங்கிலேயரின் சுரண்டல் முறையில் மாற்றம் கொண்டுவந்தது. இதுவரை இந்தியாவுக்குப் பொருட்களையே ஏற்றுமதி செய்து வந்த ஆங்கிலேய முதலாளிகள், அதற்குப் பதிலாக நிதி மூலதனத்தையே ஏற்றுமதி செய்து, இந்தியாவிலேயே தொழில் உற்பத்தியை மேற்கொள்ள ஆரம்பித்தனர். குறைந்த விலையில் மூலப் பொருட்களும், குறைந்த கூலியில் தொழிலாளிகளும் இந்தியாவில் கிடைத்ததால், மேற்கூறிய நிலையை மேற்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால் ஒருநாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தொழில்களை ஏற்படுத்தாமல், இந்திய மக்களின் அன்றாடத் தேவைக்காபொருடகளை (Consumer Goods) உற்பத்தி செய்யும் ஆலைகளை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர். மேலும் தற்காப்புக்கான ஆயுதங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நிலையும் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து அடித்த கொள்ளைகளையே மறுமுதலீடாக ஆங்கிலேயர் இட்டனர்.

2.3.4. பிரிட்டன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் மேற்கூறிய ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சியை அடைந்தன. இதன் விளைவாய் காலனிநாடுகளைப் பங்குபோடுவதில் அவற்றிற்குள் தீவிரப் போட்டிகள் தோன்றின. இதன் விளைவுகளே முதல், இரண்டாம் உலக யுத்தங்கள்.

2.3.5. ஆங்கிலேயர் ஆட்சியின் இம்மூன்றாவது காலகட்டத்தில் இன்னொரு முக்கியக் கூறு,  ஆங்கிலேயர் கூட்டம் இந்திய வியாபாரிகள், நிலப்பிரபுக்களிடையே இருந்து தங்களுக்கு விசுவாசமான ஒரு முதலாளிக் கூட்டத்தை உருவாக்கினர். (முதல் கட்டத்தில் தங்களுக்கு விசுவாசமான ஒரு புதிய நிலப்பிரபு வர்க்கத்தை ஆங்கிலேயர் உருவாக்கினர் என்று முன்பே பார்த்தோம்). இவர்களைப் பொதுவாகத் தரகு முதலாளிகள் என்று அழைக்கலாம். இவர்கள் தங்களது வளர்ச்சிக்கு அந்நியர்களையே சார்ந்து நிற்பவர்கள் ஆவர். சுருக்கமாகக் கூறினால், அந்நியர்கள் இந்தியாவைச் சுரண்டுவதற்கு இடைத்தரகர்களாக நிற்பவர்கள் இவர்களாவர். இவர்கள் உதவியினால் ஆங்கிலேயர் தங்களது பொருட்களுக்கு இந்திய முலாம் பூசி இந்திய மக்களின் அந்நிய எதிர்ப்பு உணர்வைத் தணிக்க முயற்சித்தனர்.

 

3.0. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டங்கள்

3.1 ஆங்கிலேயர் தங்களது ஆட்சியை இந்திய மக்கள் மீது எதிர்ப்பின்றித் திணிக்கமுடியவில்லை. இந்திய மக்கள் கோழைகளாக இருந்து விடவில்லை. ஏகாதிபத்தியவாதிகள் செய்த மனிததன்மையற்ற கொள்ளைகள், சூறையாடுதல், அழிவு, சதிகள், மோசடிகள், காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்கள் ஆகியவற்றால் கோபமுற்று ஆத்திரமடைந்த இந்திய மக்கள் கலகப்பாதையை மேற்கொண்டார்கள். பல வீரமிக்க சண்டைகளைச் செய்தார்கள். எதிரிக்குப் பல வன்மையான அடிகளைக் கொடுத்தார்கள். கி.பி.1757ஆம் ஆண்டிலிருந்து 1857வரை நூற்றாண்டு காலமானது உழவர்களும் பழங்குடிகளும் நடத்திய கலகங்களும் ஆயுதந் தாங்கிய எழுச்சிகளும் நிறைந்த நூற்றாண்டாகவே இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய சண்டைகளும் போராட்டங்களும் நாட்டு மக்களுடன் மட்டும் நின்று விடவில்லை. ஏகாதிபத்தியப் படையிலிருந்த இந்தியப் படைவீரர்களும் அவர்களை எதிர்த்துப் பல கலகங்களிலும் சண்டைகளிலும் ஈடுபட்டனர்.

3.2 இந்நூற்றாண்டில் நடைபெற்ற பல தனித்தனியான தொடர்பற்ற ஆயுதமேந்திய கலகங்கள், எழுச்சிகள் ஆகியவை அனைத்தும் சங்கமித்த ஒரு உணர்ச்சிமிக்க போராட்டமாகவே 1857- இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் அமைந்தது.

3.2.1 இத்தகையதொரு பரவலான ஆயுதந்தாங்கிய எழுச்சி இந்திய வரலாற்றில் ஒரு புதிய போக்காகும். இதற்குமுன் நடைபெற்ற ஆயுதந் தாங்கிய மோதல்கள் அனைத்தும் தனித்தனியான சம்பவங்களாகவே இருந்தன. அவை ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியின் தன்மையை அடையவில்லை. இப்போரில் நேர்முகமாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஈடுபடாத பகுதிகள் இந்தியாவில் இல்லை.

3.2.2 ஏகாதிபத்தியப் பீரங்கிகளை எதிர்த்து மக்கள் ஓராண்டு காலம் போராடினார்கள். இப்போரில் அவர்கள் வெளிப்படையான சண்டைகளையும் நடத்தினார்கள். கொரில்லாப் போர் முறையையும் மேற்கொண்டார்கள்.

3.2.3 புரட்சியைப்பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிராததினாலும், பலவீனமான ஊசலாடும் தன்மையுடைய ஒரு தலைமையாக அதன் தலைமை இருந்ததினாலும் நன்கு ஒழுங்கமைப்படாத இயல்புடையதாய் அப்போர் இருந்தமையினாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அப்போர் வெற்றிபெற இயலவில்லை. இருப்பினும் அப்போர் ஒரு புத்துணர்வுபெற்ற ஒரு புதிய நாட்டை நமக்கு அளித்துச் சென்றது.2

3.3 ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்களுக்குச் சமூக அடிப்படையாக நிலப்பிரபுத்துவ வர்க்கம் இருந்த காரணத்தால், இந்திய மக்கள் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போரிலும் ஈடுபட வேண்டியத்திருந்தது. ஈடுபடவும் செய்தனர்.

3.3.1 இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளருக்கும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரும் தடையாக அமைந்தனர். எனவே இந்த இரண்டு வர்க்கங்களுக்கும் எதிரான போராட்டமாகவே இந்திய மக்களின் விடுதலைப்போர் அமைந்தது. மக்கள் ஆங்காங்கே நடத்திய நிலப்பிரபுத்தவ எதிர்ப்புப் போராட்டங்களே நாடு தழுவிய ஆங்கிலேய ஆட்சியாளருக்கு எதிரான தேசிய விடுதலைப் போராக வளர்ச்சியடைந்தன.

3.4. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வஹாபி புரட்சி அமைப்பு ஒன்று இந்தியாவில் தோன்றியது. ஆங்கிலேய ஆட்சியை ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடியோடு தகர்த்தெறிவதும் இந்தியப் பிற்பொக்குச் சமூக அமைப்பை மாற்றி ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்குவதும் அதன் நோக்கிங்களாக இருந்தன. இந்த அமைப்பு ஆங்கிலேயர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராகப் பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடத்தியது. 1857- ஆம் ஆண்டுப் போரிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போரின் தோல்விக்குப்பிறகு அகில இந்திய அடிபடையிலும் ஒரு ஆயுதந்தாங்கிய எழுச்சியை நடத்த இந்த அமைப்பு திட்டம் இட்டிருந்தது. ஆனால் தெளிவில்லாத காரணத்தாலும், புரட்சிபற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லாத காரணத்தாலும் இத்திட்டம் வெற்றிபெற இயலவில்லை.

3.5. 1849- ஆம் ஆண்டிலிருந்து 1890- ஆம் ஆண்டு வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில் 42 ஆயுதத்தாங்கிய எழுச்சிகளை உழவர்களும், பழங்குடியினரும் நடத்தியுள்ளனர் என்றும், அதன் விளைவாக பிரிட்டன் படையைச் சேர்ந்தவர்கள் 2173 பேர்கள் உயிரிழந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

3.6. 1913 – ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் கேதர் கட்சி (Chadar Party) என்னும் பெயரில் ஒரு புரட்சி அமைப்பை உருவாக்கினார்கள். பிரிட்டன் ஏகாதிபத்திய ஆட்சியை ஆயுதப் புரட்சி மூலம் இந்தியாவிலிருந்து தூக்கியறிவதே தனது நோக்கமென அது பிரகடனப்படுத்தியது.

3.6.1. 1914- ஆம் ஆண்டில் அக்கட்சி தனது புரட்சி வீரர்களை இந்தியாவுக்குள் அனுப்ப முடிவெடுத்தது. சுமார் 3000 வீரர்கள்  பல்வேறு மார்க்கங்களில் இந்தியாவுக்குள் நுழைந்தனர். புரட்சிக்கான தேதியாக 1916- ஆம் ஆண்டு பிப்ரவரி 21- ஆம் நாள் குறிப்பிடப்பட்டது. ஆனால் முன்கூட்டியே எதிரிக்குத் தகவல் கிடைத்துவிட்டதால், புரட்சியாளர்கள் பெரும்பாலோர் பிடிப்பட்டனர். கோமகட்டா மாறா என்ற ஜப்பானியக் கப்பல்மூலமாக வந்த புரட்சியாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     3.7. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளாவில் மலபாரைச் சேர்ந்த மாப்ளா விவசாயிகள் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. விவசாயிகள் பிரிட்டன் ராணுவத்தைச் சுற்றி, பலத்த சேதம் ஏற்படுத்தினர். ஏரநாடு, வள்ளுவநாடு என்ற இரு தாலுக்காக்களையேக் கைப்பற்றிச் சுந்ததிரப்பிரகடனம் செய்தனர். சுமார் 6 மாதகாலத்திற்கு மலபாரின் தென்பகுதி முழுவதும் மாப்ளா விவசாயிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்குப்பிறகு, உள்நாட்டு துரோகிகளின் உதவியுடன் பிரிட்டன் ராணுவம் தன் ஆதிக்கத்தை மீண்டும் அங்கே நிலைநாட்டியது.

3.8. மேலும், பஞ்சாபில் கூகா மக்களின் ஆயுதப் போராட்டம், மஹாராஷ்டிரா, குஜராத், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதப் போராட்டங்கள் ஆங்கிலேயரை நடுங்க வைத்தன. பீஹாரில் நடைபெற்ற சந்தால் ஆயுதப் போராட்டமும் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

3.9. மேற்கூறிய விவசாயிகள் போராட்டங்களுடன் தொழிலாளிகளின் போராட்டங்களும் நாடெங்கும் வெடிக்கத் தொடங்கின. சென்னை, பம்பாய், கல்கத்தா தொழிலாளிகள் பல்வேறு வேலை நிறுத்தங்களில் ஈடுப்பட்டனர். 1905- ஆம் ஆண்டு பம்பாய் போராட்டம் 1906 ஆம் ஆண்டு வங்காளத்தில் பொது வேலைநிறுத்தம், 1907 ஆம் ஆண்டு பஞ்சாப் ரயில்வேத் தொழிலாளிகள் போராட்டம் ஆகியவை இந்திய ஆட்சியாளரை நடுங்க வைத்தன.

3.9.1. 20 நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மத்தியதர படித்த வர்க்கத்தினரிடையே இருந்து சில புரட்சிக்குழுக்கள் தோன்றின. இக்குழுக்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினர் தனிப்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகளைக் கொல்வது மூலம் அந்நிய ஆட்சியினரை அதிரச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர்கள்; இரண்டாவது வகையினர் இராணுவம் அமைத்து பிறநாடுகளின் ராணுவ உதவியுடன் ஆங்கிலேய ஆட்சியைத் தகர்க்கலாம் என்ற கொள்கையுடையவர்கள். பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்றோர் முதல் வகையினரைச் சேர்ந்தவர்கள். காதர் கட்சியினர் வங்காளத்தில் அமைத்த அனுசிலன் சமிதியைச் சேர்ந்த அமைப்பினர் இரண்டாவது வகையினரைச் சேர்ந்தவர்கள்.

3.9.2 பஞ்சாப், ராஜஸ்தான். உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், மைசூர், ஒரிசா, சென்னை ஆகிய இடங்களிலும் மேற்கூறிய புரட்சி அமைப்புகள் செயல்பட்டன. 1912-இல் வைஸ்ராயாக இருந்த ஹார்டிங்மீது பஞ்சாப் புரட்சியாளர்கள் வெடிகுண்டு வீசினர். வங்காள அனுசிலன் சமிதியினர் 1907- 17க்குள் 64 ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். திருநெல்வேலியில் ஆஷ்துரை என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேற்கூறிய புரட்சியாளர்கள் மீது நாசிக் சதிவழக்கு, அலிப்பூர் சதிவழக்கு ஆகியவை போடப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டனர்.

3.9.3 மேற்கூறிய ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் வீரஞ் செறிந்த விடுதலை உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் இது இந்திய விடுதலைப் போர் கத்தியின்றி, ரத்தமின்றி நடத்தப்பட்டது என்ற புரட்டல் வாதத்தை  அம்பலப்படுத்துகிறது. இருப்பினும் புரட்சியைப்பற்றி ஒரு தொலை நோக்குப்பார்வை இல்லாததன் காரணமாகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான புரட்சிகர அமைப்பும் தலைமையும் இல்லாததன் காரணமாகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான புரட்சிகர அமைப்பும் தலைமையும் இல்லாததன் காரணமாகவும், வர்க்கங்களைப்பற்றிய தெளிவின்மை காரணமாகவும் போராட்டங்கள் வெற்றிபெறவில்லை.

 

4.0. ஆங்கிலேயரின் சூழ்ச்சி

4.1. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய மக்களின் போராட்டங்களை இருவழிகளில் அடக்க முயற்சித்தன. ஒன்று நேரடி பலாத்கார அடக்குமுறை; மற்றொன்று கருத்துரீதியான மக்களைச் செயலற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை. நேரடி அடக்குமுறைக்கு ஜாலியன் வாலாபக் படுகொலை போன்ற பல வரலாறுகள் உள்ளன. கருத்துரீதியாக அடக்குவதற்கு மதத்தலைவர்கள் பயன்பட்டனர். சமூகச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மதத் தலைவர்கள். மக்களை அந்நியருக்கு எதிரான போராட்டத்திலிருந்து திசை  திருப்ப முயற்சித்தனர். நாட்டு விடுதலைக்குப் பதில் ஆன்மீக விடுதலையை முன்வைத்தனர். இராஜாராம் மோகன் ராயின் பிரம சமாஜம், தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம் போன்றவை மேற்கூறிய பணிகளையே செய்தன.

4.2. அடுத்து, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மதஜாதிப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டனர். இந்துமுஸ்லீம் பகைமையை வளர்த்தனர். பிரித்து ஆள்வது (Divide and Policy) என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர். இதன் உச்சகட்ட நடவடிக்கையாக 1905- ஆம் ஆண்டு அரசியல் சட்டங்கள் வகுப்புவாரி பிரநிதித்துவம் என்ற சலுகை அளிப்பதாகக் கூறி, இந்து- முஸ்லீம் ஒற்றுமையைத் தகர்க்கவே முயற்சித்தன.

 

4.3. மேலும், ஆங்கிலேய ஆட்சியாளர் இந்திய மக்களுக்கு எதிரான தமது அடக்குமுறைக்கு ஆதரவையும் உதவியையும், தாம் உருவாக்கிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடமிருந்தும், தரகு முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்தும் பெற்றனர். 1858-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி செய்த ஏகாதிபத்திய முடியாட்சியின் பிரகடனத்தின்மூலம் மன்னர்களுக்கும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கும், முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

4.4. 1361, 1891, 1909, 1919- ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சில அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் மூலம் தரகு முதலாளித்துவக் கூட்டத்தினருக்கு வர்த்தகம், நிர்வாகம், கல்வி முதலியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட்டன.

4.5. சுருங்க கூறின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒருபுறம் படையைப் பலப்படுத்துவதும், மறுபுறம் அரசியல், சட்ட, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் ஆகிய இரட்டைத் தந்திரத்தை மேற்கொண்டு, தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிஜ தோட்டாக்களையும், தேன் தடவிய தோட்டாக்களையும் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தத்தொடங்கியது.4

 

5.0. காங்கிரஸ் கட்சியின் தோற்றம்

5.1. காங்கிரஸ் கட்சியின் தோற்றம்பற்றி ஆராய்ந்த திரு.மா.பொ.சி, அவர்கள், 1857 சிப்பாய் கலகத்திற்கும் 1885- இல் காங்கிரஸ் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

இடைப்பட்ட இருபத்தேழாண்டுகளில் நாட்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குஎதிரான கிளர்ச்சிகளும், முயற்சிகளும் அங்குமிங்குமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. ஆனால், அவை சரித்திராசிரியர்களால் சரியாகப்  போற்றப்படவில்லை.

நானா, தோப்பே, லட்சுமிபாய் ஆகிய வீரத்திலங்கள் நடத்திய விடுதலைப் போர் வெளிப்படையாகத் தோற்றுவிட்டது என்றாலும், உரிமைக் கனல் உள்ளங்களிலே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதானிருந்தது. திரும்பவும் முன்னைவிடவும் வலுவான முறையில் மக்கள் புரட்சி தோன்றக்கூடுமென்ற அச்சம் ஆங்கிலேயருக்கு இருந்து வந்தது. அப்படி ஒரு புரட்சி எழுமாயின், அது முன்போல வெறும் மதரீதியானதாக அல்லாமல், முற்றிலும் அரசியல் பொருளியல் ரீதியானதாக இருக்கக்கூடுமென்று கருதுவதற்கான அறிகுறிகளும் வெளிப்படலாயின5

5.2. காங்கிரஸ் கட்சியின் தோற்றத்தின் அவசியத்தை டாக்டர் பட்டாபி சீதாராமய்யரின் கூற்றுமூலம் ம.பொ.சி. நமக்கு தெளிவுப்படுத்துகிறார். அவர் கூறுவதாவது, தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு, சிறிதும் செவிசாய்க்காமல் இருப்பது கண்டு இந்திய மக்களில் அறிவாளிகளானோர் கடுங்கோபம் கொண்டனர். ஜனநாயக முறையில் இயங்காத ஆங்கில அரசை வீழ்த்திடத் திரும்பவும் நாடு முழுவதும் பல இடங்களில் சதிச் செயல்கள் நடக்கலாயின. அரசின்பால் மக்களுக்கிருந்த வெறுப்பு மனப்பான்மையும் விரோதப் போக்கும், பம்பாய், தட்சிண விவசாயிகள் கலகத்தின் வாயிலாக வெளிப்பட்டன. இந்த நிலையில்தான் ஆக்டோலியன் ஹ்யூம் என்பவர் இந்நாட்டினரின் துயர்களை அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைத்துப் பரிகாரங்கள் காண்பதற்கென இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை நிறுவினார். (காங்கிரஸ் மகாசபை வரலாறு பக்கம் 5)6.

 

பின், .பொ.சி. பின்வருமாறு கூறுகிறார்.

அந்நியருக்கு அடிமைபட்ட நாடுகளிலே வேறு எந்த ஒரு நாட்டிலும், அடிமைப்படுத்திய அந்நியரால் விடுதலைப் புரட்சியோ, கிளர்ச்சியோ தோற்றுவிக்கப்பட்டதாக உலக வரலாறு கூறவில்லை. இந்திய நாட்டிலும் ஹ்யும் துரை காங்கிரஸ் மகாசபையை நிறுவ முன்வந்தது இந்தியாவை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அல்ல. பிற்காலத்தில் இப்படி ஒரு தவறான எண்ணம் இந்திய விடுதலை வீரர்களுக்கேகூட ஏற்பட்டுவிட்டது. அது ஹ்யூம் துரைமகனாரின் அதிர்ஷ்டம் போலும்! ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்துவதற்காகவே ஹ்யூம் காங்கிரஸ் மஹாசபை நிறுவினார் என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது. அது எப்படியாயினும், இந்தியாவில் நிலவிய ஆங்கிலேயக் கொடுங்கோலாட்சியைச் செங்கோலாட்சியாக மாற்றும் நன்னோக்கம் அவருக்கு இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தவகையில் இந்திய மக்களுக்கு உத்தியோகம் தேடித்தரும் (எம்பிளாய்மெண்டு எக்சேஞ்) அமைப்பாக காங்கிரஸ் மகாசபையை ஹ்யூம் தோற்றுவித்தார்.7

5.3. மேலும், .பொ.சி. ஹ்யூம் யார் என்பதைப்பற்றி ஆராய்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

அரசு அலுவலிருந்தபோது, 1857- இல் நடந்த சிப்பாய் புரட்சியின்போது வங்காளத்தில் எட்டாவா மாவட்டத்தில் துணை மாஜிஸ்திரேட்டாகவும் துணைக் கலெக்டராகவும் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பணிபுரிந்தார். அப்போது, அனந்தராம் என்ற சிற்றூரில் புரட்சியாளருக்கும் இவருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. அந்நேரத்தில் இந்தியர்களாலேயே இவர் காப்பாற்றப் பட்டார். இதுபற்றிய விவரம் எட்டாவா மாவட்ட அரசிதழில் இடம் பெற்றுள்ளது. புரட்சியை ஒடுக்கத் துணிவுடன் தொண்டாற்றியதற்காக அரசு இவருக்கு.பி.என்ற பட்டத்தை வழங்கியது.

இவர் அரசு அலுவலிலிருந்து ஓய்வுபெற்றதும் 1847 புரட்சிபற்றி ஆய்வு நடத்தும் வேலையைத் தாமாகவே மேற்கொண்டார். அரசு இவர் கோரும் ஆவணங்களையெல்லாம் கொடுத்து ஒத்துழைத்தது. இந்த ஆய்வின் விளைவாக, 1857- இல் ஏற்பட்டது போன்ற ஒரு பயங்கரமான வன்முறைப் புரட்சி திரும்பவும் எந்த நேரத்திலும் தோன்றக் கூடும் என்று கூறி, அரசை எச்சரித்தார். இதனைப் புரட்சியின்போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டும் கூறினார்.8

 

5.4. காங்கிரஸை ஹ்யூம் ஏன் தோற்றுவித்தார் என்பதை ஆராய்ந்து ம.பொ.சி. பின்வருமாறு கூறுகிறார்.

புதிதாகத் தோன்றியிருந்த பட்டதாரி சாதியினர் தேசிய எழுச்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு வருதை இவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். ... படித்தவர்களிடையே அபாயத்தில் அறிகுறியாக ஹ்யூம் மதிப்பிட்டிருக்க வேண்டும்.... பட்டதாரிகள் நிலை ஒரு புறமிருக்க, சாதாரணத் தொழிலாளிகள் உழவர்கள் ஆகியோரிடையிலும் பொருளியல் வர்க்கரீதியான போராட்ட உணர்வு ஏற்பட்டு வருவதையும் ஹ்யூம் தெளிவாக உணர்ந்தார்... இப்படி, படித்த பட்டதாரிகள், மாணவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகிய பல்வேறு பகுதியினரும் பிரிட்டிஷ் அரசின்பால் வெறுப்புற்றிருப்பதால், எந்த நேரத்திலும் அவர்களனைவரும் ஒன்றுபட்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபடுவது சாத்தியம் என்பதைத் தமது மதிநலத்தால் முன்கூட்டியே ஹ்யூம் அறிந்தார்.... இந்த நிலையில் பட்டதாரிகளின் உத்தியோக நலன்களுக்காக நடத்தப்படும் தேசியக் கிளர்ச்சியை ஏற்றுக்கொண்டு, சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை அந்தப் படித்தவர்கள் தலைமையில் கீழ்கொண்டு வருவதே 1857- இல் ஏற்பட்டது போன்ற ஒரு பயங்கரப் புரட்சி தோன்றுவதை அடியோடு தவிர்க்கும் என்று தீர்க்கதரிசனத்தால் அறிந்து கொண்டார்....... காங்கிரஸ் மகாசபை தொடங்குவதற்கு முன்பு ஹ்யூம் அவர்கள், கவர்னர் ஜெனரல் டிப்ரின் என்பவரைப் பார்த்துப் பேசினார். முதலில் சமூக சீர்திருத்தக் குறிக்கோளுடையதாகவே காங்கிரசை ஏற்படுத்த அவர் விரும்பினார். அவரை அரசியலுக்குத் திருப்பிவிட்டவர் டிப்ரின் பிரபுதான்.... ஹ்யூம், கவர்னர் ஜெனரல் டிப்ரின் பிரபுவைக் கலந்து ஆலோசித்து, அவர் விரும்பியபடி சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டுமல்லாமல், படித்தவர்களுக்கு- பட்டதாரிகளுக்கு உத்தியோகம் தேடித்தரும் அரசியல் அமைப்பாகவும் காங்கிரஸ் மகாசபையைத் துவக்க முற்பட்டார்.9

.பொ.சி. அவர்கள் தனது கருத்துக்குச் சாதகமாக முன்னாள் அமெரிக்க தூதுவர் செஸ்டர் பௌல்ஸும், மேற்கு ஜெர்மனி வரலாற்றுப் பேராசிரியர் டைட்மேயர் பிரதர்மண்ட் என்பவரும் கூறியுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டுகிறார்.10

5.5. காங்கிரசின் தோற்றம் பற்றிய ம.பொ.சி. கருத்து மிகச் சரியாகவே உள்ளது. ஆனால் காங்கிரசின் தலைமை படித்த மத்திய தரவர்க்கத்தினரின் தலைமை என்ற அவரது கூற்று விவாதத்திற்குரியது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் வளர்க்கப்பட்ட வடஇந்தியத் தரகு முதலாளித்துவக் கூட்டமே காங்கிரஸ் தலைமையில் அடிப்படைச் சக்தியாக அமைந்தது. அந்த வர்க்கத்தின் நலன்களையும் நிலப்பிரபுத்துவ வர்கத்தின் நலன்களையும் பிரதிபலித்த ஆங்கிலேயக் கல்விபெற்ற கோகலே, தாதாபாய் நவுரோஜி போன்றவர்களே காங்கிரஸ் தலைமையில் அமர்ந்தனர்.

காங்கிரசின் தோற்றத்தை மேற்கண்டவாறு ஆராயும்போது, மக்களின் விடுதலைப் போராட்டத் தீயை அணைக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் தீயணைப்புப் படையாகவே செயல்பட்டது11 என்பது தெளிவாகிறது.

 

6.0. காங்கிரஸ் போராட்ட வடிவம்

6.1. வருடத்திற்கு ஒருமுறை கூடி, ஆங்கிலேய அரசுக்குத் தனது விசுவாசத்தை தெரிவிக்கும் தீர்மானத்துடன் தொடங்கி, தான் பிரதிபலித்த வர்க்கங்களின் நலன்களுக்குத் தேவையான சில சீர்திருத்தங்களைப்பற்றி முடிவு செய்வதும், அவற்றை நிறைவேற்றித் தரும்படி ஆங்கிலேய அரசிடம் மனுகொடுத்து வேண்டுவதும் காங்கிரசின் போராட்ட வடிவமாக 1905 வரை இருந்துவந்தது. இக்காங்கிரசுக்கு ஆங்கிலேய அரசே தனது பிரதிநிதிகளை அனுப்பிவைத்தது. இந்தியக் கவர்னர் ஜெனரல்களும் வாழ்த்துச் செய்தி அனுப்புவது உண்டு.

6.2 1905ஆம் ஆண்டு இந்து-முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகக் கவர்ஸன் பிரபுவால் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபிறகு, அதனால் ஆத்திரமடைந்த சில நடுத்தர வர்க்கத்தினர்இந்தியக் கல்வி பெற்றவர்கள்காங்கிரசில் இணைந்து செயல்படத் தொடங்கினர். பாலகங்காதர திலகர், விபினசந்திரபாலர், லாலா லஜபதிராய் போன்றவர்கள் மேற்கூறிய வகையினரைச் சேர்ந்தவர்களே வர். இவர்கள் குட்டி முதலாளித்துவ மதிப்புடன் ஆங்கிலேயர்களிடம் தங்களது உரிமைகளைப் பெறவேண்டும் என்று நினைத்தனர். இதுவரை காங்கிரஸ் லண்டன் சென்று, ஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்து பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று இவர்கள் கூறினர்.  மேலும், இந்திய மக்களைத் திரட்டி அதன்மூலம் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிக் கொடுத்து உரிமைகளைப் பெற வேண்டும் என்று இவர்கள் கூறினர். முதல் வகையினர் மிதவாதிகள் என்றும், இரண்டாவது வகையினர் தீவிரவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

6.3. காங்கிரஸின் வரலாற்றைப் பார்க்கும்போது, 1906- ஆம் ஆண்டுவரை அது இந்திய சுதந்திரம்பற்றிப் பேசியதே கிடையாது என்பது தெரியவருகிறது. 1905- ஆம் ஆண்டில்தான் இந்தியச் சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டங்களிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக, காங்கிரஸ் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளுகைக்குள் ஒரு பொறுப்பாட்சியை நிறுவுதற்கான கோஷங்களை முன்வைத்தது. இதில் மிதவாதிகள், தீவிரவாதிகள் இருவருக்குமிடையில் வேறுபாடு கிடையாது.12 போராட்ட வடிவத்தில்தான் இருவருக்குமிடையே வேறுபாடு நிலவியது. மிதவாதிகள் வருடக் காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானங்கள் போட்டு, ஆங்கிலேய அரசுக்கு மனு அனுப்பி வேண்டிக்கொள்ளவேண்டும் என்று கூறினர். தீவிரவாதிகளோ காங்கிரசை வருடம் முழுவதும் செயல்படும் மக்கள் இயக்கமாக மாற்றி, மக்கள் போராட்டங்களின் மூலம் (சட்டத்தின் உட்பட்ட போராட்டங்கள்தான்) இந்தியர்கள் உரிமைகள் பெறுதல் வேண்டும் என்று கூறினர்.

6.4. வங்கப் பிரிவினையை எதிர்த்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட தீவிரவாதக் காங்கிரஸ் தலைவர்கள் பகிஷ்கரிப்பு, சுதேசியம், பிரிட்டனின் ஆட்சிக்கு உட்பட்ட சுயராஜ்ஜியம், தேசியக் கல்வி என்ற நான்கு கோஷங்களின் அடிப்படையில் இந்திய மக்களை அணிதிரட்டி, ஆங்கிலேய அரசைப் பணிய வைக்கவேண்டும் என்று கூறினர். மிதவாதிகளோ சுதேசியம், சுயராஜ்ஜியம் என்ற இரு கோஷங்களும் அவர்களது இராஜவிசுவாசத்திற்குத் தடையாக அமையாது என்பதேயாகும். 20- ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களுக்குக் கடுமையான போட்டியாக அமைந்த பிற ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை இந்தியாவிங் நுழையவிடாமல் தடுக்க, இக்கோஷம் பயன்படுவதாக அமைந்தது, ஆனால் தேசியக் கல்வியும், ஆங்கிலேயப் பொருள்களைப் பகிஷ்கரிப்பதும் தங்களது எஜமான விசுவாசத்துக்குத் தடையாக அமையும் என்று மிதவாதிகள் எண்ணினர். மேலும், தீவிரவாதிகள் மேற்கூறிய நான்கு கோஷங்களையும் மக்களைத் தட்டியெழுப்பும் அரசியல் கருவியாகப் பயன்படுத்த விரும்பினர். ஆனால் மிதவாதிகளோ தற்காலிகமான பொருளாதார நடவடிக்கையாகச் சுதேசியத்தைப் பார்த்தனர். இப்பிரச்சினையில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் 1905- ஏற்பட்ட மோதல், 1907-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் கலகத்தை ஏற்படுத்தி காங்கிரசை இரண்டாக உடைய வைத்தது.

6.5. காங்கிரசின் தலைமையில் இருந்த ஆங்கிலேய அரசின் விசுவாசிகளான வட இந்தியத் தரகு முதலாளிகளைகாங்கிரசின் மிதவாதிகளைஎதிர்த்து, திலகர் போன்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் வெற்றி பெற இயலவில்லை. ஆங்கிலேய அரசும் தீவிரவாதிகள் மீது கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டன. 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரசில் மிதவாதிகள் ஆங்கிலேயப் போலீசின் உதவியால் தீவிரவாதத் தலைவர்களைத் தாக்கினர். திலகர் 1907- ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். லஜபதிராயும், விபன் சந்திரபாலரும் சுய தீவாந்திர வாழ்க்கையை, மேற்கொண்டனர். அரவிந்தர் பாண்டிச்சேரி சென்று துறவை மேற்கொண்டனர்.

1907-ஆம் ஆண்டிலிருந்து 1914 வரை காங்கிரஸ் இயக்கம் மொத்தத்தில் செயலற்றுக் கிடந்தது. 1915-இல் அன்னிபெஸண்ட் அம்மையார் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஒற்றுமையை’’ ஏற்படுத்தி காங்கிரசை மறுபடியும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளின் மக்களின் போராட்டத் தீயை அணைக்கும் தீயணைப்புப்படையாகச் செயல்படவைக்க முயற்சி எடுத்தார். திலகரும் அதற்கு இணங்கினார்.

6.7. இதுவே 1921 ஆம் ஆண்டுவரை நிலவிய காங்கிரசின் நிலையாகும். இக்காலகட்டத்தில் சொல்லளவில்கூட உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைக் காங்கிரஸ் ஏற்கவில்லை. இந்தியாவிற்கு முழு சுதந்திரம் என்பதும் வைக்கப்படவில்லை.

6.8. மாறாக மிதவாதிகளுடன் இணைந்து திலகர் போன்ற தீவிரவாதிகளும், ஆயுதந்தாங்கிய விடுதலைப் போரை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவுக்கு முழு விடுதலை பெறவேண்டும் என்று கூறிச் செயல்பட்ட சில உண்மையான புரட்சி அமைப்புகளைக் கண்டித்தனர்.13

6.9. மேலும், திலகர், விபினசந்திரபாலர், லஜபதிராய் போன்றவர்கள் இந்துமத வெறியுடன் செயல்பட்டு, இந்துமுஸ்லீம் வேறுபாடு தீவிமடையக் காரணமாகவும் அமைந்தனர். இந்து ஸ்வராஜ்யமே அவர்கள் நோக்கமாக அமைந்திருந்தது.

 

7.0. பாரதியின் காலகட்ட அரசியல் சூழ்நிலை

7.1. பாரதியின் காலகட்டம், ஆங்கிலேயரின் சுரண்டல் ஏகாதிபத்தியச் சுரண்டலாக வளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும். இக்காலகட்டத்தில்தான் 1885 முதல் 1904 வரை காங்கிரஸில் நீடித்துவந்த வடநாட்டுத் தரகு முதலாளித்துவத் தலைமையை, திலகர் போன்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்க்கத் தொடங்கினர். காங்கிரஸின் பழைய நடைமுறைகளை அவர்கள் எதிர்த்தனர். மக்களைச் சார்ந்த இயக்கமாகக் காங்கிரசை மாற்ற அவர்கள் எண்ணினர். பகிஷ்கரிப்பு, சுதேசியம், சுயராஜ்ஜியம், தேசியக் கல்வி என்ற நான்கு முழக்கங்களை முன்வைத்து, அரசியல் இயக்கத்தை முன்கொண்டு செல்ல அவர்கள் முயற்சித்தனர்.

7.2. ஆங்கிலேயர் அரசாரும் இக்காலகட்டத்தில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்து முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைக்க, வங்காளப் பிரிவினையை 1905- இல் ஏற்படுத்தினர். காங்கிரஸ் தீவிரவாதிகளை அவர்கள் வேட்டையாடினர். 1900 – 1919 ஆம் ஆண்டுகளில் மிண்டோ மார்லின் சீர்திருத்தம் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகிய சட்டங்கள்மூலம் இந்திய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சி எடுத்தனர். போலித்தன்மை கொண்ட தேர்தல், மக்கள் சபை ஆகியவற்றை இந்தியாவுக்கு அவர்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கினர்.

7.3. காங்கிரசின் மிதவாத- தீவிரவாதத் தலைவர்களுக்கு இடையே நீடித்த தகராறு முற்றி, 1907- இல் காங்கிரஸ் இயக்கம் தேக்கமுற்று இருந்தது. பின் அன்னிபெஸண்டின் முயற்சியால் மிதவாத தீவிரவாதித் தலைவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு, ஹோம்ரூல் இயக்கம் தோன்றியது.

 

8.0. பாரதியின் அரசியல் வாழ்க்கை

8.1. 1904- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் அமர்ந்ததுடன், பாரதியின் அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம். உலக அரசியல் செய்திகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து, அப்பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய காரணத்தால், அவருடைய அரசியல் அறிவு வளர்ச்சியடைந்தது.

8.2. 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான திலகர். விபினசந்திரபாலர் ஆகியோரின் போராட்டம். பாரதியைக் காங்கிரஸ் அரசியலுக்கு இழுத்துச்சென்றது. அப்போராட்டத்தால் உந்தப்பட்டு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் செயல்படத் தொடங்கினார். திலகரின் தீவிரவாதக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார்.

அந்த ஆண்டு பாரதி காசிக் காங்கிரசுக்குச் சென்று பங்கேற்றார். சென்னை திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிந்தித்தா தேவியைச் சந்தித்தார்,

சுதேசமித்திரன்பத்திரிகை மிதவாதத் தலைவரான ஜி. சுப்பிரமண்ய அய்யரின் பத்திரிகையாதலால், அவரால் தனது தீவிரவாதக் கருத்துகளை அதில் எழுதமுடியவில்லை. இந்நேரத்தில் அவருக்குத் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய சுரேந்திரநாத் ஆர்யா, சர்க்கரைச் செட்டியார், வக்கீல் துரைசாமி அய்யர், ஹரிசர்வோத்தமராவ், ..சி. ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவர்களுடைய உதவியுடன் அவர் இந்தியா பத்திரிகைப் பொறுப்பாசிரியராக அமர்ந்தார். தனது கருத்துகளை வெளிப்படையாக எழுதினார். இப்பத்திரிக்கைதான் தமிழ்நாட்டின் தீவிரவாதிகளின் ரே தமிழ்ப் பத்திரிகையாக இருந்தது. பின் பாலபாரதா என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்.

8.3. 1906ஆம் ஆண்டில்தான் விபினசந்திரபாலரைச் சென்னைக்கு வரவழைத்து, சொற்பொழிவு செய்யப் பாரதியார் ஏற்பாடு செய்தார்.

8.4. 1907 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரசுக்குச் சென்றார். தன்னுடன் ..சி., மண்டபம் ஸ்ரீநிவாஸாச்சாரி ஆகியோரைக் கொண்ட சென்னைத் தீவிர இளைஞர் குழுவை அழைத்துச் சென்றார். காங்கிரசில் தீவிரவாதக் குழுவை ஆதரித்தார். இந்நேரத்தில்தான் அவர் திலகர், லஜபதிராய் ஆகியோரை நேரடியாகச் சந்தித்தார். ..சி. யின் சுதேசியக் கம்பெனிக்கு நிதி வசூல் செய்து அளித்து உதவினார். இதே ஆண்டில்தான் அவருடையசுதேசி கீதங்கள்வெளிவரத் தொடங்கின. அரசியல் உலகில் இருந்துகொண்டு, இலக்கிய உலகிலும் செயல்படத் தொடங்கினார்.

8.5. 1908- ஆம் ஆண்டில் சென்னையில் சுயராஜ்ஜியத் தினம் கொண்டாடினர். ..சி. சுப்பரமணிய சிவா, சுதேசி பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் அந்நேரத்தில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் பாரதி சாட்சியம் அளித்தார். இந்த ஆண்டில்தான் அவரே தனது சுதேசி கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

8.6 இந்தியா பத்திரிகை மீது ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் சட்டப்பூர்வமான ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாரதி பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார். அங்கே இருந்துகொண்டு 1908-1910 ஆண்டுகளில் இந்தியா பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினார். ஆனால் அப்பத்திரிகையை இந்தியாவில் நுழையவிடாதபடி ஆங்கிலேய அரசு தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக அது நின்றுபோகிறது.

அதன்பின் அரவிந்தர், .வே.சு. அய்யர் தொடர்பு பாரதிக்குக் கிடைத்தது. கவிதைகள் படைப்பதிலும், தத்துவ ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.

8.7. 1918- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியைவிட்டுத் தமிழகம் திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே கடலூரில் கைது செய்யப்பட்டார். பின் அன்னிபெஸண்ட் அம்மையார், ‘சுதேச மித்திரன்சுப்பிரமணிய அய்யர் போன்றோரின் உதவியுடன் ஆங்கிலேய அரசுக்குச் சில உறுதிமொழிகளைக் கொடுத்ததன் மூலம் விடுதலை செய்யப்பட்டார். 24 நாட்கள் சிறையில் இருந்தார்.

8.8. 1919 இல் மீண்டும் சென்னைக்கு வந்தார். ராஜாஜி வீட்டில் காந்தியைச் சந்தித்தார். 1920- இல் மீண்டும்சுதேசமித்திரனில்இணைந்து, கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.

8.9. பாரதியின் அரசியல் வாழ்க்கை 1905 லிருந்து 1910 வரை தீவிரமாக அமைந்தது. 1908 – இல் திலகர் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டவுடன், பாரதியின் அரசியல் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டது. தான் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்ததாகக் கூறிப் பாண்டிச்சேரி சென்றார்.14 பாண்டிச்சேரியிலும் 1910 வரை பாரதியின் வாழ்க்கை தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்கத் தொடங்கியது. 10 ஆண்டுகள் பாண்டிச்சேரியில் அகதி வாழ்வை மேற்கொண்ட பாரதி, தளர்ச்சியடைந்து சென்னை திரும்ப நினைத்தார். தன் மீது எவ்வித ராஜத் துரோக வழக்குக்கும் வாய்ப்பில்லை என்பதை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்து, சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்தார்.15

கடலூரில் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவருடைய விடுதலைக்குச் சென்னையில் அன்னிபெஸண்ட்டை சேர்ந்த குழுவினர் முயற்சி எடுத்தனர். போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பாரதிக்கும் தீவிரவாத அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று பாரதியின் நடத்தைக்கு உத்திரவாதம் அளித்தனர். இருப்பினும் போலீஸ் அதிகாரியின் தாங்கள் நேரடியாகவே பாரதியிடம் உறுதிமொழி பெற முடிவெடுத்தனர். பாரதியைச் சிதம்பரத்தில் சந்தித்து உறுதிமொழி பெற்றனர். இனித் தீவிர அரசியிலிருந்து விலகி விடுவதாகவும், இனித் தான் எழுதும் படைப்புகளை ஆங்கிலேய அரசின் தணிக்கைக்கு உட்பட்டு வெளியிடுவதாகவும் பாரதி உறுதிமொழி அளித்தார்.16

அத்துடன் பாரதிதான் விரும்பி ஏற்ற தீவிரக் காங்கிரஸ் நடைமுறையில் ஒதுங்கிவிட்டார்.17

8.10. விடுதலைப் போரில் பாரதியின் பங்கு 1904- இல் தொடங்கி 1907,1908- இல் உச்சகட்ட வளர்ச்சியடைந்து. 1910 இல் பின்னடைவுக்கு உட்படுகிறது. 1918- இல் அவர் ஆங்கிலேய அரசுக்கு அவர் அளித்த உறுதிமொழிகள் அவருடைய அரசியல் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் அவர் சார்ந்திருந்த தீவிரக் காங்கிரஸ் இயக்கத்தின் தோல்வியேயாகும். இதனைக் கட்டுரையின் இறுதியில் தெளிவாக ஆராயலாம்.

 

9.0. விடுதலைப் போர் குறித்துப் பாரதியின் கருத்துகள்

முழு விடுதலை

9.1. பாரதி காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய காலத்தில் காங்கிரஸ் கட்சியானது இந்தியாவிற்கு முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைக்கவே இல்லை. தனது தோற்றத்திலிருந்து 1915 வரை இருபதாண்டு காலமாக சீர்திருத்தக் கட்சியாகவே இருந்த காங்கிரஸ், மக்களின் வளர்ந்து வருகின்ற விடுதலை உணர்வைக் கண்டு, தனது கொள்கையில் மாற்றம் செய்யத் தொடங்கியது. சுயராஜ்ஜியம் என்ற கொள்கையை முன்வைத்து. ஆனால் இந்த சுயராஜ்ஜியமானது ஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுய ஆட்சி அரசாங்கமே என்று காங்கிரஸ் தலைவர்களான தாதாபாய் நவரோஜியும், கோபாலகிருஷ்ண கோகலேயும் திரும்பத் திரும்பக் கூறிவந்தனர். தீவிரவாதக் குழுவின் தலைவராகத் திலகரும் அதையே தான் ஏற்றுக் கொண்டிருந்தார்.18

ஆனால் பாரதியார் முழு விடுதலை என்ற கொள்கையைத் தான் கொண்டிருந்தார். ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட சுய ஆட்சி அரசாங்கம் என்பது நாடகத்தில் வரும் ராஜாவை உண்மையான ராஜா என்று நினைப்பதற்குச் சமமானது என்று கூறுகிறார்.19 இக்கருத்தை அவர் தனது கட்டுரையிலும் கவிதைகளிலும் பல இடங்களில் கூறியுள்ளார்.20

ஆனால் பாரதியின் இக்கொள்கையில் அவருடைய அரசியல் வீழ்ச்சிக் காலக்கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆங்கிலேயச் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டும் யோசனை எங்களுக்கில்லை21 என்று அவர் கூறுகிறார்.

 

9.2.போராட்ட வடிவம்

செய்கை எதிர்ப்பு, மானசீக எதிர்ப்பு என்ற இரண்டு போராட்ட முறைகளைக் கூறி, முதல் வகையானது பலாத்கார வழி என்றும் இரண்டாவது வகையானது சாத்வீக வழி என்றும் பாரதி கூறுகிறார். தான் இரண்டாவது வழியையே ஏற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெளிவாகக் கூறுகிறார்.22

சமாதானமாகவே சட்டத்துக்கு இணங்கிய முறைகளாகத்தான் சுயராஜ்ஜியம் பெறத் தான் விரும்புவதாகக் கூறுகிறார்.23 தான் சட்டரீதியாகச் சட்டத்திற்கு உட்பட்டுப் போராட விரும்புபவன்தான் என்பதை ஆங்கிலேய அரசுக்கும் தெரியப்படுத்த விரும்பினார்.24 தான் பலாத்கார வழிமுறைகளுக்கு எதிரானவன் என்பதைப் பல நேரங்களில் தெளிவுபடுத்தினார்.25

காங்கிரஸ் மிதவாதத் தலைமை ஆங்கிலேய அரசிடம் சுயராஜ்ஜியத்திற்காக விண்ணப்பிக்கும் போராட்ட முறையைக் கடுமையாகப் பாரதி கண்டிக்கிறார். இது பிச்சைக்காரத்தனம் என்று கூறுகிறார்.

இதே பாரதி தனது அரசியல் வீழ்ச்சிக் காலகட்டத்தில் விடுதலைக்காக ஆங்கிலேய அரசிடம் பிராத்திக்கிறார். விண்ணப்பிக்கிறார்.26

பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிப்பதுமூலமும் ஆங்கிலேய நாட்டுப் பொருள்களை வாங்குவது மூலமும் ஆங்கிலேய ஆட்சியாளரைப் பணியவைக்க முடியுமெனப் பாரதி கருதினார்.27

 

9.3.காங்கிரஸ் மிதவாதத் தலைமை பற்றி

1885- லிருந்து 1905வரை காங்கிரஸ் சட்டசீர்திருத்தங்களைத்தான் விரும்பியதேதவிர, ஆங்கிலேய அரசைத் தாக்க விரும்பவில்லை என்று பாரதி குற்றம் சாட்டுகிறார்.28

மிதவாதக் காங்கிரஸ் தலைமை ஆங்கிலேய அரசிடம் தேவையற்றநம்பிக்கையை’ – அதாவது அவர்களாகவே ஆட்சியை விட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டிருந்ததாகவும், அது  நடக்க முடியாத ஒன்று என்றும் பாரதி கூறுகிறார்.29

மிதவாதக் காங்கிரசில் பெரும்பாலோர் சில பதவி உயர்வுகளுக்காகத்தான் செயல்படுகின்றனர் என்று கூறி, அவர்களைப் பாரதி வன்மையாகக் கண்டிக்கிறார்.30

காங்கிரஸ் கட்சி ஆங்கிலம் கற்ற பெரியவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறதே ஒழிய, மக்கள் கட்சியாக இல்லை என்று பாரதி குற்றம் சாட்டுகறார்.31

மக்களைத் தட்டி எழுப்பி, மக்களைச் சார்ந்த கட்சியாகக் காங்கிரஸ் மாற வேண்டும் என்று விரும்புகிறார். மக்களே உண்மையான சக்திகள் என்று கூறி, அவர்களைச் சார்ந்த தலைமையாகக் காங்கிரஸ் தலைமை மாறவேண்டுமென்று அவர் கூறுகிறார்.32

வருடத்திற்கு ஒருமுறை கூடித் தீர்மானம் போடும் அமைப்பாக இல்லாமல், வருடம் முழுவதும் செயல்படும் அமைப்பாகக் காங்கிரஸ் மாறவேண்டும் என்று கூறுகிறார்.33

காங்கிரசில் ஆங்கிலேயர்களுக்கு அதிகப் பாத்திரமும் முக்கியத்துவமும் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, அந்நியர்களுக்குக் காங்கிரஸில் என்ன வேலை என்று கேட்டு, அந்நிலை மாறவேண்டும் என்று அவர் கூறுகிறார்.34

வருடந்தோறும் மனுக்கள் தயார் செய்து கொண்டு, லண்டன் சென்று ஆங்கில அரசிடம் பிச்சை கேட்கும் வழிமுறையைக் காங்கிரஸ் கைவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.35

காங்கிரசில் குறுகியவாதப்போக்குடன் செயல்பட்ட பம்பாய் மேதா கட்சியினரைப் பாரதி கடுமையாகச் சாடுகிறார்.36

 

9.4.அந்நியருக்கு எதிரான கூட்டணி

திலகர், விபினசந்திரபாலர், லஜபதிராய் போன்றோர் இந்து மதத் தீவிர ஆதரவாளர்களாகச் செயல்பட்டு, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பங்கம் வரும் வகையில் செயல்பட்டனர்.

ஆனால் பாரதியாரோ இந்து முஸ்லீம் ஒற்றுமை விடுதலைப் போரில் மிக அவசியமான தேவை என்று உணர்ந்தார். தான் ஒரு இந்துவாக இருந்தபோதிலும், முஸ்லீம்களை அவர் எதிர்க்கவில்லை. மாறாக இந்தியாவில் பிறந்த எல்லா மதத்தினரும் ஒன்றே என்று கூறுகிறார்.37 மேலும் மக்களைத் திரட்டுவதற்காகத் திலகர் போன்றோர் சிவாஜி, கணபதி பண்டிகைகளைக் கொண்டாட ஏற்காடு செய்தனர். ஆனால் பாரதியோ அந்த விழாக்களுடன் அக்பர் விழா போன்ற பண்டிகைகளும் இந்திய மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார்.38

அடுத்து இந்து மக்களிடையே ஒற்றுமைக்கு ஜாதி அடிப்படைகள் தடையாக அமைந்திருந்ததைக் கண்டு பாரதி அதைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்.

திலகர் விதவைகள் திருமணத்தையும், எல்லா ஜாதியினரும் சமம் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவரை அரசியலில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஆசாரத் திருத்தக் கட்சியினர் கூறியபோது,  அது வேறு, ராஜாங்க விஷயம் வேறுஎன்றும், மேற்கூறிய காரணத்தால் ராஜாங்க விஷயத்தில் திலகருடன் ஒன்றுபடக்கூடாது என்று கூறுவது தவறென்று பாரதி கூறினார்.39

 

10.0. பாரதியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

10.1. முழுவிடுதலை என்ற கொள்கையைக் கொண்ட பாரதி, தன் அரசியல் வாழ்வில் 1905 முதல் 1910 வரைதான் வளர்ச்சியைப் பெற்றிருந்தார். அதன்பின் அவர் அரசியல் வாழ்வில் வீழ்ச்சியே ஏற்பட்டது. முழு விடுதலைதான் தேவை என்ற பாரதி, பின்னால் ஆங்கிலேயரை விலக்குவது கிடையாது என்று கூறுவதும், காங்கிரஸ் மிதவாதத் தலைமை ஆங்கில அரசிடம் மனுகொடுத்துக் கோரிக்கை கேட்பதைக் கடுமையாகவே சாடிய பாரதி, தானே பின்னால் ஆங்கிலேய அரசுக்கு விடுதலைக்காகப் பிரார்த்திப்பதும் விண்ணப்பிப்பதும் அவரது வீழ்ச்சியைக் காட்டுகின்றன,

10.2. பாண்டிச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் சென்னைக் கவர்னருக்குத் தான் எவ்வித ராஜத்துரோகமும் செய்யவில்லையென்றும், தன்மீது போலீசார் வீணாகப் பழி சுமத்துகிறார்கள் என்றும், தன்னைப் பற்றி கவர்னர் யாரிடமும் அதுபற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறுவதும் அவரது வீழ்ச்சியைச் சுட்டி காட்டுகின்றன.40 இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் ராம்சே மக்னால்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இது தெளிவாக வெளிப்படுகிறது.41

10.3. கடலூரில் கைது செய்யப்பட்டுப் பின்னர் உறுதிமொழி கொடுத்து விடுதலை பெறுவதும் அவரது அரசியல் தளர்ச்சியையே காட்டுகிறது.

10.4. தனது நூல்களை வெளியிட வேண்டும் என்பதற்காக அவர் எட்டயபுரம் மகாராஜாவுக்குக் கடிதம் எழுதும் போது தன்மீது தற்போது ஆங்கிலேய அரசு நல்லெண்ணம் கொண்டிருப்பதாகக் கூறுவது அவரது பலவீனத்தையே காட்டுகின்றது.42

 

11.0. பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படை

11.1. பாரதியின் வீழ்ச்சிக்கு அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியே காரணமாகும். முழுவிடுதலை, மக்கள் இயக்கம் போன்ற முற்போக்குக் கொள்கையை உடைய பாரதிக்கு, ஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுயராஜ்ஜியம், விண்ணப்பிக்கும் முறை, இராஜவிசுவாசம் போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி எவ்வாறு பொருத்தமாக அமையமுடியும்? ஓரளவுக்கு அவரது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட திலகர் கூட்டமும் காங்கிரஸ் தரகு முதலாளித்துவத் தலைமையின் சூழ்ச்சியினாலும், ஆங்கிலேயர் அடக்குமுறையாலும் சிதறடிக்கப்பட்டது. காங்கிரஸ் மிதவாதத் தலைமைகூட 1910- ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள்வரை தேக்க நிலையிலேதான்  இருந்தது.

11.2. பாரதியின் கொள்கைக்கு ஏற்ற இயக்கம் காங்கிரஸ் அல்லாத புரட்சிகர அமைப்புகளே. அவைதான் ஆங்கிலேயரை அடியோடு தவிர்க்க விரும்பியது. ஆனால் பாரதியின் கிம்சா வழி போராட்ட முறை, அவரை அப்புரட்சிகர அமைப்புகளுடன் இணையத் தடுத்துவிட்டது. மேலும் அப்புரட்சிகர அமைப்புகளும்கூடத் தெளிவாபார்வையும், நாடு தழுவிய ஒரு அமைப்பும் தொழிலாளி வர்க்கத் தலையையும் இல்லாத காரணத்தால் தோல்வியையே தழுவின என்று முன்பே கண்டோம்.

11.3. எனவே பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அவர் வாழ்ந்த காலகட்டச் சமூக - அரசியல் சூழ்நிலையே அடிப்படைக் காரணமாகும். பாரதியின் ஆன்மீகப்  பிடிப்பும், தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையும் பிற காரணங்களாக அமைகின்றன.

11.4. விடுதலைப் போரில் பாரதியின் பங்கை வரையறுக்க முயற்சிக்கும் போது, கீழ்க்கண்ட முடிவுகளே கிடைக்கின்றன.

1.  பாரதி உண்மையாகவே விடுதலை விரும்பியவர்

2.  அதற்காகச் செயல்பட முன்வந்தவர்

3.  அந்நியருக்கு எதிரான போராட்டமே இந்திய மக்களின் அன்றைய அடிப்படை பிரச்சினை என்று எடுத்துக் காட்டி, அந்நியருக்கு எதிரான இந்திய மக்களின்ஒற்றுமை தொடர்ந்து வலியுறுத்தியவர்.

4.  திலகர் போன்றவர்களின் இந்துமத வெறிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாதவர்.

5.  ஆன்மீகப் பிடிப்பின் காரணமாகவும் தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையாலும் எது சரியான- உண்மையான இயக்கம் என்று பார்க்கத் தவறியவர்.

6.  அதன் விளைவாகத் தவறான இயக்கத்துடன் இணைத்துச் செயல்பட்டு, தோல்வி கண்டு, தளர்ச்சியடைந்தவர்.

 

 

அடிக்குறிப்புகள்

1.  இந்தியப் பாராளுமன்றம், சமரன், இதழ் 11, அக்டோபர், 1979,.4.

2.  Ibid P.5-6

3.  Saraf (1976),P.300- 301.

4.  இந்தியப்பாராளுமன்றம் சமரன், அக்டோபர், 1979.

5.  சிவஞானம், .பொ.(1974),.109

6.  Ibid P.109

7.  Ibid P.110

8.  Ibid P.120

9.  Ibid P.121-124

10.  Ibid P.126-127

11.  இந்தியப் பாராளுமன்றம் சமரன், அக்டோபர், 1979. . 8.

12.  Tara Chand (1972)P.143&P.342

13.  Ibid P.145

14.  பத்மநாபன் ரா..

15.  Ibid P.40

16.  Ibid P.57

17.  ரகுநாதன் (1966)..26.

18.  Tara chand (1972). P.109

19.  தூரன், பெ. (1979)..109.

20.  இளசை மணியன் (1979)..129

21.  மகாகவி பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், (1981),.378

22.  பாரதிதரிசனம், பாகம் 11, .82

23.  தூரன், பெ., (1979)..82,

24.  பத்மநாபன்,ரா...40

25.  ஆஷ்துரை கொலை, பம்பாயில் ஆங்கிலேய நீதிபதியின் மீது வெடிகுண்டு வீச்சு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது கூறினார்.

26.  பாரதி தரிசனம், பாகம் 1, , 113.

27.  Ibid. Part- I, P.148

28.  தூரன், பெ., (1979), .129

29.  பாரதி தரிசனம், பாகம்.1,,48; பாகம் 2,.27.113

30.  Ibid. Part- Il, P.9,24

31.  Ibid. Part- Il, P.47

32.  Ibid. Part- Il, P.47

33.  Ibid. Part- Il, P.15

34.  Ibid. Part- I, P.19

35.  Ibid. Part- I, P.115

36.  Ibid. Part- I, P

37.  Ibid. Part- I, P.191-92,131

38.  Ibid. Part- I

39.  Ibid. Part- I, P,191-92,131

40.  Ibid. Part- I

41.  Ibid. Part- Il, P.44

42.  பத்மநாபன், ரா, .. 40

43.  Ibid. P- 40,

44.  Ibid. P.89

 

 

உதவிய நூல்கள்

 

1.

கைலாசபதி, (1962)

‘’இருமகாகவிகள்’’ என்.ஸி.பி.எச். சென்னை

 

2.

சிவஞானம், .பொ (1974)

‘’காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்போர்’’ இன்ப நிலையும் சென்னை.

 

3.

தூரன், பெ. (1979)

 

‘’பாரதியும் பாரதத் தேசமும்’’, வானதி பதிப்பகம், சென்னை

 

4.

பத்மநாபன், ரா.

 

‘’பாரதியின் கடிதங்கள்’’

 

5.

ரகுநாதன்,தொ.மு.சி

(1966)

‘’கங்கையும் காவிரியும்’’, ஸ்டார் பிரசுரமும், சென்னை.

 

6.

-------------------------------------

‘’பாரதி தரிசனம்’’, பாகம் 1,2, (தொ, ) இளசை மணியன், எஸ். ஸி. பி.எச். சென்னை.

 

7.

----------------------------------------(1981)

 

‘’மகாகவி பாரதியார் கட்டுரைகள்’’, வானதிப் பதிப்பகம், சென்னை

 

8.

Majumdar, R.C.,(1975)

 

 

‘’History of the Freedom Movement In India’’ Vol.III. Firmer K.L.Mukhopathyay. Calcutta.

 

9.

Saraf, R.P.(1979),

 

‘’The Indian Society’’, Delhi

10.

Tara Chand, Dr.(1972).

 

‘’History of the Freedom Movement in India’’, Vol,III. Publications Division, Ministry of information and Broadcasting, Government of India

 

 

 

 

 

 

 

 

    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India