பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்
----------------------------------------------------------------------------------------------
ஒலிப்பில் மேற்கூற்று ஒலியன்கள் (suprasegmental phonemes) ஆங்கிலத்தில் எவ்வாறு அமைகின்றன என்பது ஒரு சிக்கல்.
(1) தமிழைப்பொறுத்தவரை, ஒரு சொல்லுக்குள் அசையழுத்தம் (Syllabic stress) பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமையாது. ஆனால் ஆங்கிலத்தில் அது மிக மிக முக்கியம். ஒரே எழுத்துக்களைக்கொண்ட சொல்லில் உள்ள அசைகளில் குறிப்பிட்ட அசைக்கு அழுத்தம் கொடுப்பதைப்பொறுத்து, அச்சொல் பெயரா வினையா என்று முடிவுக்கு வரவேண்டும். per-mit என்பதில் உள்ள இரண்டு அசைகளில் முதல் அசைக்கு அழுத்தம் கொடுத்தால் (primary stress) பெயர்ச்சொல், இரண்டாவது அசைக்கு அழுத்தம்கொடுத்தால் வினைச்சொல் . ஆங்கில அகராதிகளில் சொற்களைக் கொடுக்கும்போது, இந்த அசையழுத்தத்தைக் குறியிட்டுக் காண்பிக்கிறார்கள். ஆனால் இந்த வேறுபாட்டை ஆங்கிலம் கற்கிற நாம் கற்றுக்கொள்கிறோமா அல்லது கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்பது ஐயமே.
(2) அதுபோல , ஒரு ஆங்கிலச்சொல்லில் ஒரு சில எழுத்துக்கள் ஒலிக்கப்படுவது இல்லை. Plumber என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் "b" ஒலிக்காது. ஆனால் நாம் அதையும் சேர்த்துத்தான் ஒலிக்கிறோம்.
(3) அடுத்து, ஆங்கில வாக்கியங்களில் பொதுவாக இலக்கணச் சொற்கள் - have, has, been போன்ற சொற்கள் - ஏனைய பொருண்மைச் சொற்களைவிட வெளிப்பாடுகளில் சற்று மறைந்தே நிற்கும் - I have been coming - என்பதில் "I" , "coming" ஆகிய சொற்களைவிட have, been போன்ற இலக்கணச்சொற்கள் சற்றுக் குறைவாக வெளிப்படையாகத் தெரியும்.
மேற்கூறியவற்றில் இங்கு நாம் பேசுகிற ஆங்கிலம் எந்த அளவு சரியாக இருக்கிறது என்பது ஐயத்திற்கு உரியதே ஆகும். எனவே, பொதுவாக இங்கு நாம் கற்றுக்கொள்கிற பேச்சாங்கிலம் உண்மையில் எழுத்து ஆங்கிலமே. இதனால்தான் ஆங்கிலேயர்களின் உரையாடல்களை நாம் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
நமது பள்ளிகளில் ஆங்கிலப்பாடத்தில் இலக்கணத்தை முழுமையாக வெளிப்படுத்துகிற வாக்கியங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள இது தேவைதான். ஆனால் நடைமுறை உரையாடலில் இந்த வாக்கியங்களை (Sentences) எவ்வாறு கூற்றாக (utterance) மாற்றியமைப்பது என்பதுபற்றிய பாடம் குறைவு.
what is your name ? - My name is sundaram (Sentences)
Your name, please - Sundaram (Utterances)
முதலாவது வாக்கியம், ஆங்கில இலக்கணத்தை (Structure of sentences) வெளிப்படுத்துகிறது.
இரண்டாவது கூற்று, நடைமுறைக் கருத்தாடல் (Structure of utterances) எவ்வாறு அமையவேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. கருத்துப்புலப்படுத்த மதிப்பு (Communicative value) உள்ள கூற்று இது. இந்த இரண்டாவதுதான் பேச்சாங்கிலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இங்கு பள்ளிகளில் எழுத்தாங்கிலத்தையே பேச்சாங்கிலமாகவும் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது எனது கருத்து. (நானும் இப்படித்தான் கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தைப் 'பேசி வருகிறேன்'!) .
மேலைநாடுகளில் தற்போது கருத்தாடல் நோக்கில் அல்லது கருத்துப்புலப்படுத்தநோக்கில் (discourse approach / Language as communication and for communication) மொழிக்கல்வி என்பது பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கே நாம் இன்னும் வாக்கிய இலக்கண அறிவை வெளிப்படுத்தும்நோக்கிலேயே மொழியைக் கற்றுக்கொடுக்கிறோம்.