புதன், 17 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (19)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (19)
மொழிபெயர்ப்பின் பயன்பாடு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிபயிற்றலானது கருத்தாடல் (discourse) நோக்கில் அமையவேண்டும் என்று முந்தைய கட்டுரைகளில் வலியுறுத்திருந்தோம். மேலும் கருத்தாடல் அமைப்பு பொதுவானது ( Universal) ... அதை வெளிப்படுத்தும் பனுவல்தான் ( text) குறிப்பிட்ட மொழிசார்ந்தது ( Language particular) என்றும் கூறியிருந்தோம். இதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த மொழிபெயர்ப்புக் கலையைப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பில்... தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு என்று வைத்துக் கொள்வோம்.. அந்தக் கட்டுரையை வரிக்கு வரி.. தொடருக்குத் தொடர்.. சொல்களுக்குச் சொல் என்று மொழிக்கூறுகளை மட்டும் கருத்தில்கொண்டு மொழிபெயர்த்தால் ( Literal translation) .. மொழிபெயர்ப்பு நன்றாக அமையாது. ஒவ்வொரு பத்தியையும் முதலில் தமிழ்ப் பனுவலில் இருந்து ... கட்டுரை எழுதிய மூல ஆசிரியர் ( original author) தனது மனதில் நிகழ்த்திய கருத்தாடல் போன்று.. ஒரு கருத்தாடலாக மொழிபெயர்ப்பாளர் தனது மனதிற்குள் உருவாக்கவேண்டும். அதாவது தமிழ்ப் பனுவலிருந்து கருத்தாடலைப் பெறவேண்டும். இங்கு நாம் கவனிக்கவேண்டியது... தமிழ்க் கட்டுரையை எழுதியவர் தன் மனத்திற்குள் ஒரு கருத்தாடலை நிகழ்த்தி... அக்கருத்தாடலைத் தமிழில் பனுவலாகச் சுருக்கியிருப்பார் . அதாவது நாம் முன்னரே பார்த்தபடி, தானும் வாசகரும் பங்குகொள்கிற அந்தக் கருத்தாடலில்... வாசகர் எழுப்புகிற ஐயங்கள், வினாக்களை எழுதாமல்... அவற்றிற்குரிய பதில்களை மட்டும் பதிந்திருப்பார். இதைத்தான் Reduction process என்று இங்கு அழைக்கிறோம். இப்போது மொழிபெயர்ப்பாளர் அதற்கு எதிரான ஒரு பணியை மேற்கொள்கிறார். பனுவலைக் கருத்தாடலாக விரிக்கிறார். இதை Expansion process என்று அழைக்கலாம். அப்போதுதான் அவருக்கு அக்கட்டுரையின் முழுமையான பொருள் தெரியவரும்.
பின்னர் தான் புரிந்துகொண்ட அக்கட்டுரைக் கருத்தாடலை ... தன் மனத்திற்குள் தமிழ்ப்பனுவலில் இருந்து விரிவாக்கம் செய்துகொண்ட அந்தக் கருத்தாடலை .... மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலப் பனுவலாக... ஆங்கிலமொழியின் மரபுக்கேற்ப... சுருக்குகிறார். அதாவது மீண்டும் ஒரு Reduction process! இப்போதுமொழிபெயர்ப்புப் பணி முடிவடைகிறது!
இங்கு மொழிபெயர்ப்புப்பணிபற்றி நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கிய செய்தி... ஒரு நூலின் கருத்தாடல் ( அது கட்டுரையாகவோ, நாவலாகவோ, கவிதையாகவோ இருக்கலாம்!) புதைவடிவமாகும் ( deep structure) . அதனுடைய புறவடிவங்கள் (surface structure) - பனுவல்கள் - குறிப்பிட்ட மொழி சார்ந்தவை . இங்குக்கூட.. அறிவியல் நூல்களில் பனுவலில் பயன்படுகிற மொழிசாராக் கூறுகளான அட்டவணை, படம் போன்றவை குறிப்பிட்ட மொழி சாராதவைதாம்! ஒரே கருத்தாடல் ... ஒரே புதைவடிவம்... ஆனால் அது பல்வேறு பனுவல்களாக - புறவடிவங்களாக - வேறுபட்ட மொழிகளில் அமைகின்றன.
இவ்வாறு மொழிபெயர்ப்பில் கருத்தாடல் ... பனுவல் வேறுபாடுகளை மிக நன்றாகப் பார்க்கலாம். மூல ஆசிரியர் தன் மனத்தில் ஒரு கருத்தாடலை நிகழ்த்தி, அதைத் தன் மொழியில் பனுவலாகச் சுருக்குகிறார். சுருக்கப்பட்ட அந்தப் பனுவலை மொழிபெயர்ப்பாளரோ மீண்டும் கருத்தாடலாக விரிவாக்கம் செய்கிறார். இங்கு மொழிபெயர்ப்பாளர் விரிவாக்கம் செய்த கருத்தாடல் ... எந்த அளவிற்கு மூல ஆசிரியர் நிகழ்த்தியிருக்கும் கருத்தாடலுடன் ஒத்துப் போகிறதோ , அந்த அளவுக்கு அவர் அந்த நூலின் பொருளைப் புரிந்துகொள்கிறார். பின்னர் அந்தக் கருத்தாடலை மீண்டும் மற்றொரு மொழியில் பனுவலாகச் சுருக்குகிறார் ... அந்தக் குறிப்பிட்ட மொழியின் மரபுக்கேற்ப!
மூல ஆசிரியரின் கருத்தாடல் ---> மூல ஆசிரியரின் பனுவல் ---> மொழிபெயர்ப்பாளரின் கருத்தாடல் ---> மொழிபெயர்ப்பாளரின் பனுவல் . இதுவே மொழிபெயர்ப்பு! இங்கு மொழி பயில்கிறவருக்கு எவ்வாறு கருத்தாடல் பொதுமையானது... பனுவல்கள் எவ்வாறு குறிப்பிட்ட மொழிகள் சார்ந்தவை... எவ்வாறு குறிப்பிட்ட மொழிசார்ந்த பனுவலைக் கருத்தாடலாக மாற்றுவது... எவ்வாறு அந்தக் கருத்தாடலை மற்றொரு மொழிசார்ந்த பனுவலாக மாற்றுவது .... என்பதைப் பயிற்றுவிக்கலாம்!
இவ்வாறு இலக்கியங்கள் எவ்வாறு மொழிபயிற்றலுக்கு மிகவும் உதவிகரமாக அமைகிறதோ... அதுபோன்று மொழிபெயர்ப்பும் மொழிபயிற்றலுக்கு மிகவும் பயன்படும்!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பெரியார் பற்றிய விமர்சனம்

                                               பெரியார் பற்றிய விமர்சனம்
                                                   ------------------------------------------

மதி வாணன்:
--------------------------
இரு புறமும் மனைவிகளோடு இருக்கும் முருகனை கும்பிடுபவர்கள், அதேபோல் இரு புறமும் கணவர்களோடு இருக்கும் பெண்ணை கடவுளாக கும்பிடுவோமா என சிந்திக்கவேண்டும்.
- பகுத்தறிவு ஆசான் ராமசாமி..

ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------
பெரியார் கேட்டதில் என்ன தவறு? ஒரு பெண் அவ்வாறு இருக்கவேண்டும் என்று அவர் கூறவரவில்லை. இந்த ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளோடு வாழ அனுமதிக்கும்போது, அந்த உரிமை ஏன் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் பெரியார் கேள்வி. ஆணோ பெண்ணோ அப்படி இருக்கவேண்டுமென்று அவர் கூறவரவில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? ஒரு ஆண்மட்டும் தனக்கென்று மட்டுமே குழந்தை பெற்றுத்தரும் மனைவி வேண்டும்.. அதுதான் கற்பு என்று இச்சமுதாயம் கூறுவது மட்டும் நியாயமா? இதுதான் பெரியார் கேள்வி. ஆணின் அந்த உரிமையைப் பெண்ணுக்கும் விரிவாக்கம் செய்வது என்பதல்ல பெரியார் கருத்து. தனிச்சொத்துரிமை... ஆண் ஆதிக்கம்... சொத்து வாரிசுக்காகத் தனக்கென்று பிறக்கிற குழந்தை .... ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளோடு ஆண் வாழும் உரிமை... இதெல்லாம் சரியா? சமுதாய வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் .... சொத்துரிமை .... வாரிசு என்பவையெல்லாம் தோன்றாத காலகட்டத்தில் ... பலகணவர் மணம் இருந்தது உண்மையில்லையா? சொத்துரிமை தோன்றியபிறகுதான்.... வாரிசுக்காகக் குடும்பம் என்று ஒரு அமைப்பு தோன்றியபிறகுதான்... பலகணவர் மணம் இல்லாமல் போய்... பலதார மணம் தோன்றியது. இது வரலாற்று உண்மை. எதிர்காலத்தில்.... சோசலிச சமுதாயத்தில்... சொத்துரிமை இல்லாத சமுதாயத்தில்தான்... ஆண் ஆதிக்கம் அற்ற... ஜனநாயகரீதியான குடும்ப அமைப்பு நிலவும். அங்கே.. ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதும் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்பதும் உண்மையில் நடைமுறைக்கு வரும். சமூக வரலாற்றில் பெண்வழிச் சமுதாயம்தான் முதலில் நிலவியது. ஒரு குழந்தைக்குத் தகப்பன் யார் என்று தெரிந்துகொள்ளமுடியாத.. ஆனால் தாய் யார் என்று தெரிந்துகொள்ளமுடிந்த காலம் ஒன்று இருந்ததைப் பார்க்கலாம்.

புராணக் கதைகள் தோன்றிய வரலாற்றுக் காலகட்டம் பற்றிய தெளிவு இல்லாமல்.... புராணக் கதைகளை வைத்துக்கொண்டே ... அவற்றில் கூறப்படுகிற ''கடவுள்களை'' விமர்சித்து .... திட்டி.. மேற்கொள்கிற நாத்திகவாதத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அறிவியல் அடிப்படையிலான ... பிரபஞ்சத் தோற்றம்... உயிரின் தோற்றம் போன்றவற்றின் அடிப்படையிலான பொருள்முதல்வாதத்தை ஏற்றுக்கொண்டவன் நான். ''பிராமணியம்'' என்ற ஒன்றை... அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி, பிற அரசு பதவிகள் ஆகியவற்றில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய ஒருநிலையை... எதிர்க்கவேண்டிய ஒரு காலகட்டத்தில்... பிற மேல்சாதிகளைத் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பிராமணியத்தை எதிர்ப்பதற்கு... விமர்சனம் செய்வதற்கு... புராணக் கதைகளை அவற்றின் தோற்றம்பற்றிய ஆய்வு எதுவும் இன்றி... பெரியார் திட்டினார். . கடவுள் கோட்பாட்டை ஏன் அடித்தட்டு மக்கள் இன்றும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்று.. சமுதாய நோக்கில் பார்க்காமல்... ''கடவுளைக் கும்பிடுகிறவன் முட்டாள்'' என்று கூறினார். அப்படியென்றால் அடித்தட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் பெரும்பான்மை ''கடவுள்'' பக்தர்கள்தான். அவர்கள் எல்லாம் முட்டாள்களா? அவர்கள்தானே சமுதாயத்தில் பொருள் உற்பத்தி நடக்கிறது! எனவே பிராமணியத்தை அன்றைய கட்டத்தில் எதிர்ப்பதற்காக... முருகர், விநாயகர் போன்றவர்களை அடிப்படையாகக்கொண்ட புராணக்கதைகளைப் பற்றிய பெரியார் விமர்சனம் நமக்கு முக்கியமானது அல்ல. அன்றைய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்தை ... எதிர்க்க வேண்டிய ஒரு சூழலில் ( அது சரிதான்!) பெரியார் புராணக் கதைகளை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்தார். அவ்வளவுதான். ஆனாலும் அவருக்கு ஒரு சமுதாய நோக்கு இருந்தது. புராணக் கதைகளை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை அவர் எதிர்த்தார். மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். தீண்டாமையை எதிர்த்தார் ( ஆனால் அவருடன் கைகோர்த்த மேல்சாதித் தலைவர்கள் தங்களுக்குக் கீ.ழ்ப்பட்ட சாதி மக்களைத் ''தீண்டாமல்தான் '' செயல்பட்டார்கள்!) பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பிரமாணர்கள் அல்லாத பிற மேல்சாதியினரே ( பிராமணியத்தால் 'பாதிக்கப்பட்டவர்கள்') தவிர ,,, சமுதாயத்தின் ''தீண்டாமையால்'' மிகவும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இல்லை! பெரியாரை அவரது அரசியல் ஈடுபாட்டுக் காலகட்டத்தில்வைத்துப் பார்க்கவேண்டும். அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் வேண்டாம். அதேபோன்று அவரைக் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் வேண்டாம். அவரிடம் இருந்த நல்ல கருத்துகளை ( மூடநம்பிக்கைகள், தமிழ் இலக்கியங்களாக இருந்தாலும், அதில் பிற்போக்கு கருத்துகள் இருந்தால் அவற்றை எதிர்ப்பது போன்ற) உள்வாங்கிக்கொள்ளலாமே! 20 ஆம் நூற்றாண்டில்... 1930-60 ஆண்டுகளில் சமூக நிகழ்வுகளில் பெரியாருக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

புத்தரும் இன்றைய தமிழகத் திரைப்பட அரசியலும்

புத்தரும் இன்றைய தமிழகத் திரைப்பட அரசியலும்
-                              -------------------------------------------------------------------------------
நேற்று நான் புத்தர்பற்றிக் கூறியதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். தனது தொல்லினப் பழங்குடி மக்களின் துன்பங்களை ... புதிதாகத் தோன்றிய வர்க்க சமுதாயம். அரசு ஆகியவை அளித்த துன்பங்களை... தீர்க்கப் புத்தர் கண்டுபிடித்த ஒரு மாற்றுவழி... மக்கள் உளவியல்ரீதியாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதே ஆகும். '' நடைமுறை வாழ்க்கையில் உள்ளத்தில் தோன்றும் ஆசைகளை அடக்கவேண்டும்''! கடவுள்வாதிகள் கடவுள் என்ற மாயையை இதற்காக உருவாக்கினார்கள். துன்பங்களை இல்லாமல் ஆக்குவதற்கான சமுதாயச் சூழலை உருவாக்கமுடியாத ஒரு நிலையில்... மக்களிடம் இந்த மாயை ஆதிக்கம் செலுத்தும். மக்களின் துன்பங்களே அவர்கள் இந்த மாயையை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம்!
நடைமுறையில் அன்றைய தொல்லினப் பழங்குடி மக்களின் துன்பங்களை இல்லாமல் ஆக்குவது அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் இயலாத ஒன்று என்பதைப் புத்தர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால் அவர் கடவுள் என்ற மாயையை உருவாக்கவில்லை. துறவறம்பூண்டு மக்கள் தங்கள் உடலை வருத்திக்கொள்வதையும் அவர் விரும்பவில்லை!
அவர் காலத்திற்கேற்ற ஒரு மாயையை உருவாக்கினார். அதுதான் ''சங்கம்''! துன்பப்படுகிற மக்கள் ... தங்கள் சமுதாயத்திலிருந்து வெளியேறி... இச்சங்கங்களில் வாழுமாறு அறிவுறுத்தினார். இந்தச் சங்கங்களில் தனிச்சொத்து இல்லை! முழு அளவில் சமத்துவமும் ஜனநாயகமும் இருந்தது. பழைய சமுதாயத்தின் பெருமையை இங்கு கொண்டுவரமுடியும்! இச்சங்கங்கள்... வர்க்க சமுதாயத்திற்குள் வர்க்கமற்ற சமுதாயமாக ... இதயமற்ற உலகின் இதயம்போல.. ஆன்மா அற்ற நிலையில் ஆன்மா போலவும்... இருந்தன!.
அதாவது... யதார்த்தமான துன்பங்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தீர்வுகொடுக்கமுடியாத ஒரு சூழலில்... ஒரு கற்பனையான.. இலட்சியரீதியான தீர்வை மக்களுக்காக அளித்தார். மக்களை ஏமாற்றுவது அவர் நோக்கமல்ல! அவர் தன் மக்களுக்கு உண்னமையானவர் ! தன் மக்களுக்காக நின்றவர். மக்கள் துன்பப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக... தனது வரலாற்றுக் கட்டத்தை உணர்ந்து... தெளிந்து.. இலட்சியத் தீர்வை - ஒரு மாயையை - அளித்தார்! எனவேதான் வரலாற்றில் புத்தர் நீடிக்கிறார்!
இன்று தமிழகத்தில் மக்கள்பற்றிக் கவலை எதுவுமில்லாமல்... பணத்திற்காகவும் புகழுக்காகவும் திரைப்படங்களில் நடிப்பவர்கள் ... திரைப்படங்களில் மக்களின் ''அத்தனை'' பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் ''வரலாற்று நாயகர்களாக'' நடிக்கின்றனர். அவர்களுக்கு மக்களும் ரசிகர் மன்றங்களை எழுப்பவும்... பாலாபிசேகம் செய்யவும்... ஏன் கோயில்கட்டவும்கூட செய்கிறார்கள்! இதைப் பார்க்கிற இந்தப் ''புரட்சி நடிகர்கள்'' உடனடியாக ''அரசியல் கட்சிகளைத் '' தொடங்கிவிடுகிறார்கள்! ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற அளவிற்கு மக்கள் இப்போது ஏமாறத் தயாரில்லை!
1950-60 களில் ஏற்கனவே அரசியலில் தொடர்புடைய... ஈடுபாடுடைய ... நிலவிய சில அரசியல் தலைமைகளை எற்றுக்கொண்ட ... எம் ஜி ஆர், எஸ்.எஸ்.ஆர், எம் ஆர் ராதா போன்றவர்கள்... திரைப்படங்களிலும் மக்களின் தோழர்களாக நடித்தனர். தங்கள் அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கொண்டுசென்றார்கள்! அவர்களால் அரசியலிலும் வெற்றிபெறமுடிந்தது! அடித்தட்டு மக்களின் பல்வேறு பிரிவினர்களின் தலைவர்களாக ... பல பாத்திரங்களில் நடித்து... மக்களின் பிரச்சினைகளுக்குத் ''தீர்வு'' அளித்தார்கள்! அவை திரைப்பட ''மாயைகளாக'' இருந்தாலும்.. மக்கள் அவற்றை விரும்பினார்கள்! மக்கள் ஏமாளிகள் இல்லை! ஆனால் நடைமுறை. வாழ்க்கையில் அவர்களது துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்காத ஒரு நிலையில் .. '' திரைப்படத் தீர்வுகளை'' தங்கள் மன ஆறுதலுக்காக ஏற்றுக்கொண்டார்கள்! அதனால் அந்த நடிகர்களும் சிறப்படைந்தார்கள்! அவர்களது அரசியல் கட்சிகளுக்கும் பயன் கிடைத்தது. அதேவேளையில் அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளின் தொண்டர்கள் இடையேயும் ஆதரவு வளர்ந்தது! அவர்களது கட்சித் தலைமைக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறபோது.. அவர்களால் மக்களைத் தங்கள் பக்கம் கொண்டுசெல்ல முடிந்தது!
ஆனால் அதைத் ''தவறாகப்'' புரிந்துகொண்ட இன்றைய நடிகர்கள் சிலர் .... நடிக்க வருவதற்குமுன்னர் அரசியல் வாசனையே படாதவர்கள்... எந்தவொரு நிலவுகிற அரசியல் கட்சிகளிலும் இல்லாதவர்கள்... பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தவர்கள் '' புரட்சிகரமாக'' நடித்து... மக்களின் பல்வேறு '' பிரச்சினைகளுக்கு'' தீர்வு அளிக்கும் ''தலைவர்களாக'' நடித்த சில ஆண்டுகளில் ... '' அரசியலிலும்'' பிரபலமாகலாம் என்று கட்சிகளைத் தொடங்கிவிடுகிறார்கள்! ஆனால் அவர்களால் எம்ஜிஆர், போன்று ... மக்கள் மனதில் இடம்பிடிக்கமுடியவில்லை. 
தடுமாறுகிறார்கள்!
இவ்விடத்தில் மக்களின் உளவியல் தெளிவாகத் தெரிகிறது! திரைப்படங்கள் மூலமாகமட்டுமே அரசியல் தலைவர்களாக ஆகமுடியாது ! நடைமுறைச் சமூகப் பிரச்சினைகளுக்குத் திரைப்படத் தீர்வுகள் ''மாயை'தான் என்பது மக்களுக்குத் தெரியாமல் இல்லை! இருந்தாலும்... அரசியலோடு திரைப்படங்களில் நுழைந்தவர்கள் அரசியலில் வெற்றிபெறுகிறார்கள்! எவ்வித அரசியலும் இல்லாமல் ... திரைப்படங்களில் நுழைந்தவர்கள் ... எவ்வளவுதான் ''மக்கள் தலைவர்களாக'' நடித்தாலும் அரசியலில் வெற்றிபெறமுடியவில்லை! இதை உணர்ந்துதான் மிகப்பெரிய நடிகர்கள் சிலர்... நேரடி அரசியலுக்கு வருவது இல்லை! கட்சிகள் தொடங்குவதில்லை!
புத்தர் ... உண்மையானவர்! மக்களுக்கு நேர்மையானவர்! தன் இன மக்களின் துன்பங்களைக் காணச் சகிக்காமல்... அதே வேளையில் நடைமுறை வாழ்க்கையில் உண்மையான தீர்வைக் கொடுக்கமுடியாத ஒரு வரலாற்றுச் சூழலில்... ''சங்கம்'' என்ற ஒரு ''மாயை' தீர்வை மக்களுக்கு அளித்தார். வரலாற்றை வென்றார்!
அரசியலோடு .. அது எந்த அரசியலாக இருந்தாலும் ... திரைப்படங்களில் நுழைந்து... மக்களின் பிரச்சினைகளுக்கு ''மாயை'' தீர்வை அளிப்பவர்கள் அரசியலிலும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளமுடிகிறது!
ஆனால் அரசியல் உணர்வே இல்லாமல்... பணத்திற்காகவே நடிக்க வந்தவர்கள்.. எவ்வளவுதான் முயன்றாலும்... அரசியலில் தங்களைத் தக்கவைக்கச் சிரமப்படுகிறார்கள்!.
மக்களின் உளவியல் ... உண்மையான தீர்வுகளுக்குப் பதிலாக ''மாயைகள் '' முன்வைக்கப்பட்டாலும்... அது மாயைதான் என்று தெரிந்தாலும்... யாரை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்... யாரைப் புறம்தள்ளுகிறார்கள் என்பதுபற்றி மேலும் ஆராயவேண்டும். எனது இந்த ஆய்வு மிகவும் மேலோட்டமான ஒரு ஆய்வுதான்!

புத்தரின் வெற்றி ..... மாயைத்தோற்றமும் எதார்த்தமும் ( Illusion and Reality) .

புத்தரின் வெற்றி ..... மாயைத்தோற்றமும் எதார்த்தமும் ( Illusion and Reality) .
-------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் .... கங்கைநதிப் பள்ளத்தாக்கில் கிமு 5-6 ஆம் நூற்றாண்டுகளில் தொல்லினப் பழங்குடி மக்களின் சமூக அமைப்பு அழிக்கப்பட்டு.... சிறு சிறு அரசுகள் தோன்றிய .... வணிகர்கள் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகதமும் கோசலமும் இருபெரும் அரசுகளாக நிறுவப்பட்ட ஒரு காலகட்டம் அது. இந்த அரசுகளுக்கு அருகிலேயே பல்வேறு வலிமைவாய்ந்த தொல்லினப் பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்த காலகட்டம். இந்த தொல்லினப் பழங்குடிமக்கள் .. அருகிலே நிறுவப்பட்ட இரு அரசுகளுக்கு - மகதம், கோசலம்- மிகப் பெரிய தொல்லையாகத் தோன்றிய ஒரு காலகட்டம்! மகதமும் கோசலமும் தங்களுக்குள் பலமாக மோதிக்கொண்டாலும்... தொல்லினப் பழங்குடி மக்களின் சமூகத்தை அழிப்பதில் ஒரே கொள்கை உடையவை.தனிச்சொத்துரிமையோ அல்லது வர்க்கப் பிரிவினையோ இல்லாத சமூக அமைப்பு இந்தத் தொல்லினப் பழங்குடி மக்களின் சமூக அமைப்புகள்! அவற்றில் ஒன்றான சாக்கியத் தொல்லினப் பழங்குடி மக்கள் சமூகத்தைச் சார்ந்தவர் புத்தர். சமணத் தலைவர் மகாவீர்ர் இவரது காலத்தவரே!

தன் கண்முன்னே தன் இன மக்களின்மீதான தனியுடைமை அரசுகளின் வன்முறைத் தாக்குதல்களையும் அவற்றால் தன்னின மக்கள் பட்ட இன்னல்களையும் கண்டு மனம் நொந்தவர் புத்தர். ஆனால் சமூக மாற்றத்தின் நியதிகளையும் வளர்ச்சி விதிகளையும் மிகவும் உணர்ந்த புத்தர்... வன்முறை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தன் இன மக்களை எவ்வாறு காப்பாற்றுவது... அவர்களின் வர்க்கமற்ற, சொத்துரிமையற்ற சமூக அமைப்பு உணர்வுகளை எவ்வாறு தக்கவைப்பது ... என்பதற்கான ஆழந்த ஆய்வில் ஈடுபட்டவர். வன்முறை அரசுகளின் வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட புத்தர்... அதேவேளையில் தன் மக்களின் இன்னல்களை .... அவர்களது பழைய இனச்சமுதாய உணர்வுகளையும் மரபையும் பண்பாட்டையும் எவ்வாறு காப்பாற்றுவது என்பதைப்பற்றி ஒருமுடிவுக்கு வந்தார். பழைய இனச் சமுதாயத்தின் பண்புகளைக்கொண்ட '' சங்கம்'' என்று ஒரு அமைப்பை முன்னிலைப்படுத்தினார். அச்சங்கத்தில் பழைய இனக்குழு மரபுகளே நீடிக்கவேண்டும்... தக்கவைக்கப்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். இது தன் மக்களின் வேதனைகளை... புற மற்றும் அக வேதனைகளுக்கு மாற்றாக அமையும் என்று முடிவுக்கு வந்தார். அவ்வாறு '' சங்கம்'' கட்டியெழுப்பப்படாமல் இருந்தால்... தன் இனமக்கள் வர்க்க அடிப்படையிலான அரசுகளின் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள்... ஆனால் அவற்றைத் தோற்கடிக்கமுடியாமல், தன் மக்கள்தான் அழிவார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட புத்தர்... '' சங்கம்'' என்ற ஒரு அமைப்பை.. தொல்லினப் பழங்குடி மக்கள் பின்பற்றிவந்த வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினார். அதாவது எதார்த்த ( Reality) இன்னல்களிலிருந்து விடுபட நேரடியான போராட்டத்திற்குப்பதிலாக... ''சங்கம்'' என்ற ஒரு மாயைத்தோற்றத்தை ( Illusion) முன்வைத்தார். எனவே அவரால் அவரது காலத்து தொல்லினப் பழங்குடி மக்களின் இன்னல்களுக்கு ஒரு விடையை ... அது மாயைத்தோற்றமாக இருந்தாலும்... எதார்த்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பை முன்வைக்கமுடிந்தது. இது வன்முறை அரசுகளுக்கு வசதியாகப் போய்விட்டது. தங்களை எதிர்த்த .. தங்களால் வன்முறையால் தோற்கடிக்கமுடியாத..தொல்லினப் பழங்குடி மக்களின் போராட்டத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளமுடிந்தது. புத்தர் தன் இன மக்களின் இன்னல்களை .. அனைத்து மக்களின் இன்னல்களாகப் பொதுமைப்படுத்தி.... ஒரு கருத்தியல் கோட்பாட்டையும் முன்வைத்தார். அரசர்களே முன்வந்து அவரது கோட்பாடுகளையும் ''சங்கத்தையும்'' பின்பற்றும்படி மக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர். புத்தர் வரலாற்று வளர்ச்சி விதிகளைப் புரிந்துகொண்டு... குறிப்பிட்ட வரலாற்றுக்கட்டத்தில் தனிச்சொத்துரிமையும், வர்க்கங்களும், அரசுகளும் தோன்றுவது தவிர்க்க இயலாதது... அதேவேளையில் தன் இன மக்களும் இன்னல்களுக்கு உட்படக்கூடாது. இதுவே அவரது அடிப்படையான... உண்மையான... மக்கள்பால்கொண்ட அன்பினால் ... முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளும் சங்கமும். தன் இன மக்களை ஏமாற்றுவது அல்ல அவரது நோக்கம்! சமூக வரலாற்று வளர்ச்சிகளைப் புரிந்துகொண்டு ஒருவர் .... தனியுடைமை , வர்க்கச் சமுதாயத்தின் கோரங்களையும் அதேவேளையில் வரலாற்றில் அது தவிர்க்கமுடியாத ஒரு கட்டம் என்பதையும் புரிந்துகொண்ட ஒரு நல்ல உள்ளத்தின் செயல்பாடு அது! அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அக்காலகட்டத்தில் வேறுபல வழிமுறைகளை ... கோட்பாடுகளை முன்வைத்தவர்கள் எல்லோரும் புத்தர்முன் தோல்வியடைந்தார்கள்! புத்தரால் வரலாற்றில் வெற்றிபெறமுடிந்தது!
மேலும் கௌடில்யர் போன்று தனியுடைமை அரசுகளுக்கு ஆதரவாக... மிக மோசமான வழிமுறைகளையும் மேற்கொண்டு... தொல்லினப் பழங்குடி மக்களைப் புத்தர் ஏமாற்றவில்லை. கௌடில்யர் தொல்லின மக்களை அழித்தொழிக்க நின்ற தனியுடமை அரசுகளுக்கு ஆதரவாக நின்றவர். ஆனால் புத்தரோ தன் மக்களுக்காக நின்றவர்!
இதுபற்றி மேலும் தெளிவு பெற விரும்புவர்கள் தயவுசெய்து, தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் '' உலகாயதம்'' என்ற நூலின் ( தமிழாக்கம் பேரா. எஸ். தோதாத்ரி - என்சிபிஎச் பதிப்பகம்) 
''சங்கமும் நியதியும்: எதார்த்தமும் மாயத்தோற்றமும் பற்றிய ஆய்வுகள்'' என்ற இயலைப் (பக்கம் 599-686) படிக்கவும்.

ஏன் திடீரென்று நான் புத்தருக்குச் சென்றுவிட்டேன் என்று எனது முகநூல் நண்பர்கள் திகைக்கலாம்! நாளை அதற்கு விடைதருகிறேன்!

புதன், 10 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(18)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (18)
--------------------------------------------------------------------------------------------
மொழிபயிற்றலில் இலக்கியக் கருத்தாடல் மிகப் பெரிய அளவு பயன்படும் என்று விடோவ்சன் போன்ற பல மொழிபயிற்றல்துறையைச் சேர்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். அது 100 விழுக்காடு உண்மை! தமிழின் சிறப்பு.... அதன் இலக்கியப் பயன்படுத்தத்தில் .... இலக்கியக் கருத்தடால்களில் ... தெளிவாக வெளிப்படுகிறது.

இங்கு இலக்கிய மொழியமைப்புபற்றிச் சில கருத்துகளை முன்வைக்கவிரும்புகிறேன். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொதுவான கருத்தாடல்களில் தமிழ் எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், தொடர் இலக்கணம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பொதுவான தமிழ் இலக்கண நூல்கள் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக, சொல் முதலில் எந்த எழுத்துகள், இறுதியில் எந்த எழுத்துகள், இடையில் என்னவகையான இரட்டித்தல் ஆகியவை அமையலாம் என்பதற்குத் தெளிவான விதிகள்! ஒரு சொல்லோடு மற்றொரு சொல்லோ அல்லது விகுதியோ சேரும்போது, எழுத்துகளில் என்னவகையான புணர்ச்சிமாற்றங்கள் ஏற்படும் எனபதற்கான தெளிவான விதிகள்!
அதுபோன்று... சொல்லிலக்கணத்திலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, '' மரம்'' என்ற மகர ஈற்றுப் பெயர்ச்சொல், வேற்றுமைவிகுதிகளை ஏற்றுவரும்போது, ''அத்து'' சாரியை பெற்றுவரவேண்டும். ''மரத்தை '' என்றுதான் அமையவேண்டும். ''மரமை'' என்று அமையக்கூடாது.
தொடர் இலக்கணத்தில்... தொடரின் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் திணை, எண், பால் ஆகிய இலக்கணக் கூறுகளில் இயைபு இருக்கவேண்டும் என்பது ஒரு முக்கியமான இலக்கணவிதி. '' அவன் வருகிறான் '' என்றுதான் எழுவாய்க்கு ஏற்றவகையில் வினைமுற்று அமையவேண்டும். '' அவன் வந்தாள்'' என்றோ... ''அவன் வந்தார்'' என்றோ... ''அவன் வந்தார்கள்'' என்றோ அமையக்கூடாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு இலக்கணவிதி.
மேற்கூறிய பொதுத்தமிழுக்கான இலக்கணவிதிகளை இலக்கியப் படைப்பாளிகளும் மீறக்கூடாது. மீறமாட்டார்கள்! பழந்தமிழ் இலக்கியங்களில் இதைத் தெளிவாகக் காணலாம். அப்படியென்றால்... ஒரு இலக்கியத்திற்கு இலக்கியப்பண்புகளை இந்தப் பொது இலக்கணத்தின் உதவிகொண்டுமட்டுமே ஏற்றிவிடமுடியுமா? இங்குத்தான் தமிழ் யாப்பிலக்கணத்தின் சிறப்பு வெளிப்படுகிறது. பொது இலக்கணமே கணிதப் பண்புகளுக்கு உட்பட்டதுதான்! ஆனால் அதற்கும்மேலே .. பொது இலக்கணக் கட்டமைப்புமீதே மற்றொரு கறாரான கட்டமைப்பை நிறுவி... ஒரு எழுத்தை இலக்கியமாக்குவதற்குத் துணைபுரிவதுதான்... தமிழ் யாப்பிலக்கணம்!
தமிழ் யாப்பிலக்கணமானது தமிழின் பொது இலக்கணத்தை மேலும் செதுக்குகின்ற ஒரு இலக்கணமாகும் ( Superimposed grammar) ! தமிழ்மொழியில் அமைகிற ஒரு படைப்பை... இலக்கியப் படைப்பாக மாற்றுவதற்குப் பயன்படும் ஒருவகையான மொழிப்பயன்படுத்த இலக்கணமாகும்!
இலக்கியப் பண்புகளை ஏற்றுவதற்குப் புலவர்களுக்கு மிக ஒழுங்கமைந்த இலக்கணக் கட்டமைப்புப் பயன்படுகிறதுபோல... சில இடங்களில் பொது இலக்கணத்திலிருந்து திட்டமிட்ட விலகல்களும் ( linguistic deviation)பயன்படுகின்றன. ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாகவோ அல்லது ஒரு வினைச்சொல்லைப் பெயர்ச்சொல்லாகவோ படைப்பாளி பயன்படுத்தலாம். இதுதான் படைப்பாளிகளுக்கான உரிமம் ( poetic license) என்று சொல்லப்படுகிறது! ஆனால் இந்த விலகல்களுக்கும் ஒரு இலக்கியப் பயன்பாடு உண்டு! வாசகரை அந்த இடத்தில் நிறுத்தி... '' ஏன் இவ்வாறு விலகுகிறார்'' என்பதைச் சிந்திக்கவைத்து... ஒரு கருத்தை வெளிப்படுத்தப் படைப்பாளி விரும்புவார்! இது ஒரு இலக்கிய உத்தியே ( literary device) !
தொல்காப்பியரின் செய்யுளியல் (Prosody) நாம் மேலே பார்த்த இலக்கியப் பண்புகளைத் தரும் மொழிநடையையே- தமிழின் பொது இலக்கணத்தின்மீது கட்டமைக்கப்படுகிற யாப்பு இலக்கணத்தையே - விளக்குகிறது.
அவரது ஏனைய இயல்கள் எல்லாம் .... தமிழ் இலக்கியங்களின் பிற இலக்கியப் பண்புகளைப்பற்றிப் பேசுகின்றன. மொத்தத்தில் தொல்காப்பியரின் பொருளதிகாரமானது (Poetics), ஒரு படைப்பாளி தனது இலக்கியக் கருத்தாடலை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை விளக்குகின்றன. எனவே பழந்தமிழ் இலக்கியக் கருத்தாடலை மேற்கொள்ளும் புலவர்களுக்கு ... தமிழின் பொது இலக்கணம் பற்றி எழுத்ததிகாரம், சொல்லதிகாரத்திலும்.... இலக்கியத்தின் சிறப்பு மொழிநடை , பிற இலக்கியப் பண்புகள் ஆகியவைபற்றிப் பொருளதிகாரத்திலும் தொல்காப்பியர் கூறுகிறார். தொல்காப்பியரின் நோக்கமே இலக்கியக் கருத்தாடலை மேற்கொள்ளும் புலவர்களுக்குத் தேவையானவற்றை - இலக்கிய, மொழி உத்திகளை ( literary and linguisitc devices or techniques) அளிப்பதே ஆகும்!
ஆகவே தமிழ் பயிலும் மாணவர்... எவ்வாறெல்லாம் தமிழ்மொழியைப் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தலாம்... செதுக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கப் பழந்தமிழ் இலக்கியங்கள் மிகவும் பயன்படும். இன்றைய உரைநடை இலக்கியங்களிலும் -- நாவல், சிறுகதை ஆகியவற்றிலும் - தமிழை எவ்வாறெல்லாம் இலக்கியக் கருத்தாடல்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்வது ... தமிழ்பயிற்றலின் ஒரு மிக முக்கியமான பகுதியாகும்! 
எனவே தமிழ்பயிற்றல் என்பது தமிழ்மொழியின் சொற்களையும் இலக்கணத்தையும் மட்டும் கற்றுக்கொடுப்பது இல்லை! மாறாக, அவற்றின் கருத்தாடல் பயன்படுத்தத்தையும் ( communicative use) கற்றுக்கொடுப்பதேயாகும்!

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(17)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (17)
----------------------------------------------------------------------------------------
முந்தைய உரையில் முதன்மைப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கருத்தாடல், இரண்டாம்நிலைப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கருத்தாடல் என்ற வகைப்பாட்டைப் பற்றிக் கூறியிருந்தேன். இங்கு நான் முதன்மை, இரண்டாம் நிலைப் பண்பாடுகளைப்பற்றிக் கூறும்போது, ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளில் கூறவில்லை. முதன்மைப் பண்பாடானது ஒருவரின் பிறந்து, வளர்கின்ற சமூகச்சூழல்களால் பெறப்படுவது ஆகும். இரண்டாம்நிலைப் பண்பாடானது ஒருவர் கல்வி, பதவி, தொழில் ஆகியவற்றால் பெறுகின்ற பண்பாடாகும். இந்தப் பண்பாட்டில் குடும்பம், சாதி, ஊர் பழக்கவழக்கங்கள் செல்வாக்கு செலுத்தாது. மேலும் முதன்மைப் பண்பாடானது பெரும்பான்மை தானாகவே நம்மிடம் '' தொற்றிக்கொள்ளும்''. ஆனால் இரண்டாம்நிலைப் பண்பாட்டை நாம் முயன்றுதான் கற்றுக்கொள்கிறோம்.

இரண்டாம்நிலைப் பண்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். ஆய்வுக் கட்டுரைகள் எழுதும்போது, ஒரு சில நடைகளைக் கையாளவேண்டும் என்று கூறப்படுகிறதே! இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எம் எல் ஏ நடை, சிகாக்கோ நடை, ஏ பி ஐ நடை என்று சில நடைகளை ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். துணைநூற்பட்டியல் மட்டுமல்ல.... ஒரு வரையறை எப்படி அமையவேண்டும், ஒரு விளக்கம் எப்படி அமையவேண்டும், அடிக்குறிப்பு எப்படி அமையவேண்டும் ... என்று பல வரைமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன்? ஒரு ஆய்வேடு அல்லது ஆய்வுக் கட்டுரை உலக அளவில்.... அந்தத் துறை சார்ந்த உலகளாவிய அறிஞர்களால் .... கருத்துரைக்கப்படலாம். அப்படியென்றால், அது ஒரு குறிப்பிட்ட வரையறைகளைப் பின்பற்றினால்தானே அது சாத்தியமாகும்? இதிலும்கூட.... இயற்கை அறிவியல் ஆய்வுரைகள் இந்த நடையைப் பின்பற்றலாம், சமூகவியல் ஆய்வுரைகள் அந்த நடையைப் பின்பற்றலாம் என்று கூறப்படுகிறது. இதுதான் இரண்டாம்நிலைப் பாண்பாட்டுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!
இதுபோன்று.... கருத்தரங்குகள்! கருத்தரங்கில் ஆய்வுரை வழங்குபவர் எந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டும், ஆய்வுரைமீது கருத்துரைப்பவர்கள் எவ்வாறு அதை மேற்கொள்ளவேண்டும் என்பதற்கெல்லாம் வரையறைகள் உண்டு. இங்குச் சில கருத்தரங்குகளைப் பார்க்கும்போது, நாம் வேதனைப்படுவோம். ஆய்வுரையின்மீது கருத்துரைப்பவர் தொடங்கும்போதே '' இது ஒரு ஆய்வுரையா? '' அல்லது '' இதைப் போய் ஒரு கட்டுரை என்று வழங்கவந்துவிட்டீர்களே'' அல்லது '' இந்தக் கட்டுரை ஒரு ஐந்தாம்வகுப்பு கட்டுரைபோல் அமைந்திருக்கிறது'' என்றெல்லாம் கொஞ்சம்கூடப் பண்பாடு இல்லாமல் பேசுவதைப் பார்த்திருக்கலாம்.
ஒருவரின் ஆய்வுரைமீது நமக்கு கருத்துவேறுபாடு இருந்தால் ... அதைத் தெரிவிப்பதற்கு ஒரு பண்பாடு உண்டு. '' ஐயா, தங்கள் ஆய்வில் எனக்குச் சற்று வேறுபாடு உள்ளது '' என்று கூறலாம்... ''ஐயா, தங்களின் கருத்துரையில் எனக்குச் சில இடங்களில் உடன்பாடில்லை. அதற்குக் காரணம் .... '' என்று தொடங்கலாம். அல்லது '' ஐயா, தங்கள் உரையை தற்போது நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஆனாலும் சில ஐயங்கள் .... '' என்று கூறலாம். ஆய்வுரை வழங்குபவரும் '' ஐயா, தாங்கள் எழுப்பும் ஐயங்கள் சரிதான். அவற்றிற்கு எனக்கு இயன்ற அளவு விளக்கம் அளிக்கிறேன்'' என்று கூறலாம். அல்லது '' ஐயா தாங்கள் கேட்பது சரிதான். எனக்கும் அந்த ஐயங்கள் உள்ளன. ஆனால் உடனடியாக எனக்கு விளக்கம் அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்'' என்று கூறலாம்.
இவைபோன்ற கருத்தாடல்கள் ... உரை வழங்குபவருக்கும் அதன்மீது கருத்துரை வழங்குபவர்களுக்கும் இடையில் நடைபெற்றால், கருத்தரங்கு வெற்றிபெறும். அதைவிட்டுவிட்டு, உரை வழங்குபவர், அதன்மீது கருத்துரை வழங்குபவர்கள் இருவருமே ஆணவத்துடன்.... தனிப்பட்ட விரோதமனப்பான்மையில்... கருத்தாடலை மேற்கொண்டால்... அது கருத்தரங்கமாக இருக்காது. சந்தைக்கடையாகவும் ... சண்டைக்காடாகவும் ஆகிவிடும்.
அதுபோல,,, ஒரு கூட்டத்தில் வரவேற்புரை ... வாழ்த்துரை... தலைமையுரை... முதன்மையுரை... நன்றியுரை .... இவையெல்லாம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு வரைமுறைகள் உண்டு. ஆனால் சில இடங்களில் பார்க்கலாம்... தலைமையுரை ஆற்றுபவர் அவரே முதன்மைச் சொற்பொழிவாளர் ஆற்றவேண்டிய சொற்பொழிவை ஆற்றிவிட்டு, '' இப்போது சொற்பொழிவாளர் உரையாற்றுவார் '' என்று கூறி, சொற்பொழிவாளருக்கு ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கிவிடுவார். அதுபோல, வரவேற்புரையில் ஒருவர் யார் யார்களையெல்லாம் வரவேற்றுப் பேசினாரோ, அத்தனை நபர்களையும் நன்றியுரை சொல்பவர் மீண்டும் திருப்பிக்கூறுவார். கூட்டத்தினரோ பொறுமையிழந்துவிடுவார்கள். அல்லது கலையத்தொடங்கிவிடுவார்கள்!
( உலக அளவிலான விளையாட்டுகளிலும் ஒரு பொதுமை விதிகள் உண்டு. இந்தியாவில் கிரிக்கெட், ஆக்கி போன்ற விளையாட்டுகளுக்கு ஒரு வகை விதிகள் ... பிற நாடுகளில் வேறுவகை விதிகள் என்று இருக்கமுடியுமா? அப்படி இருந்தால் ஒலிம்பிக் போன்ற உலக அளவிலான போட்டிகள் நடக்கமுடியுமா? ஜல்லிக்கட்டு , சடுகுடு போன்ற தமிழகத்திற்கே உரிய விளையாட்டுகள் வேறு.. இவை முதன்மைப் பண்பாட்டு அடிப்படையிலான விளையாட்டுகள்! ஆனால் கிரிக்கெட், ஆக்கி, செஸ் போன்றவை இரண்டாம் நிலைப் பண்பாட்டு அடிப்படையிலான விளையாட்டுகள் என்று கூறலாம் எனத் தோன்றுகிறது. சரிதானே! )
எனவே ஒரு மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது... அம்மொழியை உலக அளவிலான பொதுப் பண்பாட்டுக் கருத்தாடல்களுக்கு எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கவேண்டும். இதுவே அந்த மொழியை உலகக் கருத்தாடல் தரத்திற்கு வளர்த்தெடுக்கிறோம் என்று பொருள்படும்! உலக அளவில் ... உயர்நிலைக் கருத்தாடல்களுக்கு... நமது மொழியைப் பயன்படுத்துவதற்கு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்!
-----------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் நிலைப் பண்பாடுகளின் கருத்தாடல் அமைப்பு உலகப் பொதுமையானது. அது எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் சார்ந்தது இல்லை. எனவே ஆங்கிலப் பண்பாடு என்று அவற்றைக் கருதுவது தவறு. பொதுவாகவே கருத்தாடல் அமைப்பு பொதுவானது. அதை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட மொழிசார்ந்த பனுவல் குறிப்பானது. இதுபற்றி விரிவாக எழுத எண்ணியுள்ளேன்.
------------------------------------------------------------------------------------------
முதலாம்நிலைப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கருத்தாடல்களும் குறிப்பிட்ட மொழிச் சமுதாயத்தினருக்குப் பொதுமையானதுதான். அவற்றை வெளிப்படுத்தும் சொல்கள், தொடரமைப்பு போன்றவைதான் நபருக்கு நபருக்கு வேறுபடும். விருந்தினரை வரவேற்கும் முதலாம் நிலைப் பண்பாட்டில் ... '' கொஞ்சம் காப்பி சாப்பிடுங்களேன்'', '' கொஞ்சம் காப்பி சாப்பிடலாமா?' '' கொஞ்சமா காப்பி?'', ''கொஞ்சம் காப்பி குடிக்கலாமா?'' '' ஏதாவது குடிக்கலாமா?'', '' என்ன சாப்பிடலாம்? சொல்லுங்க'' என்று பலவகைகளில் சொல்களும் தொடர்களும் அமையலாம். இவை அனைத்துமே - அனைத்துப் பனுவல்களுமே - ஒரு குறிப்பிட்ட செயலை .... விருந்தோம்பல் செயலை - அதற்கான கருத்தாடல் செயலை - மேற்கொள்கின்றன. எனவே கருத்தாடலைப் புதைவடிவமாகக் ( Deep Structure) கொண்டால் ... பனுவல்கள் அவற்றை வெளிப்படுத்தும் புறவடிவங்கள் ( Surface Structures) ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(16)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (16)
-----------------------------------------------------------------------------------------
மொழிபயிற்றல் அல்லது மொழிபயிலுதல் என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தையும் சொல் களஞ்சியத்தைமட்டுமே பயிற்றுவிப்பதோ அல்லது பயிலுவதோ இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளை இங்குப் பார்த்துள்ளோம். கருத்துப்புலப்படுத்தத்திற்கான ஒரு செயல்முனைப்புள்ள கருத்தாடலைக் குறிப்பிட்ட மொழிவழியே மேற்கொள்ளும் திறனைப் பெறுவதே மொழிபயிலுதல் ஆகும் என்று பார்த்தோம்.

இவ்விடத்தில் கருத்தாடலின் ஒரு முக்கியமான பண்பை வலியுறுத்துவது இன்றியமையாதது! கருத்தாடல்களின் அமைப்பு பெரும்பாலும் உலகப் பொதுமையானது! ஒரு குறிப்பிட்டவகைக் கருத்தாடல் ஒவ்வொரு மொழியியலும் வெளிப்படுவது.... பனுவலாக அமைவதில் வேறுபாடுகள் உண்டு! அதாவது, கருத்தாடல்கள் உலகப் பொதுமையானவை. ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட மொழிகளின் பனுவல்கள் வேறுபட்டவை. அந்தந்த மொழிகளின் வெளிப்படுத்தும் முறைகளைச் சார்ந்தவை.
எடுத்துக்காட்டாக, ''நாவல்'' என்ற ஒரு கருத்தாடல் வகையை எடுத்துக்கொள்வோம்! ஒரு ஆங்கில நாவலின் கருத்தாடல் பண்புகளும் ஒரு தமிழ் நாவலின் கருத்தாடல் பண்புகளும் ஒன்றுதான். எனவேதான் இரண்டையும் நாவல்கள் என்று கூறுகிறோம்! ஆங்கில நாவலும் தமிழ் நாவலும் இரண்டுமே தங்களது கருத்தாடல் அமைப்புகளில் ஒன்றுதான்! எனவேதான் இரண்டையும் நாவல் என்று அழைக்கிறோம். இது கவிதை. சிறுகதை , காப்பியம் போன்ற இலக்கியக் கருத்தாடல்களுக்கும் பொருந்தும்! ஆனால் அவை வெளிப்படுகிற மொழிகள் வெவ்வேறானவை! அதாவது பனுவல் பண்புகளில் வெவ்வேறானவை.
இவ்விடத்தில் ஒன்றைக் கூறவிரும்புகிறேன். கருத்தாடல்களின் அமைப்பு '' பெரும்பாலும்'' உலகப் பொதுமையானவை என்று முன்னர் கூறினேன். இந்த முன்னெச்சரிக்கைக்குக் காரணம், சில கருத்தாடல்கள் அல்லது அவற்றில் அமைகிற பேச்சுச்செயல்கள் குறிப்பிட்ட மொழிச் சமூகத்தின் முதன்மைப் பண்பாடுகளைப் பொறுத்து அமையும். முதன்மைப் பண்பாடுகள் என்பவை அச்சமுதாயத்தில் ஒருவர் பிறந்து வளரும்போது, அவர் பிறந்த குடும்பம், இனம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ஒருவர் தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் செல்கிறார் என்று கொள்வோம். நண்பர் வந்ததும், வீட்டிலுள்ளவர் தமிழரின் விருந்தோம்பல் மரபின் அடிப்படையில் '' ஐயா, கொஞ்சம் காப்பி சாப்பிடலாமா'' என்று கேட்கிறார் என்று கொள்வோம். உடனே வந்துள்ள விருந்தினர் '' சரி, காப்பி கொடுங்கள்'' என்று கூறமாட்டார். மாறாக, '' அதெல்லாம் வேண்டாம். ( கொஞ்சநேரத்திற்குமுன்னால்தான் சாப்பிட்டுவந்தேன்)'' என்று கூறுவார். ஆனால் அவ்வாறு அவர் கூறியதற்காக அவரை நண்பர் விட்டுவிடமாட்டார். '' பரவாயில்லை... கொஞ்சம் சாப்பிடலாம்'' என்று காப்பி கொடுக்க முனைவார். விருந்தினர்தான் '' வேண்டாம்'' என்று கூறிவிட்டாரே , பிறகு ஏன் கொடுக்கவேண்டும் என்று நினைக்கமாட்டார். அவ்வாறு ஒருவேளை அவர் நினைத்துச் சும்மா இருந்துவிட்டால், வந்த விருந்தினர் தனது மனதிற்குள் '' ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அதற்காக வந்த விருந்தினருக்குக் கொஞ்சம் காப்பி கொடுக்கக்கூடாதா' என்ன விருந்தோம்பல் இது?'' என்று நினைத்துக்கொள்வார். இதற்கு மாறாக, வந்த விருந்தினரே '' சரி, காப்பி கொடுங்கள்'' என்று ஒருவேளை கூறிவிட்டார் என்று கொள்வோம். அப்போது விருந்தினரை வரவேற்றவர் தன் மனதிற்குள் '' என்ன இவர், காப்பிக்கு அலைகிறாரே .. ஒரு பேச்சுக்குக் கேட்டால்... ... '' என்று நினைத்துக்கொள்வார். இங்கு வந்தவர் '' வேண்டாம்'' என்றுதான் பொதுவாகச் சொல்வார். வீட்டுக்காரரும் அதற்காகக் காப்பி கொடுக்காமல் இருக்கமாட்டார். இது தமிழரின் விருந்தோம்பல் முறை!
ஆனால் நான் கேள்விப்பட்டவரை மேலைநாட்டு விருந்தோம்பல் மரபில் " Could you have some Coffee " அல்லது " May I offer you some Coffee?" என்று கேட்டவுடன் விருந்தினர் " No thanks" என்று சொல்லிவிட்டால், அதை மீறி, அவருக்கு வீட்டுக்காரர் காப்பி கொடுத்தால், அது ஒருவகை அவமரியாதைதான் அல்லது சரியில்லைதான்! ஆனால் "Yes , Please" என்று அவர் சொன்னார் என்றால், அவருக்குக் காப்பி கொடுக்கவில்லையென்றால் , அது அவமரியாதை! அதாவது '' வேண்டும் '' என்றுகூறினால்தான் காப்பி கொடுக்கவேண்டும். '' வேண்டாம் '' என்று கூறிவிட்டால் காப்பி கொடுக்கக்கூடாது! இது அங்குள்ள விருந்தோம்பல் கருத்தாடல் முறை! இதுபோன்று குறிப்பிட்ட மொழிச் சமூகத்தினருக்கு உரிய கருத்தாடல் மரபுகள் மீறப்பட்டால், உறவுகளே சில சமயம் முறிந்துபோகும். ஒருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, '' போய்விட்டுவருகிறேன்'' என்று மட்டும் ஒருவர் சொல்லாமல் திரும்பிவிட்டால், அவ்வளவுதான்! உறவுகள் முறியலாம். அதுபோல, '' வாருங்கள்'' என்று விருந்தினர் வீட்டில் நுழையும்போது, வீட்டுக்காரர் சொல்லாவிட்டால்... அவ்வளவுதான்!
ஆனால், இதே தமிழ்ச் சமுதாயத்தில், ஒரு இறப்பை ஒட்டி, அது நடைபெற்ற வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க ஒருவர் செல்லும்போது, வீட்டுக்காரர் '' வாருங்கள்'' என்று வரவேற்கவோ அல்லது அங்கிருந்து ஒருவர் திரும்பும்போது, வீட்டுக்காரரிடம் நாம் '' போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லவோகூடாது! அவ்வாறு சொன்னால், மேலும் பல இறப்புகள் அங்கு நடக்கட்டும் என்று நாம் நினைப்பதாக அமைந்துவிடும்!
இதுபோன்று , சில கருத்தாடல்கள் குறிப்பிட்ட மொழிச்சமுதாயத்தினரின் முதன்மைப் பண்பாட்டை... மரபைப் பொறுத்து அமைகின்றன. இதுபோன்ற முதன்மைக் கருத்தாடல் பண்புகளை ஒருவர் தான் பிறந்துவாழும் சமுதாயத்தில் , பிறந்து வளரும்போதே பெற்றுக்கொள்கிறார். ஆனால் இரண்டாம் வகையான கருத்தாடல் மரபுகள்... அமைப்புகள் ... பண்புகள் ஆகியவற்றை ஒருவர் தனது கல்வியின்போதும், பணிபுரியும் இடங்களிலும் பெற்றுக்கொள்கிறார் அல்லது கற்றுக்கொள்கிறார். இவை உலகப் பொதுமையானவை. அவற்றை வெளிப்படுத்தும் மொழித்தொடரின் அமைப்பும் தேர்ந்தெடுக்கும் சொல்களுமே மாறுபடும்! இதுபற்றிப் பின்னர் விளக்குகிறேன்!

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(15)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (15)
--------------------------------------------------------------------------------------------
மொழிபயிற்றலில் இலக்கணம், சொற்களஞ்சியம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதின் முக்கியத்துவத்தை நான் குறைத்துக்கூறவில்லை. ஆனால்... அவற்றை ஏன் கற்றுக்கொடுக்கிறோம் ? எவ்வாறு கற்றுக்கொடுக்கிறோம்? பயில்பவரின் கருத்துப்புலப்படுத்த நோக்கங்களுக்கு ... சிறந்த முறையிலான கருத்தாடல்களுக்கு... பயன்படும்வகையில் மொழிபயிற்றலை எவ்வாறு மேற்கொள்வது? இவைதான் நம்முன் உள்ள கேள்விகள்!

ஒரு எளிமையான எடுத்துக்காட்டு! தன் மகளுக்கு அம்மா சமையல் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சமையலுக்கு என்னென்ன பொருள்கள் தேவை .... அரிசி, பருப்பு, எண்ணெய், பிற மளிகைப் பொருள்கள், காய்கறிகள் .... இன்னும் பிறவற்றைப்பற்றியெல்லாம் அம்மா விளக்கமாகக் கூறவேண்டியது தேவைதான்! ஆனால் இவைபற்றியெல்லாம் அம்மா கற்றுக்கொடுப்பதற்கு காரணம்..... அந்தப் பொருள்களைப்பற்றிய வெறும் அறிவைக் கொடுக்கவா? இல்லை. அவற்றைக் கொண்டு ... தேவைக்கேற்றவாறு... வெவ்வேறு உணவுவகைகளைச் செய்வது என்பதைக் கற்றுக்கொடுக்கத்தானே! பலவகைப்பட்ட உணவுவகைகளை... பலவகை சுவைகொண்ட உணவுவகைகளை ... சமைப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பதுதானே! '' சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்பற்றி... மிக விளக்கமாக .... மகளுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டேன் '' என்று மட்டும் அம்மா சொல்வார்களா? '' என் மகளைக் கேளுங்கள், எது பச்சரிசி, எது புழுங்கல் அரிசி.... எது உளுந்தம்பருப்பு, எது துவரம்பருப்பு .... எது நல்லெண்ணெய், எது தேங்காயெண்ணெய் என்று கேளுங்கள்! டக் டக்கென்று பதில் சொல்வாள் '' என்று கூறி பெருமைப்படுவார்களா? அல்லது '' பலவகையான ... பலவகை சுவைகள் கொண்ட உணவுப்பொருள்களைச் செய்வதற்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்... எது வேண்டும் என்று கூறுங்கள்.. என் மகள் செய்து தருவாள்.. அதற்குத் தேவையான பயிற்சி அளித்திருக்கிறேன் '' என்று சொல்வார்களா?
அதுபோலத்தான் மொழிக்கல்வி ..மொழி பயிற்றல்! '' எனது மாணவருக்கு தமிழின் இலக்கணத்தையும் சொல் களஞ்சியத்தையும் பற்றிக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு என் மாணவர் எவ்வாறு திறமையாகக் கருத்தாடல் புரிகிறார், பாருங்கள் '' என்றுதானே ஆசிரியர் கூறிப் பெருமைப்படுவார்? எழுத்துக் கருத்தாடல் ... பேச்சுக் கருத்தாடல்... அவற்றில் பலவகைகள் ... கட்டுரைக் கருத்தாடல், கவிதைக் கருத்தாடல், கதைக்கருத்தாடல்... மடல்கருத்தாடல், சொற்பொழிவுக்கருத்தாடல், பட்டிமன்றக் கருத்தாடல், அறிவியல் கருத்தாடல், பாடம்கற்பித்தல் கருத்தாடல் ... என்று குறிப்பிட்ட மொழி பயில்பவருக்குத் தேவையான அத்தனைக் கருத்தாடல்களையும் தான் கற்ற இலக்கணம், சொற்களஞ்சியம் ஆகியவற்றைக்கொண்டு மேற்கொள்வதற்குக் கற்றுக்கொடுப்பதுதான் மொழிபயிற்றல்! வெறுமனே பாடங்களை நெட்டுரு செய்யவும்,,, 'இது வினையெச்சம், அது பெயரெச்சம்'' என்று சொல்களுக்கு இலக்கணக் குறிப்பு தரவும் பயிற்றுவிப்பது மொழிபயிற்றல் ஆகாது! அதை ''மொழியைப்பற்றிய கல்வி'' என்றுதான் கூறவேண்டும்.
எவ்வாறு சமையல் பயிற்றலில் .... வெவ்வேறு சுவையான உணவுப் பொருள்களைச் செய்வதற்கு ... அம்மா தன் மகளுக்குக் ( மகனுக்கும்தான்!!!) கற்றுக் கொடுக்கிறார்களோ, அதுபோன்றுதான் ஒரு மொழி ஆசிரியரும் தன் மாணவருக்குப் பலவகைக் கருத்தாடல்களை ... மொழிகொண்டு.... மொழிசாராக் கூறுகளையும் இணைத்து... மேற்கொள்ளக் கற்றுக்கொடுப்பதாகும்!
இதற்குத் தேவையானது... பலவகைக் கருத்தாடல்களின் அமைப்புகளை ஆய்வுசெய்வதாகும்! அவற்றிற்கிடையில் நிலவும் வேறுபாடுகளைக் கண்டறிவதாகும்! பயில்பவருக்கு மிகவும் தேவையான கருத்தாடல்கள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வதாகும். இலக்கிய மாணவருக்கும், அறிவியல் மாணவருக்கும் பொதுவாகச் சில கருத்தாடல்கள் இருக்கும்! அதேவேளையில் ... இலக்கிய மாணவருக்கு இலக்கியக் கருத்தாடல்களை மேற்கொள்வதற்கான குறிப்பான பயிற்சி தேவை. அறிவியல் மாணவருக்கு அறிவியல் கருத்தாடல்களை மேற்கொள்வதற்கான பயிற்சி தேவை! இருவருக்குமே குறிப்பிட்ட மொழியின் பொதுவான சொற்களஞ்சியம், இலக்கணம் பற்றிய அறிவு தேவை. அதேவேளையில் மாணவர்களுக்கு துறைகளுக்கான கலைச்சொல்கள், கருத்தாடல் பணபுகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கும். அவற்றைக் கணக்கில்கொண்டு, பயிற்றலை மேற்கொள்ளவேண்டும்.
ஆங்கிலமொழியோ, தமிழ்மொழியோ.... ஒரு குறிப்பிட்ட வகுப்புநிலைவரை.... பொதுவாகப் பயிற்றல் அமையலாம். ஆனால், சில வகுப்புகள் கடந்தபிறகு... அவரவர் துறைகளுக்கேற்ப,,,, மொழி பயிற்றல் அமையவேண்டும். அவ்வாறு அமைந்தால்தான், மாணவர் மொழிபயின்றததற்கே பொருள் உண்டு! தற்போது அதுபோன்று மொழிபயிற்றல் இல்ல! மொழிப்பாடங்கள் இல்லை! பின்னர் இதுபற்றி விளக்கமாகப் பார்க்கலாம்!

புதன், 3 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை...(14)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (14)
-----------------------------------------------------------------------------------------
ஒரு குறிப்பிட்ட மொழியை ஒருவருக்குக் பயிற்றுவிப்பது என்பது... பயில்பவர் தனது கருத்துப்புலப்படுத்தச் செயலை... அதாவது செயல்முனைப்புள்ள ஒரு கருத்தாடலை .... அந்தக் குறிப்பிட்ட மொழிவாயிலாக எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பயிற்றுவிப்பதே ஆகும் என்று முன்னர் கூறியுள்ளேன். அவரது கருத்தாடலுக்குக் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறவகையில்... அவர் மொழிவாயிலாகக் கருத்தாடலை வெற்றிகரமாக மேற்கொள்ளும் திறன் பெறவேண்டும்.

''எதற்காகக் கருத்தாடல் மேற்கொள்கிறோம்? ... யாரிடம் கருத்தாடல் மேற்கொள்கிறோம்?... எந்தச் சூழலில் மேற்கொள்கிறோம்? '' போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். பொதுவாக நாம் அனைவருமே இதில் கவனமாகத்தான் இருப்போம். எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் ஒரு உதவியைப் பெறவேண்டும் என்ற ஒரு சூழலில் .. அவரிடம் நாம் எப்போது உதவி கேட்டால் .... எப்படி உதவி கேட்டால்.... அந்த உதவியைப் பெறமுடியும் என்பதில் தெளிவாக இருப்போம் அல்லவா? தமிழில் ஒரு பழமொழி உண்டே... ''ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும்.. ..பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்!'' எனவே ஒரு மொழியின் சொற்களும், இலக்கணமும் தெரிந்தால்மட்டும் போதாது. நாம் கற்றுக்கொண்ட மொழி அறிவை வெளிப்படுத்துவதற்காக நாம் பேசவில்லை. நமது குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம்! சில சமயம் நண்பர்கள் சொல்வார்கள் '' அவர் பண உதவி கேட்டார். ஆனால் அவர் உதவி கேட்டமாதிரித் தெரியவில்லை.. ஏதோ என்னிடம் அவர் பணம் கொடுத்துவைத்த்துமாதிரி கேட்டார். இதுதான் உதவி கேட்கிற லட்சணமா? பிறகு எப்படி நான் பணம் கொடுப்பேன்? அவர் பேச்சே அவருக்கு எதிரி!''
எனவேதான்.. மொழிபயிற்றல் என்பது நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட மொழியின் வழியே ...பல்வேறுவகையான கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுப்பதேயாகும்! ஒரு எழுத்தாளருக்குத் தேவை ... இலக்கியக் கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதேயாகும்! ஒரு ஆசிரியருக்குத் தேவை , வகுப்பறைக் கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொண்டு, மாணவர்களுக்கு அறிவை எவ்வாறு அளிப்பது என்பதாகும்! ஒவ்வொரு கருத்தாடலுக்கும் ஒவ்வொரு அமைப்பு உண்டு! பட்டிமன்றக் கருத்தாடல் வேறு... சொற்பொழிவுக் கருத்தாடல் வேறு! கருத்தரங்கக் கருத்தாடல் வேறு! வகுப்பறைக் கருத்தாடல் வேறு! அறிவியல் கருத்தாடல் வேறு. இலக்கியக் கருத்தாடல் வேறு. ஊடகக்கருத்தாடல் வேறு. திரைப்படக் கருத்தாடல் வேறு!
ஒரு இலக்கியப் படைப்பாளி ... எடுத்துக்காட்டாக ஒரு சிறந்த நாவலாசியர் நாவல்களை எழுதுவதில் மிகத் திறமையாக இருக்கலாம். அவரது நாவல்கள் மிகச் சிறந்த நாவல்களாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவரது நாவல்கள் திரைப்படங்களுக்கு ஏற்ற கருத்தாடல்களாக அமைந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எனவேதான்... அவரது நாவல் கதையைத் திரைப்படத்திற்கு ஏற்ற கருத்தாடல்களாக மாற்றுவதற்கு... திரைக்கதை ஆசிரியர் ஒருவர் தனியாகத் தேவைப்படுகிறார். எழுத்துவழியே ஒரு கதை அல்லது கருத்தை வெளிப்படுத்தும் கருத்தாடல் வேறு. அதையே திரை ஊடகத்தின் வழியே வெளிப்படுத்தும் கருத்தாடல் வேறு! பாடல், ஆடல், உரையாடல், செயல் , ஒளிப்பதிவு போன்ற பல ஊடகங்களின்வழியே வெளிப்படுவதே திரைப்படக் கருத்தாடல்! இன்னும் சொல்லப்போனால்... திரைப்படக் கருத்தாடல்களுக்கும் சின்னத்திரைக் கருத்தாடல்களுக்கும் இடையில்கூட பல வேறுபாடுகள் உண்டு!
இலக்கியக் கருத்தாடலுக்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். '' சீதையை நான் கண்டேன்'' என்றுதான் நான் எழுதியிருப்பேன்! ஆனால் படைப்பாளியோ '' கண்டேன் சீதையை! '' என்று எழுதுகிறார். எழுவாயும் பயனிலையும் இடம் மாறி அமையும்போது... அது வெறும் சொற்றொடர் இடம்மாற்றம் இல்லை! அனுமன் சீதையைக் கண்டபோது, எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்திருக்கிறான் என்பதைப் படைப்பாளி வெளிப்படுத்துகிறார்... புலப்படுத்துகிறார்! அதனால்தான் கம்பர் கவிச் சக்கரவர்த்தியாக இருக்கிறார். வெறும் கதையோ அல்லது கற்பனையோ மட்டும் ஒருவரை இலக்கியப் படைப்பாளியாக மாற்றிவிடுவதில்லை! இலக்கியக் கருத்தாடலுக்கு அவர் பயன்படுத்தும் சொல்லாட்சி... மொழிநடை ... தனிச் சிறப்புவாய்ந்தவை! '' திலீபா, உன்னை நாங்கள் புதைக்கவில்லை ... புதிய ஈழத்திற்காக விதைக்கிறோம்!'' இதுவே இலக்கியக் கருத்தாடல் நடை! ''புதை '', ''விதை'' இந்த இரண்டு சொல்களும் எவ்வளவு பெரிய கருத்தை முன்வைக்கிறது! நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற சொற்களையும், இலக்கணத்தையும்தான் படைப்பாளியும் பயன்படுத்துகிறார். அவரொன்றும் '' அவன் வந்தார்'' என்று எழுதமாட்டார்! ''நான் நேற்று வருவேன்'' என்று எழுதமாட்டார். ஆனால் அவற்றை அவர் பயன்படுத்துவதில்தான்.. அவர் எழுத்து ஒரு இலக்கியமாகிறது!
சிலவேளைகளில் படைப்பாளி இலக்கணவிதியை மீறுவார். ஆனால் அவ்வாறு அவர் மீறுவதற்குக் காரணம்... அவருக்கு இலக்கணம் தெரியாதது என்பது இல்லை! '' அவள் வந்தான் '' என்று எழுதுகிறார் என்று கொள்வோம். அதற்கு ஒரு காரணம் இருக்கும். ''வந்த அந்தப் பெண்'' ஆண்மைக்குரிய வீரத்துடன் வந்தாள்'' என்பதைக் குறிப்பதற்காக அவர் எழுதியிருக்கலாம். பெயர்ச்சொல்களை வினைச்சொல்களாகப் பயன்படுத்துவது... வினைச்சொல்களைப் பெயர்ச்சொல்களாகப் பயன்படுத்துவது .. இவையெல்லாம் இலக்கியக் கருத்தாடலுக்குரிய .... இலக்கண விதிகளை மாற்றிப் பயன்படுத்தப் படைப்பாளிக்கு உள்ள உரிமத்தைக் காட்டக்கூடியவையாகும்! சில இடங்களில் படைப்பாளி நாம் அனைவரும் எதிர்பார்க்கிற ஒரு சொல்லுக்குப் பதிலாக... வேறொரு சொல்லைப் பயன்படுத்தலாம். கவிஞர் கனிமொழி அவர்களின் ஒரு வரி ... முழுமையாக நினைவில் இல்லை.. '' சாதிவிட்டு சாதி திருமணம் செய்துகொண்டதற்காக.. இன்றளவும் தன் தங்கையை ஒதுக்கிவைக்கும் ?????'' . நாம் அனைவரும் எதிர்பார்ப்பது ... ''அண்ணன்'' என்ற சொல்! ஆனால் அவர் பயன்படுத்தியது '' என் தாத்தா''! மூன்று தலைமுறைகள் கடந்தும் தன் தாத்தா இன்னும் மாறவில்லை என்ற ஒரு கருத்தைப் புலப்படுத்துவதற்காக அவர் அதைக் கையாண்டுள்ளார்!
மொழிபயிற்றலில் இலக்கியங்களின் பங்கைப்பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன்!

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... (13)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (13)
---------------------------------------------------------------------------------------------
கருத்தாடலில் மொழிசார் கூறுகளும் ( verbal means), மொழிசாராக் கூறுகளும் ( non-verbal means) இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பதுபற்றி முன்னரே கண்டோம். முகபாவம், கை கால் உடம்பு அசைவுகள் (body language), படங்கள், அட்டவணைகள் இவையெல்லாம் அடங்கும். கருத்தாடல் உயிரோட்டமாக இருக்கவேண்டுமென்றால்... மொழிசார் கூறுகளோடு ( பேச்சொலி, எழுத்து, சொல், தொடர், வாக்கியம், பத்தி போன்றவை) மொழிசாராக் கூறுகளைத் தேவையான அளவுக்கு இணைத்துப் பயன்படுத்துவது மிக இன்றியமையாதது.

இன்னும் சொல்லப் போனால்... ஒருவர் மற்றொருவரோடு தொலைபேசியில் கருத்தாடல் நிகழ்த்தும்போதுகூட.... முகபாவங்களையும் கை, உடல் அசைவுகளையும் இணைத்துப் பேசுவதை நாம் பார்க்கலாம். இந்த அசைவுகளையெல்லாம் மறுபுறம் கேட்பவர் பார்க்கமுடியாவிட்டாலும்..... அதைப்பற்றிப் பேசுபவர் பொருட்படுத்தாமல்.... கை கால்களை ஆட்டிக்கொண்டு, முகபாவங்களை மாற்றிக்கொண்டு பேசுவார். அப்போதுதான் அவருக்கு மற்றவரிடம் நேரில் பேசுவதுபோல இருக்கும்! கருத்தாடல் உயிரோட்டமாக இருக்கும்! இப்போதெல்லாம் வீடியோ தொலைபேசி, ஸ்கைப் போன்றவை அறிமுகமாகிவிட்டன! எனவே இருபுறமும் மொழிசார் கூறுகளோடு மொழிசாராக் கூறுகளையும் கண்டு உணரமுடிகிறது! .
மொழிசாராக் கூறுகளைப் பயன்படுத்தும்போது - குறிப்பாக எழுத்துக் கருத்தாடல்களில் பயன்படுத்தும்போது - எந்த அளவு பயன்படுத்தவேண்டும் என்பது மிக முக்கியமானது. மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தைகளுக்கு வீடுகளிலோ அல்லது பள்ளிகளிலோ கதைகளைக் கூறும்போது.... முழுமையாகப் படங்களாகவே அவை அமைந்திருக்கும். அதற்கு அடுத்த நிலையில்.... படங்களோடு சிறு சிறு மொழித்தொடர்களையும் இணைத்து... கதைகள் அல்லது பிற பாடங்கள் கூறப்படும்.. உயர்வகுப்புகளுக்கு மாணவர்கள் போகப் போக... படங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் மொழிசாராக் கூறுகள் இல்லாமல்கூட பாடங்கள் அமையலாம். இருப்பினும் பாடங்களின் ஊடே.... ஆங்காங்கே மிக முக்கியமான படங்கள், அட்டவணைகள் அமையும்.
குறிப்பாக, அறிவியல் பாடங்களில் இவை அதிகமாகவே அமையலாம். மிக உயர்ந்தநிலை ஆய்வுகளில் மொழிசாராக் கூறுகளின் அளவு மிகக் குறைவாகக் காணப்படலாம். இங்குகூட... ஒரு அறிவியல் விதியை உயர்நிலை ஆய்வாளர்களுக்குக் கூறும்போது, படங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் அதே அறிவியல் விதியை இளநிலை மாணவர்களுக்கு விளக்கும் பாடங்களில், படங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும். பொதுமக்களுக்காக எழுதப்படும் அதே அறிவியல் பாடங்களில் படங்கள் மிக அதிகமாகவே காணப்படும். யாருக்கான கருத்தாடல்... எந்த அறிவுநிலையில் உள்ளவர்களுக்கான கருத்தாடல் ... என்பதைப் பொறுத்தே இது அமையும்..
இங்கு ஒன்றைக் கூறவிரும்புகிறேன்.... திரைப்படப் பாடல்களைக்கூட... வெறும் பாடலாகக் காதில் கேட்கும்போது... அதனுடைய பொருளை அல்லது அது மறைமுகமாக உணர்த்தும் பொருளை முழுமையாக உணரமுடியாது. ஆனால் அதேவேளையில் அதைத் தொலைக்காட்சியில் --- ஒலி ஒளி காட்சியாகப் பார்க்கவும். கேட்கவும் செய்யும்போது.... நம்முடைய புரிதல் சற்று விரிவடைந்திருக்கும்!
இதழ்கள், நாவல் , சிறுகதைகள் ஆகியவற்றிலும் ஆங்காங்கே ஓவியர்கள் படங்களை இடுகிறார்கள். படைப்பாளிகள் முன்வைக்கிற பாத்திரங்களின் பண்புகளைக் காட்டும் வகையில் அவர்கள் ஓவியங்களைத் தீட்டுகிறார்கள். மொழிசாராக் கூறுகள்மூலம்மட்டுமே... மிகப் பெரிய கருத்துகளை அல்லது உணர்வுகளை வெளிக்காட்டுகிற ஒருவகைக் கருத்தாடலே கார்ட்டூன்கள்! மொழித் தொடர்கள் இல்லாமலேயே .... தாங்கள் கூறவருகிற கருத்துகளைக் கார்ட்டூன் படைப்பாளிகள் கார்ட்டூன் படங்கள் மூலமாகவே தெளிவாகக் கூறிவிடுகிறார்கள்! எனவே மொழித் தொடர்களைப் பயன்படுத்தினால்தான்... கருத்தாடல் என்று நினைத்துவிடக்கூடாது. குழந்தைகளுக்கான படக்கதைகளும் , கார்ட்டூன்களும்கூட கருத்தாடல்கள்தான்! படவுரு (Icon), முத்திரைச் சின்னங்கள்கூட (logo) கருத்தாடல்கள்தான்! அவையும் சில கருத்துகளை வெளிப்படுத்தவே ... குறிப்பாக வெளிப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன! இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள குறியீட்டியல் ( Semiotics) நூல்களைப் பார்க்கலாம்.
மொழிசாராக் கூறுகளின் முக்கியத்துவத்தை நாம் உணருகிற அதேவேளையில்... கருத்தாடல்களின் பண்பு அல்லது இயல்பின் அடிப்படையில் .... ஒரு குறிப்பிட்ட கருத்தாடலில் .... மொழிசாராக் கூறுகளை .... எந்த அளவு பயன்படுத்தவேண்டும்... எங்கெங்குப் பயன்படுத்தவேண்டும்... எந்த வகை மொழிசாராக்கூறுகளைப் பயன்படுத்தவேண்டும் என்பதில் கருத்தாடலில் ஈடுபடுகிறவர் தெளிவாக இருத்தல்வேண்டும். '' அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!' ! இது இங்கு எனக்கும் பொருந்தும்! உரையை முடிக்கிறேன்!

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (12)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (12)
------------------------------------------------------------------------------------------
சென்ற கட்டுரையில் கருத்தாடலை எழுதும்போது அது பனுவலாக மாற்றப்படுவதும், பின்னர் அந்தப் பனுவலானது படிப்பவர்களால் அல்லது பாடம் நடத்தும் ஆசிரியர்களால் கருத்தாடலாக மாற்றப்படுவதுபற்றியும் பார்த்தோம்.

பனுவலைக் கருத்தாடலாக மாற்றி... அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கு... ஒருவருக்கு மிகவும் தேவைப்படுவது.... அதற்குத் தேவையான பின்புல அறிவு ( Background knowledge) ! ஒரு உயர்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி மாணவருக்கு .... ஆகாயவிமானம்பற்றியோ அல்லது ஏவுகணைபற்றியோ விளக்க விரும்பும் நூலாசிரியர்... புவிஈர்ப்புவிசை என்றால் என்ன என்பதைக் கூறவேண்டியதில்லை. ஏனென்றால்... முந்தைய வகுப்புகளில் அதுபற்றி மாணவர்கள் கற்றிருப்பார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்புப் பள்ளி மாணவர்களுக்கு மரத்திலிருந்து ஏன் பழம் கீழே விழுகிறது என்பதைக் கற்றுக்கொடுக்கும்போது.... புவிஈர்ப்புவிசை என்றால் என்ன வெளிப்படையாக நூலாசிரியர் விளக்கவேண்டும். ஏனென்றால் அந்த நிலை மாணவர்களுக்கு முதன்முதலாக அப்போதுதான் அதுபற்றிய அறிவே கொடுக்கப்படுகிறது. இங்கு நாம் கவனமாகப் பார்க்கவேண்டியது.... ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிற அந்த அறிவை... மீண்டும் உயர்நிலை மாணவர்களுக்கு நூலாசிரியர் நூலில் எழுதமாட்டார்... எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால்... ''இதுகூடத் தெரியாமலா நாங்கள் உயர்நிலை வகுப்புக்கு வந்திருக்கிறோம் '' என்று மாணவர்கள் கூறுவார்கள். அதேவேளையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த அறிவு இருக்கும் என்று நினைத்துக்கொண்டு... நூலாசிரியர் எழுதாமல் விட்டுவிட்டால்.... அந்த நிலை மாணவர்களுக்கு ஒன்றும் புரியாது. எனவே கருத்தாடலை மேற்கொள்ளும்போது.. எதிரில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும் , என்ன தெரியாது என்பதுபற்றிய ஒரு தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.
இந்த இடத்தில் .... நான் முன்னரே குறிப்பிட்டிருந்த கிரைஸ் என்ற சமூகமொழியியல் அறிஞர் கூறியுள்ள ''கூட்டுறவுக் கொள்கைகள்'' ( Principles of Co-operation) பற்றி விளக்கமாகக் கூறவேண்டியுள்ளது. நாம் ஒருவரிடம் கருத்தாடல் புரியும்போது.... ஒன்றை விளக்கும்போது நான்கு மிக முக்கியமான கொள்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்தக் கருத்தாடல் வெற்றிபெறும்.
முதலாவது.... பேச்சுரை அல்லது எழுத்துரையின் அளவு ( Quantity) ஆகும். நம் உரையைக் கேட்பவருக்கு அல்லது படிப்பவருக்கு... நன்கு தெரிந்திருக்கும் சில செய்திகளைக் கூறவேண்டிய தேவையில்லை. ஒரு தமிழாசிரியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது....'' தமிழில் 12 உயிர் எழுத்துகள் உண்டு... 18 மெய் எழுத்துகள் உண்டு'' என்று கூறத் தொடங்கினால், அவர் என்ன கூறுவார்? ''இது தெரியாமலா நான் தமிழாசிரியராக இருக்கிறேன்? நீங்கள் சொல்ல வருகிற புதிய செய்திகளைச் சொல்லுங்கள்'' என்று கூறுவார். மீண்டும் நாம் அதே மாதிரிப் பேசிக்கொண்டிருந்தால்... அவர் நம்முடன் கருத்தாடலை விரும்பமாட்டார். கருத்தாடல் தடைபட்டுவிடும்.
இரண்டாவது ... நமது உரையின் நம்பகத்தன்மை ( Reliability) . '' இவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும். சரியாகத்தான் இருக்கும் '' என்று நம் பேச்சைக் கூறுபவர் நம்பவேண்டும். அப்போதுதான் அவர் நம்மிடம் உரையைத் தொடருவார். இல்லையென்றால் .. '' இவர் சொல்வதில் உண்மை பொதுவாக இருக்காது'' என்று மனதில் கருதி. நம்முடன் கருத்தாடலைத் தொடர விரும்பமாட்டார்.
மூன்றாவது... கூறுகிற செய்திகளுக்கான இடையிலான தொடர்புகள் ( Relevancy) .. எதைப் பற்றிப் பேசுகிறோமோ... அந்தப் பொருளுக்குத் தொடர்பில்லாத செய்திகளைக் கூறிக்கொண்டிருக்கக்கூடாது. 'அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் ?'' என்று கேட்பவர் நினைத்துவிடக்கூடாது! அவ்வாறு நினைத்துவிட்டால்... கருத்தாடல் தடைபட்டுவிடும்!
நான்காவது.... மிக மிக முக்கியமான ஒன்று! நம்முடைய கருத்தாடலைக் கேட்டுக்கொண்டிருப்பவர் அல்லது வாசித்துக்கொண்டிருப்பவர்பற்றிய நமது கண்ணோட்டம்... அவருடன் பேசுகிற முறை ( Manner) . ''எதிரில் இருப்பவருக்கு ஒன்றும் தெரியாது... சூனியம்... முட்டாள்.. நமக்குத்தான் எல்லாம் தெரியும் '' என்று நினைத்துக்கொண்டு, நாம் பேச்சைத் தொடர்ந்தால்.... ஆணவத்தோடு ( arrogance) பேச்சைத் தொடர்ந்தால்.... அவருக்கு நாம் பேசுகிற பொருள்பற்றிய போதிய அறிவு இல்லாமல் இருந்தாலும்.... நம்மிடம் அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஆவல் இருந்தாலும்... நமது ஆணவப் பேச்சினால்... அவர் நம்முடன் கருத்தாடலைத் தொடரவிரும்பமாட்டார். மாறாக, '' நான் முட்டாளாக இருந்துவிட்டுப் போகிறேன். அதற்காக நீங்கள் என்னை முட்டாளாக நினைத்துக்கொண்டு பேசுவதை நான் கேட்கத் தயாரில்லை '' என்று கருத்தாடலை முறித்துக்கொள்வார். பல இடங்களில் இதுபோன்ற சூழல்களை அனைவரும் பார்த்திருக்கலாம்.
எனவே, இருவரிடையே பேச்சுரையோ அல்லது எழுத்துரையோ ... எந்த ஒரு கருத்தாடலாக இருந்தாலும், மேற்குறிப்பிட்ட ... அளவு, நம்பக அல்லது உண்மைத் தன்மை, கருத்துத்தொடர்பு, கருத்தாடல்புரியும் முறை என்ற நான்கு பண்புகளையும் நமது கவனத்தில் கொள்ளவேண்டியது மிக மிக இன்றியமையாதது!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India